உலகத்தில் ரசிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன, என்று ரசித்து, ரசித்து வாழ்பவரா நீங்கள்? அந்த ரசனைக்காக பல பேர் சாக வேண்டியிருப்பதை அறிவீர்களா? உங்கள் தங்கக் கனவுக்காக பல பேர் சுரங்கத்தில் சாக வேண்டியிருக்கிறது. உங்களின் ஷாப்பிங்மால் அனுபவத்திற்காகவும், மெட்ரோ ரயில் அழகுக்காகவும் பல பேர் உயிர் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரிசையில் 2022 – ல் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான நிர்மாணப் பணிகளில் இதுவரை 920 இந்தியத் தொழிலாளிகள் பலியாகி உள்ளனர் என தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 18 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த வேலையில், வேலை முடிவதற்குள் இன்னும் 4,000 தொழிலாளர்கள் வரை உயிரிழக்கக் கூடும் என தொழிலாளர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளும், மரணங்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை, இறப்பு பற்றி குடும்பங்களுக்கே தெரிவிக்கப்படுவதில்லை, உரிய நிவாரணமும் தரப்படாத நிலை உள்ளது. தெற்காசியா மற்றும் உலகின் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான, சட்டப்படியான ஊதியம், அடிப்படை வசதிகள், என எந்த மனிதத் தன்மையும் மறுக்கப்பட்ட நிலையில்தான் கத்தாரில் உலக கால்பந்து மைதானங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை1982 -லேயே இயற்றப்பட்ட மாநிலத்திற்கு மாநிலம் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான சட்டம் கூட இன்று வரை அமல்படுத்தப்படுவதில்லை. இதனால் மெட்ரோ ரயில் மற்றும் பல்வேறு திட்டங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்களுக்கும் எவ்வித பாதுகாப்புமற்ற நிலை உள்ளது. பலரின் சாவு சத்தமின்றி மறைக்கப்படுகிறது. இது குறித்த புகார்களுக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது கட்டுமான சம்மேளனம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை நிலைமைகளை உறுதிபடுத்த எந்த நாட்டுக்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்களோ, அந்த நாட்டுக்கும், வேலைக்கு அனுப்பும் நாட்டுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளரின் வேலை நிலையும், குறைந்த பட்ச ஊதியம், வேலை நிபந்தனை, குறை தீர்க்கும் முறைகள் ஆகியவை இடம் பெற வேண்டும், வெளிநாட்டு தூதரகங்களில் தொழிலாளர்களுக்கான தனித்துறை, அமைக்க வேண்டும் என பல நியாயமான, தேவையான கோரிக்கைகளை இந்த சம்மேளனம் முன் வைத்துள்ளது. தொழிலாளர்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கித் தரும் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டிய கோரிக்கை இது!
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
புலம் பெயர் தொழிலாளர்கள் விசயத்தில் எனக்கும் உன் சாவுக்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கிக்கொள்ளும் அரசு, புலத்தையே பெயர்க்கும் பன்னாட்டு கம்பெனிகளுடன் மட்டும் பொறுப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் வாழ வைக்க வரும் வள்ளல்கள் என்று பாரட்டுப் பதக்கம் வழங்குகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் சர்வமானியமாகத் தருவதுடன், தொழிலாளர்கள் சங்கம் வைக்காமல் தடுப்பது, வேலை நிறுத்தத்தை ஒடுக்குவது, வரை புரிந்துணர்வு கொண்டு உதவி செய்கிறது.
தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளைப் பற்றி கவலைப்படாத அரசு முதலாளிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், மானியமாக தந்து மூலதனத்தின் ஜீவாதாரத்திற்கு எந்த பாதிப்பும், பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கிறது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என்று எந்த தொழிலாளர்களாவது போராடினால் போலீசை அனுப்பி அடிப்பது, பொய் வழக்கு போடுவது, பணிபாதுகாப்பு இல்லாமல் சாகடிக்கப்படும் தொழிலாளி பிணத்தையே பேரம் பேசி மூடி மறைப்பது வரை புரிந்துணர்ந்து முதலாளிகளுக்கு வேலைசெய்யும் இந்த அரசு, தொழிலாளர்கள் உயிரையும், உரிமைகளையும் பேருக்கும் மதிப்பதில்லை.
கத்தார் நிலைமை மட்டுமல்ல நமது நாட்டின் மொத்த நிலைமையும் இது யாருக்கான அரசு என்று அன்றாடம் நமக்கு உயிர்வலியோடு உணர்த்துகிறது. முற்றிலும் முதலாளிகளுக்காக மட்டுமே, மூலதனத்துக்காக மட்டுமே சேவை செய்யும் இந்த அரசமைப்புக்கு ஒரு கல்லறை கட்டாமல் இனி கட்டுமானத் தொழிலாளர்கள் வாழ முடியாது என்பதுதான் அனுபவம் உணர்த்தும் பாடம்.
நாட்டில் நடப்பதையெல்லாம், வளர்ச்சி, வல்லரசு என்று வேடிக்கை பார்ப்பவர்களே, நீங்கள் என்ன கல்லாலும் சாந்தாலும் கட்டப்பட்டவர்களா? உள்ளே இதயம் என்று ஒன்று உண்டா? என குமுறும் தொழிலாளர்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா?
- துரை.சண்முகம் vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக