கடந்த
மார்ச் மாதம் இரவு 8 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி
அரசு மருத்துவமனைக்கு விபத்தில் அடிப்பட்ட ஒருவர் அழைத்து வரப்பட்டார்.
உயிருக்கு போராடிய அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தால் அதற்குரிய பலன்
கிடைக்கும் என்றனர் மருத்துவர்கள்.
உடனடியாக
அவருக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்கப்பட்டது. மூளையில் இருபக்கமும் இரத்தம்
உறைந்திருந்ததை மருத்துவர்கள் அறிந்தனர். இதையத்து அறுவை சிகிச்சைக்கு
ஏற்பாடு செய்தனர். இரத்தம் தேவைப்பட்டதால், கல்லூரி மாணவர்களிடம் ரத்தம்
பெறப்பட்டது. இரண்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
இருப்பினும்
அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர் யார் என்று தெரிந்துகொள்வதற்காக
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மருத்துவர்கள் பேசி பார்த்தனர்.
இரண்டு வாரம் கழித்து இந்தி மொழியில் பேசினால் அதனை புரிந்துகொண்டு அவர்
கை, கால்களை அசைத்தார்.
பாதிக்கப்பட்ட
அந்த நபருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு பைசா
செலவின்றி அவரது உயிர் காப்பாற்றப்பட்டதுடன், டாக்டர் ராஜா விக்னேஷ்
அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து அக்கறையுடன் கவனித்துக்கொண்டார்.
நான்கு
வார சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் தொடர்ந்து இந்தியில் பேசும்போது,
ஹரி என்றும், ஒரிசா என்றும் அந்த நபர் உச்சரித்துள்ளார். வேறு எந்த தகவலும்
அவர் சொல்லவில்லை. இதையடுத்து
டாக்டர்கள் ராஜா விக்னேஷ், மரியானோ ஆண்டோ புருனோ ஆகியோர் தங்களது
பேஸ்புக்கில் அந்த நபர் மருத்துவமனைக்கு வந்தது முதல் தற்போது வரை
நடந்தவைகளை பதிவு செய்ததுடன், ஹரியின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.
மேலும் அந்த தகவலை தனது ஒரிசா நண்பர்களுக்கு அனுப்பினர்.
"தலையில்
அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்ட நபர் இவர். ஒடிசா
மாநிலத்தவர் என்பதை தவிர, இவரை பற்றிய தகவல்கள் தெரியாத காரணத்தினால்
இவரின் நண்பர்கள், உறவினர்களை செய்தி சென்றடையும் என்ற நம்பிக்கையில்
இவரின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பகிரவும். உங்களின்
முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பகிர்ந்து உங்களுடைய ஒரிசா நண்பர்களை பகிர
செய்து அவர்களையும் பகிர சொல்லுங்கள். இவரிடம்இருந்து தகவல் இல்லாமல்
தவிக்கும் குடும்பத்தினருக்கு இந்த செய்தி சென்றடைய உதவுவோம்" என்று
கூறியிருந்தார் டாக்டர் புருனோ.
இதனை பார்த்த பி.வி.ராமசாமி, சீனிவாசன் போன்றோர் இந்த தகவலை அவர்களது ஒரிசா நண்பர்களுக்கு அனுப்பினர். இந்த
தகவலை கே.கே.ஜேனோ என்பவர் பார்க்கிறார். அவர் இந்த புகைப்படத்தை
வைத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்தார். அப்போது ஹரியின் முழு பெயர் ஹரி
நாயக் என்றும், ஒடிசா மாநிலம் கலசந்தி மாவட்டம், துலாமுலா கிராமத்தைச்
சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர் பிஸ்வாம்பர் நாயக், லட்சுமி என்றும்
அறிந்தார். இதனை சென்னையில் உள்ள டாக்டர் புருனோவுக்கு தெரிவித்தார்.
இதுகுறித்து
டாக்டர்கள் புருனோ, ராஜா விக்னேஷ் ஆகியோர் கூறுகையில், ஏழை பணக்காரன்
என்று பார்த்து நாங்கள் சிகிச்சை செய்வதில்லை. உயிர் அனைவருக்கும்
பொதுவானது. மருத்துவமனைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய
சிகிச்சை கொடுக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அரசு
மருத்துவமனை என்றால் மோசமாக இருக்கும் என்பது பலரது கண்ணோட்டம். ஆனால்
இங்கு இவருக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, மருத்து
செலவுகளும் கவனிக்கப்பட்டுள்ளது. இதுபோல நிறைய பேர் வருகிறார்கள்.
அவர்களுக்கும் நாங்கள் எங்களால் முடிந்தவரை சிசிக்சை அளித்து உதவி
செய்கிறோம் என்றனர்.
டாக்டர்கள்
ராஜா விக்னேஷ், புருனோ, பேஸ்புக் மூலம் மேற்கண்ட சம்பவத்தை உலகுக்கு தெரிய
வைத்து, ஒரு குடும்பத்தை இணைக்க வைத்த முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட
வைக்கிறது.
அரட்டை
அடிக்கவும், நக்கல், நையாண்டி செய்வதற்கும் பேஸ்புக்கை
பயன்படுத்துகிறார்கள் என்று பலர் விமர்சிப்பார்கள். டாக்டர்கள் ராஜா
விக்னேஷ், புருனோ போன்றவர்களின் செயல்பாடுகள் பாராட்டக் கூடியதாகவும்
உள்ளது என்பதை மறுக்க முடியாது. டாக்டர்கள் ராஜா விக்னேஷ், புருனோவுக்கு
பேஸ்புக்கில் வாழ்த்துக்கள் குவிகிறது. நக்கீரன் குடும்பமும் அவர்களுக்கு
தனது வாழ்த்துக்களை தெரிவித் துக்கொள்கிறது.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக