வெள்ளி, 2 மே, 2014

தலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியை கடந்து ஆஸ்திரேலியப் பெண் சாதனை


 தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடற்பகுதியை கயாக் படகு மூலம் தனியாக கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் படைத்தார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த சாண்ட்ரா ஹேலன் ராப்சன் (45). இவர் கடல்மார்க்கமாக தனது கயாக் படகில் உலகை சுற்றி வருகிறார். 2011 மே மாதம் ஜெர்மனியில் இருந்து தனது கயாக் படகு மூலமாகவே பல நாடுகளைக் கடந்து தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு 2016 ஆம் ஆண்டிற்குள் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை அரசின் அனுமதியுடன் வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு இலங்கை தலைமன்னாரில் இருந்து புறப்பட்ட ஹேலன் ராப்சன் மாலை 4.15 மணியளவில் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் அருகே வந்தடைந்தார்.

இதன் மூலம் பாக்ஜலசந்தி கடற்கரையை கயாக் படகு மூலம் கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை ஹெலன் ராப்சன் படைத்தார். இதற்கு முன்னர் ஜெர்மனியை சார்ந்த ஆஸ்கார் ஸ்பெக் என்பவர் 1935 ஆம் ஆண்டில் பாக்ஜலசந்தி கடற்பரப்பினை கடந்தது குறிப்பிடத்தக்கது.
தனது சாதனை குறித்து செய்தியாளர்களிடம் ஹேலன் ராப்சன் கூறும்போது, "எனது பயணத் திட்டத்தில் பாதி தூரத்தை கடந்து விட்டேன். மீதமுள்ள 23 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பங்களாதேஷ் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை கடந்து செப்டம்பர் 2016-க்குள் எனது தாய்நாடான ஆஸ்திரேலியா சென்றடைந்து விடுவேன். மேலும் பாக்ஜலசந்தி கடற்பரப்பை கயாக் படகு மூலம் கடந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றார். 

கருத்துகள் இல்லை: