புதன், 30 ஏப்ரல், 2014

ஒரு மாணவர் கூட பாஸாகாத 54 முன்னணி என்ஜினியரிங் காலேஜ்கள்... அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை. ஒருவர் கூட பாஸ் இல்லை... முதல் செமஸ்டருக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இந்த 54 என்ஜீனியரிங் கல்லூரிகள் மற்றும் 2 தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட தேறவில்லை. நல்ல ரேங்கிங் காலேஜ்கள்... இவர்களில் யாருமே ஒரு பேப்பரில் கூட பாஸ் ஆகவில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும், இந்தக் கல்லூரிகள் அனைத்துமே இத்தனைக்கும் ஓரளவுக்கு நல்ல ரேங்கிங்கில் உள்ளவைதாம். உயர் கல்விக்குப் பெயர் போனவை... இவைகளில் பெரும்பாலான கல்லூரிகள் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகள் மற்றும் கோவையைச் சேர்ந்தவையாகும். உயர் கல்விக்குப் பெயர் போன இடங்கள் இவை என்பது இன்னொரு ஆச்சரியம். அதிர்ச்சிக் கொடுத்த முன்னணிக் கல்லூரிகள்... அதேபோல முன்னணிக் கல்லூரிகள் எதுவுமே இந்த முறை 100 சதவீத தேர்ச்சியைக் காட்டவில்லை. இது இன்னொரு அதிர்ச்சி செய்தி. கல்லூரிகளின் தவறு... அதிகபட்ச பாஸ் சதவீதமே 87.45 சதவீதம்தான். உயர்தரமான கல்வியைக் கொடுக்க இந்தக் கல்லூரிகள் தவறி விட்டதையே இது காட்டுவதாக கல்வியாளர் ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார். தேர்ச்சி சதவீதம்... 421 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் கீழேதான் தேர்ச்சி விகிதம் உள்ளது. 115 கல்லூரிகள்தான் 50 சதவீத தேர்ச்சியைத் தாண்டியுள்ளன. ஒரு சதவீதம் தானாம்... 357 கல்லூரிகளில் 40 சதவீதத்திற்கும் கீழே உள்ளது தேர்ச்சி விகிதம். 59 கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கத்தில் பெற்றோர்... தேர்வு முடிவுகள் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதாம். இதனால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் எதனடிப்படையில் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: