ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மூன்றாவது அணிக்கு ஆதரவு காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் ! சல்மான் குர்ஷித் : Sans jeya?

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், ஆட்சி அமைப்பதற்கு மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவு பெறுவது பற்றியும் யோசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், மத்தியில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது. தங்களுக்குத் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்துள்ள அக்கட்சிக்கு "எப்படியாவது பாஜக ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து விடவேண்டும்' என்பதே ஒரே நோக்கமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, தங்களுக்கு சுமார் 120 இடங்கள்தான் கிடைக்கும் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். எனவே, நரேந்திர மோடி பிரதமராவதைத் தடுப்பதற்காக தேர்தலுக்குப் பின் மதச்சார்பற்ற அணி ஒன்றை அமைப்பதற்காக முயற்சிக்க வேண்டியுள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.
அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ""மே 16ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தாம் எப்படியும் பிரதமர் பதவியைப் பிடிக்கப்போவது உறுதி என்று மோடி நம்புகிறார். இந்த நம்பிக்கையின் காரணமாக, தோழமைக் கட்சித் தலைவராக இருக்கக் கூடிய ஜெயலலிதா, மம்தா, நவீன் பட்நாயக் போன்றோரை அவர் பகைத்துக் கொண்டு விட்டார். ஆனால், அவர் பிரதமராவதற்கு உரிய சூழல் உள்ளதா என்று பார்த்தால் யதார்த்த நிலவரம் அதற்கு மாறுபட்டதாக உள்ளது'' என்று தெரிவித்தார்.
"எதிர்க்கட்சியான பாஜக கூட்டணிக்கு 200 இடங்களுக்கு மேல் கிடைக்காது. இதனால், புதிதாகச் சில கட்சிகளை இணைத்து ஒரு கூட்டணியை நம்மால் உருவாக்கிவிட முடியும்' என்பதே காங்கிரஸ் வட்டார மதிப்பீடாக உள்ளது.
எனவே, மூன்றாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். மூன்றாவது அணியுடன் இணைந்தாவது ஆட்சியைத் தக்க வைப்போம் என்று அவர்கள் பேசி வருவது சிறுபான்மையினருக்கு விடுக்கப்பட்ட சமிக்ஞையாகும். ஏனெனில், மக்களவைத் தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையில் களத்தில் நிற்கும் காங்கிரஸூக்கு அவர்களின் முழுமையான ஆதரவு தேவைப்படுகிறது.
""தங்களுக்கு குறைந்தபட்சம் 120 இடங்கள் கிடைத்து, பாஜக 200 இடங்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டாலே போதும்; ஆட்சியை அமைத்து விடலாம்' என்றே காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஏனெனில், மூன்றாவது அணி ஆட்சி ஒன்றுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தால் அது நிலையானதாக இருக்காது என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். ஏற்கெனவே 1990-91, 1996 ஆகிய ஆண்டுகளில் சந்திரசேகர், தேவெ கௌடா, குஜ்ரால் ஆகியோர் ஆட்சியமைக்க ஆதரவு அளித்தபோதிலும் அவை நீண்டநாள் நீடிக்கவில்லை. இந்த அனுபவம் தந்த தெளிவு காரணமாகவே, மூன்றாவது அணி அரசு அமையாது என்று காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோர் கூறி வருகின்றனர். எனவே, புதிய கட்சிகளின் ஆதரவை கோரிப் பெற்று தாங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.
குர்ஷித்தின் கருத்து என்ன? இந்த பின்னணியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் பிட்டௌரம் கிராமத்தில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராமர் கோயில் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பாஜகவுக்கு நரேந்திர மோடி பெரும் பிரச்னையாக இருப்பார். கடவுள் அலையே (ராமர் கோயில் விவகாரம்) காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாத நிலையில், மோடியின் அலையால் காங்கிரஸ் கட்சியை எப்படி வீழ்த்த முடியும்?
கங்கை மாதா அழைத்ததால் தான் வாராணசியில் போட்டியிடுவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால் வாராணசியில் பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்திய மோடி, கங்கைக் கரைக்கு சென்று ஏன் வழிபாடு நடத்தவில்லை?
தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். அது மட்டுமின்றி, ஆட்சியமைக்க மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவைப் பெறுவது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் கூட்டணி: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், "காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறது. அது தனது சொந்த பலத்தில்தான் போட்டியிடுகிறது. எனினும், தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை இடங்கள் என்ற எண்ணிக்கைதான் ஆட்சியைத் தீர்மானிக்கிறது. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய சூழ்நிலையைப் பொருத்து தேவைப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும்' என்றார்.
ஆட்சியமைப்போம் } ப.சிதம்பரம்: இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம், ""மூன்றாவது அணியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் கூறியுள்ள கருத்து, தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டதாக அர்த்தமா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ""அவர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. வெற்றி பெற்று, ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நாங்கள் தேர்தலைச் சந்திக்கிறோம்'' என்று சிதம்பரம் பதிலளித்தார். dinamani.com

கருத்துகள் இல்லை: