வெள்ளி, 25 அக்டோபர், 2013

6 கோடி நஷ்டஈடு! தவறான சிகிச்சையால் இறந்த பெண் குடும்பத்திற்கு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !


தவறான சிகிச்சையால்
பெண் உயிரிழந்தது தொடர்பாக, அப்பெண்ணின்
கணவருக்கு ரூ. 5.96 கோடி நஷ்டஈடு வழங்குமாறு, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காரணமாக நேரும் மரணத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வழக்கு விவரம்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் வெளிநாடு வாழ் இந்தியரான குணால் சஹா, எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர். இவரது மனைவி அனுராதாவும் குழந்தைநல உளவியல் ஆலோசகர். கோடை விடுமுறைக்காக, அனுராதா 1998, மார்ச் மாதம் சொந்த ஊரான கொல்கத்தா வந்திருந்தார்.
÷அப்போது அவருக்கு தோலில் தடிமானம் ஏற்பட்டது. அதற்காக டாக்டர் சுகுமார் முகர்ஜியிடம் 1998, ஏப்ரல் 25-இல் சிகிச்சை பெற்றார். டாக்டர் "டெபோமெட்ரால்' என்ற ஊசி மருந்தை அனுராதாவுக்கு தினசரி இருமுறை என்ற வகையில் செலுத்தினார். ஆனால் ஊசிபோட்ட பிறகு அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதற்காக டாக்டர் சுகுமார் முகர்ஜி பணிபுரியும் ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையிலேயே மே 11-இல் அனுராதா சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. எனவே மும்பையிலுள்ள பிரீச் காண்டி மருத்துவமனைக்கு அனுராதா கொண்டுசெல்லப்பட்டார். அங்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அனுராதாவுக்கு வந்திருப்பது, "டாக்ஸிக் எபிடெர்மல் நெக்ரோலிசிஸ்' என்ற மிகவும் அரிய, ஆபத்தான தோல்நோய் என்பது தெரியவந்தது.
இதை அறியாமல் கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் பல நாட்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அனுராதா மே 28-இல் இறந்தார்.
தனது மனைவி இறப்புக்கு கொல்கத்தா மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையே காரணம் என்பதால், அதற்காக ரூ. 77 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் குணால் சஹா மனுச் செய்தார்.
நீதிக்கான போராட்டம்: இவ்வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், நோயாளியின் சாவுக்குக் காரணமான மருத்துவமனையும் மூன்று டாக்டர்களும் இணைந்து 1.32 கோடி நஷ்டஈடு வழங்குமாறு 2006-இல் உத்தரவிட்டது. டாக்டர்கள் மீதான குற்றப் புகாரை ஆணையம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து குணால் சஹா செய்த முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் நுகர்வோர் ஆணையத்திற்கு 2009-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதையடுத்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழக்கை மறுவிசாரணை செய்து, 2011-இல் நஷ்டஈட்டுத் தொகையை உயர்த்தியது. குணால் சஹாவுக்கு ரூ. 1.73 கோடி நஷ்டஈடு வழங்குமாறும், இதில் கணவர் குணால் சஹாவின் பொறுப்பின்மையும் ஒரு காரணம் என்பதால் இதில் 10 சதவீதத்தைக் குறைத்து ரூ. 1.55 கோடி வழங்கினால் போதும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு வழக்கு: ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குணால் சஹா மீண்டும் முறையீடு செய்தார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின்படி தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று அவர் முறையிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாதயா,வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் அனுராதா உயிரிழந்ததற்காக, அவரது கணவர் குணால் சஹாவுக்கு ரூ. 5.96 கோடி நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டது. இத்தொகையை எட்டு வாரங்களுக்குள், 6 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நஷ்டஈட்டுத் தொகையில் டாக்டர்கள் சுகுமார் முகர்ஜியும் பல்ராம் பிரசாத்தும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்; மற்றொரு டாக்டர் வைத்தியநாத் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ சிகிச்சை சார்ந்த நுகர்வோர் வழக்குகளில் இத்தீர்ப்பு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தினமணி.com

கருத்துகள் இல்லை: