நெல்லை: உவரி அருகே தாதுமணல் கொள்ளையால் நம்பியாற்றின் கழிமுக பகுதியே சுரண்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கழிமுக பகுதியை ஆக்கிரமித்துள்ள 20 அடி சாலையை அகற்ற சிறப்புக் குழு தலைவர் உத்தரவிட்டார்.நெல்லை மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை தொடர்பாக சிறப்புக் குழு தலைவர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று 3ம் நாளாக உவரி அருகே வல்லான்விளை பகுதியில் ஆய்வு நடத்தினர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நம்பியாறு இந்த பகுதி வழியாக சென்று கடலில் கலக்கிறது. நம்பியாறு கடலுடன் கலக்கும் கழிமுக பகுதி முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டி மணல் அள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தோண்டி தாதுமணல் அள்ளப்பட்டிருப்பதை ஆய்வுக்குழு தலைவர் பார்வையிட்டார். மேலும் ஆற்று நீர் கடலில் கலக்க முடியாத வகையில் 20 அடி அகலத்தில் சாலை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சாலையை உடனே அகற்ற ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டார்.ராதாபுரம் தாலுகாவில் உள்ள கடற்கரை பகுதிகள் அனைத்தும் மணல் ஆலை கட்டுப்பாட்டில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. அனைத்து பகுதிகளிலும் டோல்கேட் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மணல் ஆலை ஊழியர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் வாகனங்கள் எதுவும் அங்கு செல்ல அனுமதி அளிப்பதில்லை. சிறப்புக் குழு தலைவர் ககன்தீப் சிங் பேடி ஆய்வுக்கு செல்லும் போது, உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்பதை தவிர்த்தார். பெரும்பாலும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்ட அதிகாரிகளிடமே ஆய்வு குறித்து வினவினார். கேள்விகளை அடுக்கிய ‘பேடி‘ககன்தீப்சிங் பேடி வல்லான்விளையில் ஆய்வு செய்த போது, மணல் ஆலை தொழிலாளர்கள் அவரிடம் மனு கொடுத்தனர்.
‘‘தாது மணல் தொழிலுக்கு தடை விதித்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்‘‘ என்றனர். அவர்களிடம் ககன்தீப்சிங் பேடி, ‘‘நான் வருவது எனக்கே தெரியாது. உங்களுக்கு எப்படி தெரியும்? யாராவது மனு கொடுக்கும் படி உங்களிடம் சொன்னார்களா?‘‘ என்று மடக்கினார். ‘‘இங்கு நீங்கள் எப்படி மணல் அள்ளுவீர்கள்‘‘ என்று ககன்தீப்சிங் பேடி கேட்டதற்கு அவர்கள், ‘‘சிறிய சட்டியில் அள்ளுவோம், பின்னர் அரித்து எடுப்போம்‘‘ என்றனர். அதில், ‘‘எவ்வளவு தாது மணல் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா‘‘ என்றார். அதற்கு, ‘‘கொஞ்சம் தான் கிடைக்கும்‘‘ என்றனர்.இவ்வாறு அவர்களிடம் பல கேள்விகளை கேட்டார். ஆனால் பல இடங்களில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளியது கண் கூடாக தெரிந¢தது. இதை சிறப்புக் குழுவும் கவனமாக ஆய்வில் எடுத்துக் கொண்டது.
கோயில் நிலங்களும் கபளீகரம்
நெல்லை மாவட்டம் உவரி அருகே காரிகோயில் பகுதியில் தாது மணல் அள்ளிய இடங்களை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு காரிசாஸ்தா காருடையார் கோயிலுக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 19.25 ஏக்கரில் முறைகேடாக தாதுமணல் அள்ளப்பட்டுள்ளதாக 2012ம் ஆண்டு செப்டம்பரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் உவரி போலீசில் புகார் செய்திருந்தார். இதன் பேரில் மணல் நிறுவனம் மீது உவரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் வி.வி.மினரல் நிறுவனம் அனுமதியை மீறி தாது மணல் அள்ளியதும், தாது மணல் அள்ள அரசு தடை விதித்த பிறகும¢ டோல் கேட்டை அகற்றாமல் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. தாது மணல் கொள்ளையால் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக செழித்து வளர்ந்த பனைமரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தது கண்டு சிறப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக