பிறப்பிலேயே ஊனம் தவிர்க்க இயலாதது. விபத்தால் ஏற்படும் ஊனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக அன்றா டம் உழைப்பதால் ஏற்படும் ஊனத்தை தவிர்க்க வழியின்றியும், அதற்கென மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொள்ள முடியாமலும் ஒரு சமூகம் தவிக்கிறது.
ஆற்றில் கை வைத்தால்தான் சோற்றில் கை வைக்கமுடியும்…
இந்நிலை திருச்சி அருகே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போன்ற பகுதியில் இருக்கும் அழகிரிபுரத்தில்தான். இங்கு 160-க்கும் அதிகமான சல வைத் தொழிலாளர்கள் குடும்பத் துடன் வசிக்கின்றனர்.
பல தலை முறைகளாக இங்கு வாழும் இவர்கள் அருகில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் தினமும் கால் வைத்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்.
ஒரு வீட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரும் சலவைத் தொழிலில் ஈடுபடுகின்ற னர். பெரும்பாலும் ஆண்கள் துணி களை அடித்துத் துவைத்துத் தர, பெண்கள் காய வைக்கவும், துணி களுக்கு போடும் கஞ்சி காய்ச்சவும், வெள்ளை துணிகளுக்கு நீலம் கலக்கவும் செய்கின்றனர். பெண் கள் செய்யும் வேலைகளுக்கு பிள்ளைகள் உதவுகின்றனர். வளர்ந்த பின்னர் பிள்ளைகளும் பெற்றோர்போல் தேர்ந்த சலவைக் காரராக மாறிவிடுகின்றனர்.
10 வயது முதல் இத்தொழிலில் ஈடுபடும் இவர்களில் பெரும் பாலானோருக்கு கை விரல்கள் நிமிர்த்த முடியாமல், மடங்கிய நிலையில் ஒருவித ஊனமாக மாறி விடுகிறது. கைகளில் ஆறாத புண் ஏற்பட்டு சிலர் அவதிப்படுகின்றனர். இன்னும் சிலருக்கு முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டு கூன் விழுந்த நிலையில் வேலை செய்கின்றனர்.
இந்தப் பொழப்பு எங்களோட போகட்டும்…
இதுகுறித்து 70 வயதான முதியவர் சுகுமார் கூறுகையில், “10 வயசி லேர்ந்து எங்கப்பாவுக்கு உதவி யாக இத்தொழில் செய்றேன். இப்போ கண்ணு வேற சரியா தெரி யல. கை இரண்டிலும் ஆறாத புண் ஏற்பட்டதால், விரல்களை நீட்டி மடக்க முடியல. குனிந்தே சோப்பு போடுவதால் அதிக நேரம் நிமிர்ந்து நிற்க முடியல. டாக்டர் கிட்ட கேட்டா இந்த தொழில விட்டுருங்கிறாரு” எனக்கூறி தன் கைகளைக் காட்டி னார். அவரது வேதனையை உணர்ந்து ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் துவைத்துக் கொண் டிருந்த கண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியது: “45 வயசாகுதுங்க, 8 வயசில் இருந்து துவைக்கிறேன். கை விரல்கள் நீட்ட முடியாமல் மடங்கிடுச்சு, என்ன பன்றதுன்னே தெரியல. இப்பல்லாம் எங்கள் சமூக பிள்ளைகள் பள்ளிக்கூடம் போறாங்க. லீவு நாள்ல எங்க ளுக்கு உதவி செய்றாங்க. பாழாய்ப் போன இந்த பொழப்பு எங்களோட போகட்டும்” என்றார் வேதனை யுடன்.
வெள்ளப்பெருக்கால் பொருளாதார இழப்பு…
ஆற்றில் தண்ணீர் வராதபோது, சலவைசெய்ய வசதியாக சொந்த செலவில் தொட்டிகள் கட்டியுள்ளனர். கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அந்த தொட்டிகளை தண்ணீர் அடித் துச் சென்றுவிடும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித் துள்ளனர் இவர்கள்.
உருப்படிக்கு ரூ.5 என நாளொன் றுக்கு தலா ரூ.300 வரை கிடைக் கும். இவர்களுக்கு வேலை தரும் லாண்டரி கடைக்காரர்களிடம் முன் பணம் பெற்றுத்தான், சலவைக்குத் தேவையான மூலப் பொருட்கள் வாங்கும் நிலையில் உள்ளனர்.
இப்போதைக்கு, குடியிருப்பு பகுதியில் பெண்கள் பாதுகாப்பாக சென்று வர ஒரு கழிவறை, மழை வெள்ளப்பெருக்கு காலத்தில் தொடர்ந்து தொழில் செய்ய வசதி யாக கரையோரம் ‘டோபிகானா’ அமைத்துக் கொடுத்தால் போதும் என்கின்றனர்.
மே தினம்னா என்ன?
அங்கிருந்து புறப்படும்போது, மே 1-ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடுகிறார்களே. அதுபற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்ட தற்கு, “அப்படின்னா என்ன?” என்றனர் ஒருமித்த குரலில்.
மே தின கொண்டாட்டங்கள், மேடை முழக்கங்கள் என பிஸியாக இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மற்றும் அடிப் படை வசதிகள் கிடைக்கச் செய்வ தென ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்தால் அது தொழிலாளர் தினத் தைக் கொண்டாடுவதை மேலும் அர்த்தமுள்ளதாக்கும். சிந்தித்து செயல்படுவார்களா?