வியாழன், 1 மே, 2014

இந்தியர்களை பட்டினியால் சாகடித்த கவர்னர் மன்றோ ! கொங்குநாடும் மன்றோவும் Jeyamohan.


சென்னையில் கோட்டைக்குள் தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலை சுற்றுலா அடையாளங்களில் ஒன்று. அச்சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்போது சிலை இருக்கிறதா என்று தெரியவில்லை.புகழ்பெற்ற பிரிட்டிஷ் சிற்பியான பிரான்சிஸ் சாண்ட்ரே [ Francis Leggatt Chantrey] யால் செதுக்கப்பட்ட அழகிய சிலை இது. மன்றோ குதிரையின் வெறும் முதுகில் பயணம் செய்ய விரும்பியவர் என்பதனால் சேணமற்றகுதிரைமேல் அமர்ந்திருப்பதாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மன்றோ இருந்தபோதே அமைக்கப்பட்ட சிலை என்பதனால் குதிரை கால்களை மண்ணில் ஊன்றி நின்றிருக்கிறது.அனறைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சீருடையின் கம்பீரமும் மன்றோவின் ஆளுமையின் நிமிர்வும் வெளிப்படும் சிலை இது

சர் தாமஸ் மன்றோ பிரிட்டனில் கிஸாஸ்கோ நகரில் 1761ல் பிறந்தவர். தந்தை அலகஸாண்டர் மன்றோ ஒரு வணிகர்.தாய் மார்கரெட் ஸ்டார்க். அவர்களின் குடும்பம் புகையிலை வணிகம் செய்துவந்தது. தாய்வழியில் தாத்தா மருத்துவர். சிறுவயதில் அம்மை வந்து அழகிழந்த மன்றோ அப்போதே செவித்திறனையும் பெரும்பாலும் இழந்திருந்தார்.
திறமையான மாணவராகவும் இலக்கியத்திலும் பொருளியலிலும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார் மன்றோ. அவர் மாணவராக இருந்தபோது குடும்ப வணிகம் நொடித்தது. அவர் சம்பாதித்து கடன்களை அடைக்கவேண்டுமென்ற நிலை வந்தது
1779ல் தன் பதினெட்டு வயதில் பிரிட்டிஷ் படையில் வீரனாகச் சேந்து இந்தியாவுக்கு கப்பலேறினார் மன்றோ.சென்னைக்கு வந்து சேர்ந்த அவர் மைசூர் அரசர் திப்பு சுல்தானுக்கு எதிரான இரண்டாம் மைசூர் போர், மூன்றாம் மைசூர் போர்களில் பணியாற்றினார். திப்புவை வென்றபின் திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்த பாரமகால் பகுதியை நிர்வாகிக்கும் குழுவில் இருந்தார். அங்கே சிவில் நிர்வாகத்தின் அடிப்படைகளைப் பயின்றார். பின்னர் அன்றைய சென்னை ராஜதானியில் சேலம் கோவை பகுதிகளில் ஆட்சியராக பணியாற்றினார்.கர்நாடகத்தில் கனரா பகுதிகளிலும் பின்னர் ஹைதராபாத் நைஜாமின் ஆட்சிக்கு கீழே இருந்த பகுதிகளிலும் ஆட்சியராகப் பணியாற்றினார்

இங்கிலாந்து திரும்பிய மன்றோ அங்கெ இந்தியாவில் செய்யவேண்டிய நிலச்சீர்திருத்தங்களை பற்றி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் இருந்தார். 1817ல் மராட்டிய பேஷ்வாக்களுக்கு எதிரான போரை தலைமைவகித்து நடத்தி அவர்களைத் தோற்கடித்தார். 1820 முதல் பின்னர் சென்னையின் கவர்னராக திரும்பி வந்தார். சென்னை கவர்னராக அவரது சிறப்பான பணியைக் கருத்தில்கொண்டு அவரை கவர்னர் ஜெனரலாக நியமிப்பதற்கான பரிந்துரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்தது.
அப்போது ஆந்திராவில் இருந்த கூத்தி என்ற கோட்டைக்குச் சென்ற மன்றோ உடல்நலம் குன்றி 1827ல் தன்னுடைய 65 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது உடல் கூத்தியில் இருந்த ஆங்கிலேயருக்கான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது
சர் தாமஸ் மன்றோ இரு விஷயங்களுக்காக இன்று நினைவுகூரப்படுகிறார். தென்னிந்தியாவில் ரயத்துவாரி நில வரி வசூல் முறையை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தியவர் அவர். ‘ரயத்துவாரியின் தந்தை’ என்று அவர் கொண்டாடப்படுகிறார். இரண்டாவதாக அவர் இந்தியாவில் பணிக்கு வந்த காலம் முதல் தொடர்ச்சியாக தன்னுடைய அன்றாடச்செயல்பாடுகளை விரிவாக கடிதங்களாக தன் குடும்பத்தினருக்கு எழுதிக்கொண்டிருந்தார். தன் நாட்குறிப்புகளையும் முறையாக பதிவுசெய்தர். பிரிட்டிஷ் ஆட்சிமுறை பற்றிய முழுமையான ஒரு சித்திரத்தை அளிக்கக்கூடியவையாக அவரது எழுத்துக்கள் கருதப்படுகின்றன. அவரது இலக்கியப்பயிற்சி காரணமாக அவை அழகிய நடையில், நுண்ணிய தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளன
*
கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ என்ற நூல் இடைப்பாடி அமுதன் அவர்களால் அவரது அனுராதா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இது தாமஸ் மன்றோவின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பொதுவாகவும், கொங்குநாட்டில் அவர் பணியாற்றியகாலகட்டத்தைக் குறிப்பாகவும் சித்தரிக்கும் ஒரு நூல். வழக்கமான தமிழ் முறைப்படி முழுமையான வரலாற்று நோக்குக்குப் பதில் ‘பாட்டுடைத் தலைவனை’ புகழ்ந்து முன்வைக்கும் கோணம் கொண்டது. ஆயினும் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களும் மன்றோவின் கடிதங்களும் இணைந்து அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் பற்றியும் , அன்றைய அதிகாரிகளுக்குள் இருந்த உறவுகள் குறித்தும், அவர்களின் குடும்பச்சூழல் குறித்தும் ஒரு நல்ல சித்திரத்தை அளிக்கின்றன.
சர் தாமஸ் மன்றொவின் ஆளுமை கவர்ச்சிகரமானது. அன்றைய பிரிட்டிஷாரின் பொதுவான இயல்புக்கு இணங்க அவர் சாகசவிருப்புடையவர். புதிய நிலங்களையும் புதிய அறைகூவல்களையும் விரும்புபவர். அவருடைய சொந்த ஊருக்கு முற்றிலும் மாறுபட்ட தென்னிந்திய சூழலின் கடும் வெப்பத்தை அவர் துணிவுடன் எதிர்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு தகவமையவும் செய்தார். பின்னர் அவருக்கு ஊட்டியின் குளிரே ஒத்துவரவில்லை.
தன் ஆட்சிக்கு கீழே வந்த புதிய நிலப்பரப்பின் புவியியலையும் அங்குவாழும் மக்களின் பண்பாட்டையும் பொருளியலையும் புரிந்துகொள்ள மன்றோ தொடர்ந்து முயற்சி எடுத்தார். தமிழையும் தெலுங்கையும் கன்னத்தையும் கற்றுக்கொண்டு மக்களுடன் நேரடியாக உரையாடினார். குதிரையில் ஏறி மலைகளிலும் பொட்டல்களிலும் கைவிடப்பட்டு கிடந்த கிராமப்புறங்களிலும் தொடர்ந்து பயணம்செய்துகொண்டே இருந்தார். ஆகவே அவரது குறிப்புகள் பெரும்பாலும் நேரடிக் களஅனுபவங்களால் ஆனவை.
மன்றோ நெடுங்காலம் மக்களால் நினைவுகூரப்பட்டமைக்கு முக்கியமான காரணம் அன்றைய பெரும்பாலான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மாறாக அவர் எளிய மக்களுடன் நெருக்கமாக பழகக்கூடியவராகவும் அவர்களின் அன்றாடத் துயரங்களை அறிந்தவராகவும் இருந்தார் என்பதுதான். அவரிடம் மக்கள் தங்களுடைய இன்னல்களையும் துயர்களையும் முறையிட்டபடியே இருந்தனர். அவர் முடிந்தவரை அவர்களுக்கு நீதிகிடைக்க முயன்றார். நிலப்பிரபுக்களாலும் குட்டி ஆட்சியாளர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஒரு இரட்சகனாகவே தெரிந்தார்
இந்நூலில் மன்றோவுக்கு தன் தாய்,தங்கை மற்றும் குடும்பத்தினரிடமிருந்த நல்லுறவு விரிவாகவே வெளிபடுகிறது. கடைசிக்காலத்தில் மைந்தகளின் மறைவு மன்றோவை பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.அவருக்கு தோட்டக்கலையில் பெரும் ஆர்வம் இருந்தது. செல்லுமிடமெல்லாம் தோட்டங்களை உருவாக்குவதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்
அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி என்பது ஊழலால் புழுத்துப்போயிருந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் நோயும் வெப்பமும் மிக்க இந்தியாவுக்கு பணிக்கு வருவதற்கு ஊழலே முத்ற்பெரும் கவர்ச்சியாக இருந்தது. மன்றோ ஊழலுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார். அவரது கடிதங்களில் ஏராளமான வழக்குகளில் அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிப்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். [ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் மேலிடத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படவில்லை]
மன்றோ தன் தாய்க்கு எழுதிய கடிதங்களில் செலவுக்குள் வாழ்வதற்காக அவர் எடுக்கும் சிக்கன நடவடிக்கைகளைப்பற்றியும் அவர் அனுப்பும் பணத்தைக்கொண்டு அவரது குடும்பம் எப்படி கடன்களை அடைக்கவேண்டும் என்பதைப்பற்றியும் எழுதியிருக்கிறார். ஒரு சாகசவீரனின் மனநிலைகொண்ட மன்றோ பெரும்பாலும் திறந்த வெளிகளில் கூடரங்களில் தங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். சுகபோகங்களிலும் விருந்துகளிலும் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை

இத்தனை விஷயங்களையும் கொண்டு மன்றோவை ஒரு நாயகனாக காட்டமுயல்கிறது இந்நூல். ஆனால் ஒரு முழுமையான வரலாற்று நோக்கு கொண்டவர் மன்றோவைப்பற்றி மேலதிக வினாக்களை எழுப்பிக்கொள்வார். அதற்கான சான்றுகளும் இந்நூலிலேயே தொடர்ந்து வருகின்றன. மன்றோவின் அலுவல்சாதனைகளாக இந்நூல் குறிப்பிடுவது அவர் மேலும் மேலும் அதிக வரியை வசூலித்து பிரிட்டிஷ் அரசுக்கு அளித்தார் என்பதுதான். பிறர் குறைவான வரிவசூல் செய்யும் இடத்தில்கூட அதிக வரியை அவரால் திரட்டமுடிந்தது. பல இடங்களில் அவர் வரிவசூல்தொகையை இரட்டிப்பாக்கியிருக்கிறார். சாதாரண சிப்பாயாக வந்த அவர் கவர்னர் பதவிவரை சென்று சர் பட்டமும் பெற்றமைக்கான காரணம் இந்தத் திறமைதான்
அதிகபட்ச வரிவசூலுக்காக மன்றோ கண்டுபிடித்ததுதான் ரயத்துவாரி முறை. சுருக்கமாக அதை இப்படி விளக்கலாம். அன்றைய சூழலில் நிலம் அளவிறந்தது. அது அளவிடப்பட்டு தனிமனிதர்களுக்குச் சொந்தமான ‘சொத்தாக’ ஆக்கப்படவில்லை. நிலம் கிராமத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. அனைத்து கிராமத்தினருக்கும் அதில் ஏதோ ஒருவகையில் உரிமை இருந்தது. அக்கிராமத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாடுகள் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ப, தேவையான நிலம் விவசாயம் செய்யப்பட்டது. விளைச்சலில் நேரடியான விவசாயிக்களுக்கு பங்கிருந்தது போலவே விவசாயத்துடன் தொடர்பற்ற கொல்லர்கள் ,ஆசாரிகள் போன்ற கைவினைஞர்கள் பூசாரிகள் , ஊர்க்காவலர்கள், கலைஞர்கள், புலவர்கள் போன்ற சேவையளிப்பவர்களுக்கும் பங்கிருந்தது. விளைச்சலில் ஒருபங்குதான் வரியாக வரி அளிக்கப்பட்டது.

ரயத்துவாரி என்பது மொத்தநிலத்தையும் அளந்து தனிநபர்களுக்கு அளித்து அவர்களின் உடைமையாக ஆக்குவது. அவ்வுரிமையாளர்களிடமிருந்து கட்டாயமாக வரிவசூல் செய்வது. [ரயத் என்றால் நில உடைமை] அதாவது விளைச்சலுக்கல்ல நிலத்துக்கே வரி. தரிசுநிலத்துக்கும் வரி உண்டு. இவ்வாறு பிரிட்டிஷாரின் நிலவரி பலமடங்காகியது. கிராமத்தின் உற்பத்திமுறை பெரும்பாலும் அழிந்தது.
தொடர்ச்சியான வரிவசூல் வழியாக இந்தியக்கிராமங்களில் எஞ்சியிருந்த உபரியை முழுக்க உறிஞ்சி எடுத்து கொண்டுசென்றது பிரிட்டிஷ் அரசு. அதன் விளைவாகவே இங்கே பெரும் பஞ்சங்கள் வந்தன. இன்று பலநூல்களின் வழியாக தொடர்ந்து நிரூபிக்கபப்ட்டு வரும் உண்மை இது. மன்றோ ஆட்சிசெய்த பகுதிகளில்தான் அவரது ஆட்சிக்காலத்தின் இறுதியில் பிரம்மாண்டமான பஞ்சம் தாக்கி லட்சக்கணக்கில் மக்கள் செத்து அழிந்தார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். மன்றொ தன் திறமையால் வசூலித்துக்கொடுத்து நல்லபெயர் பெற்ற அந்த வரி என்பது அம்மக்களின் கடைசிச் சேமிப்பு என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்
மன்றோ இந்தியர்களுக்குள் இருந்த சாதிப்பூசல்களை பெரும்பாலும் நியாயமாகவே தீர்த்துவைக்கிறார். சென்ற இடங்களில் மக்களுக்கு அவசியமான குடிநீர் வசதிகள் போன்றவற்றை செய்ய முயற்சி எடுத்துக்கொள்கிறார். பாசன வசதிகள் முறையாக நிகழவேண்டுமென்பதில் தனிக் கவனம் எடுத்துக்கொள்கிறார். மதசமபந்தமான விஷயங்களில் பெரும்பாலும் தலையிடாக்கொள்கையை கடைப்பிடிக்கிறார். அவரிடம் நேரடியாக வரிச்சுமை பற்றி முறையிடப்படுமென்றால் கருணையும் காட்டுகிறார். தன்னளவில் அவர் ஒரு நீதிமானாகவே நடந்துகொண்டிருக்கிறார். அவர் தன் அன்னைக்கு எழுதிய கடிதங்கள் அதையே காட்டுகின்றன
ஆனால் மன்றோ இந்தியாவை புரிந்துகொண்டதனால் இந்தியாவை மேலும் ஆழமாகச் சுரண்ட கற்றுக்கொண்டார். அவரது அனைத்து வெற்றிகளும் இந்தியாவின் செல்வத்தை பிரிட்டிக் கஜானாவுக்குக் கொண்டுசெல்வதற்காக மட்டுமே பயன்பட்டன. அவர் இந்தியாவிற்குச் சேவை செய்தவர் அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திறமையான அலுவலர் மட்டுமே
மன்றோ சிலை அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது சென்னையின் அறிவுஜீவிகளில் ஒருசாரார் மன்றோ இந்தியாவை பெரிதும் நேசித்தவர் என்ற சித்திரத்தை உருவாக்கவும் அவர் இந்தியாவுக்கு நன்மைசெய்தவர் என்று காட்டவும் அவரது உதிரி வரிகளை மேற்கோள்காட்டி ‘தி இந்து’ போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து எழுதினர். பெரும்பாலும் அந்த மனநிலையிலேயே எழுதப்பட்டுள்ள இந்நூல் அது முன்வைக்கும் தரவுகளினாலேயே அதை மறுக்கிறது.
மன்றோ பிரிட்டனை எண்ணி ஏங்கிக்கொண்டே இங்கே வாழ்ந்தார் திரும்பிச்செல்ல எப்போதும் முயன்றபடி இருந்தார். அவருக்கு இந்தியாவின் நிலவரி வசூல் பற்றி இருந்த அறிவும் திறமையும்தான் அவரை பிரிட்டிஷ் அரசு விடுவிக்காமல் பணியில் வைத்திருந்தமைக்குக் காரணம். அவர் கடைசியாகக்கூட திரும்பிச்செல்லமுயன்றுகொண்டிருந்தபோதுதான் மறைந்தார். அவருக்கு இந்தியாவின் மதம் பண்பாடு எதிலும் எந்த மதிப்பும் இருந்ததில்லை. அவை நிலவரி வசூலுக்கு எப்படி உதவக்கூடும் என்ற கோணத்திலேயே அவர் சிந்தித்தார். இந்தியா அவருக்கு பிரிட்டிஷாருக்கு வரியை அள்ளித்தரும் அறுவடைக்களம் மட்டுமே.
மன்றோ இளமையில் பெரும்பாலும் கொங்குநாட்டில் தருமபுரி நகரில்தான் வாழ்ந்திருக்கிறர்ர்.மன்றோ நினைவாக தருமபுரியில் ஒரு நினைவுத்தூண் உள்ளது.தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் மன்றோவின் வீடும் குளமும் உள்ளது. தென்னகமெங்கும் ப்ல இடங்களில் மன்றோவுக்கான நினைவுச்சின்னங்கள் உள்ளன
கொங்குநாட்டில் மன்றோ என்ற இந்நூல் ‘கொங்குநாட்டில் விவசாயிகளுக்கு நிலங்களை சட்டபூர்வமாக அளித்தவர் மன்றோ’ என்ற ஒற்றை வரியை நோக்கிச் செல்கிறது. பொதுவானகிராமநிலத்தில் கிராம மக்கள் அனைவருக்கும் இருந்த உரிமைகள் அனைத்தையும் ரயத்துவாரி முறை ரத்துசெய்து பல்லாயிரம் மக்களை நில உரிமையே அற்றவர்களாக ஆக்கியது என்பதையும் சேர்த்துக்கொண்டால்தான் அச்சித்திரம் முழுமை அடையும். கைவினைக்கலைஞர்களும் தலித்துகளும் நிலத்தின்மீதிருந்த மறைமுக உரிமையை முழுமையாக இழந்து கூலிப்பணியாளர்களாக ஆனார்கள்.
மன்றோ இந்தியாவை ஒட்டச்சுரண்டி பெரும்பஞ்சங்கள் வழியாக கோடிக்கணக்கான மக்களைக் கொன்றழித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விசுவாசமான ,நேர்மையான, மிகச்சிறந்த ஊழியர். அவரது தனிப்பட்ட சிறந்த குணங்களினால் அவர் இன்னும் அதிக அளவில் சுரண்டி இன்னும் அதிக மக்களை மரணத்தை நோக்கிக் கொண்டுசென்றார், அவ்வளவுதான். [கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்கங்கள் 304, விலை 145ரூ] .jeyamohan.in

கருத்துகள் இல்லை: