செவ்வாய், 29 ஏப்ரல், 2014

மோடியின் தொகுதியில் காங்கிரஸ் அனல் பறக்கும் பிரசாரம் !மோடிக்கு கடும் சவால் !

பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வதோதராவில், அனல்பறக்கும் பிரசாரம், இன்று (ஏப்., 28) நிறைவடைகிறது. மோடிக்கு நெருக்கடி அளிக்க, இரு நாட்களாக காங்கிரசார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இந்த கோடையில் அனல் காற்று வீசும், இந்தியாவின் மேற்கு பகுதி நகரான வதோதராவில், நேற்று அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு நிகராக, கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.பிரதமர் வேட்பாளர் போட்டியிடுவதால், நாடு முழுவதும் கவனிக்கும் தொகுதியாக வதோதரா மாறி விட்டது. வதோதராவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, காங்., சார்பில் ராகுலுக்கு நெருக்கமானவரான மதுசூதன் மிஸ்திரி உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் பிரசாரம் செய்த மோடி, தன் தொகுதியான இங்கு, ஒரே நாள் 20 நிமிடங்கள் மட்டும் பிரசாரம் செய்தார். எனினும் பா.ஜ., மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். மோடிக்கு கடும் நெருக்கடி தரும் விதத்திலும், ஓட்டு வித்தியாசத்தை குறைக்கவும், தீவிரமாக பணியாற்றுகிறது காங்கிரஸ்.


இத்தொகுதியில் உள்ள 40 ஆயிரம் மலையாளிகளின் ஓட்டுக்களை கவர, கேரள மாநில காங்., தலைவர் வி.எம்.சுதீரன் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா, நேற்று பிரசாரம் செய்தார். இவரது மனைவி, பரோடா ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், வதோதரா மக்களிடம் தொடர்புடையவர் இவர்.இம்முறை தேர்தல் பிரசாரத்திற்கு, வெளி மாநிலங்களுக்கு செல்லாத நிதி அமைச்சர் சிதம்பரம் கூட, நேற்று வதோதராவில் பிரசாரம் செய்தார். இத்தொகுதியில் உள்ள 30 ஆயிரம் தமிழர்களின் ஓட்டுக்களை பெற, வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.பிரசாரம் நிறைவு பெறும் இன்று (ஏப்., 28), நடிகை நக்மா உட்பட பல இந்தி நடிகர்கள் காங்.,க்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். தலைநகர் ஆமதாபாத்தில், பிரதமர் மன்மோகன்சிங் நேற்று செய்ய இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. ராகுல், குஜராத்தில் ஒரு நாள் பிரசாரம் செய்தார்.


மோட்டார் சைக்கிள் ஊர்வலம்:

வதோதராவில் வாழும் தென்மாநில மக்கள் சார்பில், மோடிக்கு ஆதரவு தெரிவித்து, இங்குள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் துவங்கியது. நகர வீதிகளில், இவர்கள் வலம் வந்து பா.ஜ., விற்கு ஆதரவு கேட்டனர். குஜராத்தி, இந்தி அல்லாது பிற தாய்மொழியை கொண்ட சங்கத்தினர் பங்கேற்றனர். சம்மேளன தலைவர் மோகன் நாயர், பா.ஜ., தமிழக துணைத் தலைவர் எச்.ராஜா, தமிழ் சங்க நிர்வாகிகள் வெங்கடாச்சலம், சேகர், ஆமதாபாத் அன்னிய மொழி சங்க தலைவர் சுரேந்திர சிங் பிள்ளை கலந்து கொண்டனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை: