புதன், 23 அக்டோபர், 2013

அரவிந்தர் ஆசிரம பாலியல் புகார் விசாரணையை தொடங்கிய புதிய நீதிபதி குழு

பாலியல் புகார்: அரவிந்தர் ஆசிரமத்தில் விசாரணையை தொடங்கிய புதிய நீதிபதி குழு புதுச்சேரி: பாலியல் புகார் எழுந்துள்ள புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி விசுவநாத அய்யர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் உள்பட பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். அவர் விசாரணை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷனை உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டது. அந்த விசாரணை குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்தனர். ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தன் உடல்நிலை காரணமாக இந்த விசாரணை குழுவிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து விசாரணை குழுவுக்கு கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி விசுவநாத அய்யர் புதிதாக நியமிக்கப்பட்டார். இன்று அவரது தலைமையில் விசாரணை குழுவினர் புதுவை வந்தார்கள். புதுவை தலைமை செயலகத்தில் உள்ள பயிற்சி கூடத்தில் காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. மற்றும் ஆசிரம ஆதரவாளர்கள் 30 பேர், ஆசிரம எதிர்ப்பாளர்கள் 30 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினார்கள். அரைமணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று விசுவநாத அய்யர் தெரிவித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: