திங்கள், 21 அக்டோபர், 2013

வேலூர் ஜூ.வி. நிருபர் இறந்தது விபத்தா? சவுக்கு இணையதள எடிட்டர் இப்போது எங்கே?

தமிழக பத்திரிகை உலக சகோதரர் சகோதரி நிருபர்களே,
காணொளி ஊடக சகோதர சகோதரிகளே,
ஜனநாயகத்தின் நான்காவது தூண் நண்பர்களே,
இன்று உங்களிடம் ஒரு துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டு வரும் காலங்களில் பத்திரிகை மற்றும் ஊடக உலகம் மீது கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் விடும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு ஜனநாயக அமைப்புக்கள் மூலம் குரல் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
கடந்த சில வாரங்களாக பல்வேறு துயர சம்பவங்கள், கொலை முயற்சிகள் பத்திரிகை உலகில் பணியாற்றுபவர்களை குறி வைத்து ஆளும் கட்சி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கூட்டணியுடன் நடை பெறுகிறது என தீவிர சந்தேகம் எழுந்துள்ளது. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்.
கீழ் கண்ட சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை இல்லை. திட்டமிட்டு அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்திய நிருபர்கள் மீது தாக்குதல் ஏவப்பட்டுள்ளது.

சம்பவம் #1: வேலூர் ஜூனியர் விகடன் நிருபர் விபத்தில் இறந்தது குறித்து சந்தேகம்

வேலூரில் சனிக்கிழமை மாலை நடந்த சாலை விபத்தில் வாரஇதழ் நிருபராக பணிபுரிந்து வந்த சசிக்குமார் (30) உயிரிழந்தார். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த இவர் ஜூனியர் விகடன் இதழின் வேலூர் மாவட்ட நிருபராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல்களை பற்றி தகவல் கொடுப்பதால் இவருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் இருந்தன என்று அவர் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் வேலூர் மாநகராட்சியில் உள்ள மண்டல தலைவர் சுந்தரம் (அ.தி.மு.க.) மாநகராட்சி குடிநீரை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்திய விஷயத்தை வெளிக்கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தவர். வேலூர் மாநகராட்சியில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்தவர்.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், விபத்து நடந்து இடத்திற்கு வந்து சடலத்தை போலீஸார் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் வரை காத்திருந்தார். ஒரு சாதாரண விபத்துக்கு கலெக்டர் இவ்வளவு சீக்கிரம் விரைவது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

சம்பவம் #2: பிரபல இணையதள புலனாய்வு எடிட்டர் சவுக்கு சங்கர் மீது கொலை முயற்சி

பிரபல புலனாய்வு இணையதள எடிட்டர் சவுக்கு சங்கர் அரசு உயர் அதிகாரிகள் ஊழலை தைரியமாக வெளிப்படுத்தி வந்தார். ஒரு சில பத்திரிகை நண்பர்களுக்கு தொழில் முறையாக சவுக்கு சங்கரை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்பதை நாம் கண்டிக்க வேண்டும்.
வெளி மாநிலத்தில் விபத்து போல நடந்த கொலை முயற்சியில் படுகாயமுற்று உள்ளார் என தகவலும், அவர் இருப்பிடமே தெரியவில்லை என மறு தகவல்களும் வந்துள்ளன.
கடந்த இரு வாரங்களாக அவர் இணைய தளத்தில் அப்டேட் எதுவும் இல்லை. இரு வாரமாக அவர் தொடர்பில் இல்லை. இது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.
சமீப காலத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் தொடர்பாக பல கட்டுரைகள் சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் மதுரை பி.ஆர்.பி குரூப்பில் பணம் வாங்கி கொண்டு மதுரை கலெக்டரை மாற்றியது குறித்தும், தூத்துக்குடி தாது மணல் கொள்ளை தொடர வைகுண்ட ராஜன் குரூப்பிடம் பணம் வாங்கி கொண்டு தூத்துக்குடி கலெக்டரை மாற்றியது குறித்தும் சவுக்கு விரிவாக எழுதியது.
சமீப காலத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் சித்திர சேனன் சஸ்பென்ட் ஆன விவகாரத்தில் சவுக்கு நிறைய தகவல் சேர்த்துள்ளதாக தெரிகிறது
மணல் கொள்ளையர் ஆறுமுக சாமி ஒரு பெரும் தொகையை ராம் மோகன் ராவுக்கு கொடுத்து வருவதால், இது வெளிவந்தால் பலருக்கு இடைஞ்சல் என்ற சூழ்நிலை உருவாகி வந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் ராம் மோகன் ராவ் ஒரு சூப்பர் சீப் மினிஸ்டர் போல செயல்பட்டு வந்தார். ராம் மோகன் ராவ் முதல்வர் சொத்து குவிப்பு வழக்கில் பேரம் பேச 350 கோடி கொடுத்தார் என சவுக்கு கட்டுரையும் வந்தது.
சவுக்கின் கட்டுரைகள் ராம் மோகன் ராவ் ராஜ்யத்துக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வந்தன. போலீஸ் அதிகாரி ஜாங்கிட் ஐ.பி.எஸ் தன் மீது விசாரணைகளை முடக்கிவிட ராம் மோகன் ராவுக்கு 60 லட்சம் செலவு செய்துள்ளார். ராம் மோகன் ராவ் மகள் திருமணம் ஐந்து நட்சத்திரம் ஹோட்டலில் நடந்தபோது, அதற்கான செலவை ஜாங்கிட் ஏற்று கொண்டார் என்ற செய்தியை சவுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டது பல உயர் அதிகாரிகளுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி, மணல் கொள்ளையில் பெரும் பணம் அடித்த அமைச்சர் கே.வி. ராமலிங்கம், ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ், கனிம வளத்துறையை வைத்திருக்கும் தொழில் அமைச்சர் தங்கமணி, மணல் கொள்ளையர் ஆறுமுக சாமி ஆகியோர் சவுக்குக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் ஒரு பெரும் தொகையை இவர்கள் பங்கிட்டு வந்தனர் எனவும், இது முதல்வர் காதுக்கு போனால் பிரச்சினை என்பதாலேயே, மணல் கொள்ளை குறித்து சவுக்கு எந்த கட்டுரையும் வெளியிட முடியாதபடி பல்வேறு முயற்சிகள் செய்து வந்தனர் எனவும் தெரிகிறது.
தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படைக்கு சவுக்கு சங்கரை முடிக்க 50 லட்சம் விலை பேசப்பட்டது என உறுதி செய்யபடாத தகவல் வந்துள்ளது.

சம்பவம் #3: உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊழலை வெளிப்படுத்திய தினமலர் நிருபர்களுக்கு மிரட்டல்

தமிழ் நாட்டில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஊழல் தொடர்கின்றது. பல்வேறு பத்திரிகைகள் ஆளுங்கட்சி கவுன்சிலர் மற்றும் தலைவர்களின் ஊழலை அம்பலப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் பராமரிக்கும் பேருந்து நிலையங்களில் உள்ள சுகாதார கேட்டை தினமலர் ஒரு கட்டுரையாக வெளியிட்டது. தேவையான நிதி இருந்தும், அதிகாரம் இருந்தும், விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகள் பராமரிக்கும் பேருந்து நிலைய கழிப்பறைகள் படு மோசமாக இருக்கும் நிலை குறித்து தினமலரில் ஒரு கட்டுரை வந்தது.
இந்த கட்டுரை வந்த கொஞ்ச நாளில் மதுரை மற்றும் விருதுநகர் தினமலர் ஆபீசில் உள்ள நிருபர் பலருக்கு மிரட்டல் போன் வந்துள்ளதாக தினமலரில் பணியாற்றும் நிருபர் சகோதரர்கள் எங்களுக்கு தெரிவித்தனர்.
வேண்டுகோள்:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பத்திரிக்கைகளுக்கு கருத்து சுதந்திரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகை தர்மத்தை கடைப்பிடித்து தமிழக அரசில் நடைபெறும் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிடும்போது அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு பயப்படாமல் நம் நிருபர் சகோதரர் சகோதரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பணியை மற்றும் கடமையை எந்த வித அச்சுறுத்தல் இல்லாமல் செய்ய, பத்திரிகை நிருபர்களின் உரிமையை நிலைநாட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள், பத்திரிகை ஊழியர்கள் யூனியன்கள் வழியாக குரல் கொடுக்க வேண்டி கேட்டுகொள்கிறோம்.
துயர விழிகளுடன்,
வ. தாயன்பன்
(பத்திரிகை நிருபர்)

கருத்துகள் இல்லை: