புதன், 30 ஏப்ரல், 2014

1,300 அடிவரை ஆழ்துளை அமைக்கும் அவலம் ! தமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு போனது

தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க உரிய அக்கறை காட்டாததால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. தண்ணீருக்காக, 1,200 - 1,300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.'மழை இந்த வருஷமும் ஏமாத்திடுச்சே... தண்ணிக்கு அல்லாட வேண்டியது தான்...' என்ற வார்த்தையை, பருவமழை பொய்க்கும் போதெல்லாம், தமிழக மக்கள் கூறுவது வழக்கம். மழை பெய்யவில்லை என, வருத்தப்படுவதில் தவறில்லை. ஆனால், கொட்டிய மழைநீரையும் சேமிக்காமல், வீணடித்துவிட்டு, 'வருண பகவான் ஏமாத்திட்டாரு' என, குறைகூறுவது சரியல்ல.<குடிநீர் உள்ளிட்ட அனைத்து, தமிழக நீர் தேவைக்கும் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை தான் பிரதானம். ஆண்டின் சராசரி மழை அளவு, 925 மி.மீ., என்றாலும், இந்த அளவை தமிழகம் எட்டிப் பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன.போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெய்யும் மழை நீரில், 40 சதவீதம் வரை, கடலில் வீணாக கலக்கிறது.  நிலத்தடி நீர் எந்தளவிற்கு குறைகிறதோ, அந்தளவிற்கு கடல் மட்டத்திலிருந்து நிலமும் கீழிறங்குகிறது என்று ஐ.நா சபையில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. புவி வெப்பத்தால், கடல் நீர் மட்டம் மேலோங்குகிறது. அதே போல, நிலத்தடி நீரை உருஞ்சுவதால், நிலம் கீழே செல்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரே வழி, இந்தியாவில் உள்ள எல்லா நதிகளையும் இணைப்பதுதான்.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில், 2003ல் அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், ஓரளவு பலன் தந்தாலும், ஆட்சி மாற்றத்தால், பயனுள்ள அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகியும், மழைநீர் சேகரிப்பில் சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் குறைவாக இருந்த பகுதிகளிலும், வியாபார நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நிலைமை சிக்கலாகி, நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு போய் விட்டது.தாகம் தீர்க்கும் தண்ணீருக்காக மக்கள் பல கி.மீ., அலைந்து திரியும் நிலை, பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில், டெல்டா பாசன பகுதிகளிலேயே விவசாயம் முடங்கியது என்றால், மற்ற பகுதிகளைக் கேட்க வேண்டியதில்லை.


1,300 அடி ஆழ்துளை



விவசாயம், குடிநீருக்கான தண்ணீர் எடுக்க, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், 1,200 - 1,300 அடி ஆழம் வரை, ஆழ்துளை அமைக்கப்படுகிறது. குறைந்த பட்சமாக, தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில், 250 முதல் 400 அடி வரை போடப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில், 1,000 அடி என்ற அளவிலேயே உள்ளது என, தமிழகத்தில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் உள்ள முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.'நில அதிர்வைக் கூட கண்டு பிடித்து விட முடிகிறது; நீரோட்டத்தைத் தான் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தான், 1,300 அடி வரை போக வேண்டியுள்ளது' என, ஆழ்துளை கிணறு அமைக்கும் ஊழியர்கள் புலம்புகின்றனர். தற்போது இந்த நிலை என்றால், எதிர்கால நிலைமை இன்னும் மோசமாகலாம். அதற்கு முன், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கவும், தேவையான நீர் ஆதாரங்கள், கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அவசியத் தேவை; அலட்சியம் காட்டினால் மண்ணுக்குள் ஈரத்தை பார்ப்பதே அரிதாகிவிடும் என்பது தான், நிதர்சன உண்மை.


கோடை உழவு: விவசாயிகள் கவலை



தற்போது கோடை உழவு காலம். எனவே, பல மாவட்டங்களில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள், மல்லிகை, கனகாம்பரம், ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள்; கத்தரி, வெண்டைக்காய், புடலங்காய், பச்சை மிளகாய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறையின் கணக்குபடி, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஏக்கரில், இவை பயிரிடப்பட்டுள்ளது.ஆனால், பல மணிநேரம் மின்வெட்டு, மோட்டார்களை இயக்க தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதனால், கோடை உழவு பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கு வரை போதுமான மின்சாரம் கிடைத்தது. அதை நம்பி, ஏராளமான விவசாயிகள் கோடை உழவை துவக்கினர். ஆனால், தற்போது மின்சாரம் எப்போது வரும் என்றே தெரியவில்லை.இரண்டு மாதமாக, பயிர்களை வளர்க்க பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்காமல் போய் விடும். எனவே, பாசனத்திற்கு தேவையான மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: