முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே குடும்ப தகராறில்
தீர்வு காண மத்தியஸ்தர் ஒருவரை மும்பை ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டது.
கணவர் மீது புகார்
முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் 2008–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது தம்பதியினர் பிரிந்து வாழ்கிறார்கள்.இந்த நிலையில் கணவர் பிரின்ஸ் டுலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது யுக்தா முகி மும்பை போலீசில் குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் செய்தார். மேலும் பிரின்ஸ் டுலி தன்னை இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமரசத்துக்கு மறுப்பு
இந்த நிலையில் பிரின்ஸ் டுலி மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கேட்டு செசன்சு கோர்ட்டில் மனு செய்தனர். பிரின்ஸ் டுலிக்கு முன்ஜாமீன் மறுத்த கோர்ட்டு, அவரது குடும்பத்துக்கு வழங்கி உத்தரவிட்டது. அதே நேரத்தில் பிரின்ஸ் டுலியை போலீசார் கைது செய்யாமல் இருக்க கோர்ட்டு இடைக்கால நிவாரணம் வழங்கியது.கணவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய இந்த இடைக்கால நிவாரணத்தை எதிர்த்து யுக்தா முகி மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். இதேபோல முன்ஜாமீன் கேட்டு பிரின்ஸ் டுலி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சதானா ஜாதவ் முன்னிலையில் நடந்து வருகிறது. இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி சுமூக தீர்வு காணும் முயற்சியில் நீதிபதி ஈடுபட்டார். அவரது உத்தரவின் பேரில் யுக்தா முகியும், பிரின்ஸ் டுலியும் நீதிபதி அறையில் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி நடத்திய விசாரணையில் சமரசம் அடைய இருவரும் மறுத்து விட்டனர்.
மத்தியஸ்தர்
இந்த நிலையில் நேற்று நீதிபதி சதானா ஜாதவ் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது யுக்தா முகி, பிரின்ஸ் டுலி ஆகியோர் தரப்பில், தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தரை நியமிக்குமாறு நீதிபதியை கேட்டு கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மூத்த வக்கீல் ஒருவரை மத்தியஸ்தராக நியமிக்குமாறு சட்ட உதவி குழுவுக்கு உத்தரவிட்டார்.இந்த மத்தியஸ்தர், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு நவம்பர் (அடுத்தமாதம்) 19–ந் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக