1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000 அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.
அமெரிக்க அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், செலவுகளைச் சமாளிக்க, அதாவது பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையிலிருந்து எவ்வளவு கடன் பெற வேண்டும் என்ற வரம்பு தீர்மானிக்கப்படும். அரசின் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட இந்த வரம்பையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய நிலை உருவானால், அதற்கு அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
காங்கிரசின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரம்பையும் தாண்டிக் கடன் வாங்குவது அமெரிக்க அரசிற்குப் புதிய விசயமுமல்ல. ஆனால், கடந்த ஜூலை மாத இறுதியில் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழல் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டபொழுது, அதற்கு காங்கிரசில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்கள். கடன் வரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக, அமெரிக்க அரசு தனது செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது, குடியரசுக் கட்சி.
குடியரசுக் கட்சியின் நோக்கம், அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதெல்லாம் அல்ல. அக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபொழுது போர்ச் செலவுகளுக்காகவும், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையை ஈடுகட்டுவதற்காகவும் ஏழு முறை கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது கடன் சுமை அதிகரிப்பது பற்றி அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கும்பல் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அமெரிக்க அரசு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் அற்பமான மானியத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையையுடைய குடியரசுக் கட்சியும் தீவிர வலதுசாரிக் கும்பலும் இக்கடன் நெருக்கடியை தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக இப்பொழுது பயன்படுத்திக் கொண்டன.
4 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என நிதியாதிக்கக் கும்பல்கள் நிர்பந்தித்து வந்த வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 2.1 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்குச் செலவுகளைக் குறைப்பது, செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகையைத் தொடருவது என்ற சமரசத்தின் அடிப்படையில் கடன் வரம்பை உயர்த்திக் கொள்ள அமெரிக்க காங்கிரசில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 1.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்ட இப்பொழுதே திட்டம் தயாராகிவிட்டது; மேலும், 1.5 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு மானியத்தைக் கழித்துக் கட்டுவது பற்றி ஆலோசனை கூற, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், நிதியாதிக்கக் கும்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவைக் குறைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அக்கும்பலின் கையாட்களுள் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (Standard and Poor) என்ற தர நிர்ணய நிறுவனம், அமெரிக்காவின் கடன் வாங்கும் தகுதியினை “ஏஏஏ” லிருந்து “ஏஏ+” ஆகக் குறைத்து, அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.
அமெரிக்க அரசின் கடன் உயரக் காரணமென்ன?
2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டது. குறிப்பாக, 2008 இல் ஏற்பட்ட வீட்டு மனைக் கடன் குமிழி வெடிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்டதைப் போல பெருமந்தத்தில் சிக்க வைத்தது. இப்பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் சரிந்து வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அரசிற்குத் தனது செலவுகளை ஈடுகட்ட 307 கோடி அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தபொழுது, அம்மாதத்தில் அரசின் வரி வருமானம் வெறும் 172 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. அரசின் கடனை அதிகரிக்காமல், அரசு தனது செலவுகளை நிர்வாகச் செலவுகள், இராணுவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றை ஈடுக்கட்ட முடியாது என்ற நிலையை இந்தப் பொருளாதார மந்தம் அமெரிக்கா மீது திணித்தது.அமெரிக்க அரசின் வரி வருமானம் வீழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவது என்ற பெயரில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மேல்தட்டுப் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கினார். அவர் அளித்த வரிச் சலுகையால் 2003 தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய அமெரிக்க அரசிற்கு 1.7 இலட்சம் கோடி டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டது. புஷ்ஷுக்குப் பின் பதவிக்கு வந்த ஒபாமா இந்த வரிச் சலுகையை ரத்து செய்யாததோடு, அதனை 2013ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
இவ்வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, டாட் காம் பங்குச் சந்தை சூதாட்ட வீழ்ச்சி மற்றும் இரட்டை கோபுரத் தாக்குதல்களால் வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முதலீட்டு வங்கிகளுக்கும், வேலியிடப்பட்ட நிதியங்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. 2008இல் வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்ததையடுத்து, புஷ் 700 கோடி அமெரிக்க டாலர்களையும் அவரையடுத்து வந்த ஒபாமா 814 கோடி அமெரிக்க டாலர்களையும் அமெரிக்க வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும் மானியமாகவும், நிதியுதவியாகவும் அளித்தனர்.
அரசின் வரி வருமானம் சுருங்கிக்கொண்டே வந்த அதேசமயத்தில், அமெரிக்காவின் இராணுவச் செலவோ அதற்கு எதிர்விகிதத்தில் ஏறிக் கொண்டே போனது. தற்
சமயம் அமெரிக்காவின் வருடாந்திர மொத்த இராணுவச் செலவு 1.2 இலட்சம் கோடி டாலர்களைத் தொட்டுவிட்டது. இது அமெரிக்காவின் பட்ஜெட்டில் 40 சதவீதமாகும். இந்த வருடாந்திர இராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்காக மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 1 இலட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆக்கிரமிப்புப் போருக்காக மட்டும் மாதமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும், லிபியா மீதான தாக்குதலின் மூலம் ஒரு புதிய போர் முனையைத் திறந்திருக்கிறது, அமெரிக்கா. உலகைத் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைப்பதற்காகவே இந்த இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவுகளை வீங்க வைத்துக் கொண்டே போகிறது, அமெரிக்க ஆளும் கும்பல்.
அமெரிக்க வங்கிகள் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி; இந்நெருக்கடியையொட்டி அமெரிக்க வங்கிகளுக்கும், தொழிற்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மானியம், நிதியுதவி, வரிச் சலுகை மற்றும் அமெரிக்காவின் போர்ச் செலவுகள் இவைதான் 2007 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாக இருந்த அந்நாட்டின் கடன் சுமையை இன்று 72.4 சதவீதமாக வீங்க வைத்துள்ளன. குறிப்பாக, முதலீட்டு வங்கிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்ட மானியத்தால் மட்டும் அமெரிக்காவின் கடன் சுமை 3.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அதிகரித்தது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் 70 சதவீதம் அமெரிக்காவின் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளால்தான் ஏற்படுகிறது. இந்தச் செலவுகளில் ஒரு பைசாவைக்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்க வலதுசாரி கும்பல், சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் செலவு கட்டுப்பாடின்றிச் செல்வதாகவும் தகுதியற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும் கூறி, பாசிச புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்ட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும் ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும், அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் வேறுபட்டு நின்று மோதிக் கொள்கிறார்கள்.
“தியாகம் செய்!” ஒபாமாவின் குரூரம்
அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்க வைப்பதுதான் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக இன்றும் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே வேலைவாய்ப்பும், தொழிலாளர்களின் சம்பளமும் தேங்கிப் போயிருந்த நிலையில், அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்கச் செய்வதற்காகவே கடன் அட்டைகள் (Credit cards), வீட்டு அடமானக் கடன், கார் கடன், அவற்றுக்கான மானியங்கள் வாரி வழங்கப்பட்டன; இவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இந்தக் குமிழி உடைந்தபொழுது, அது அமெரிக்க அரசை மட்டுமல்ல, பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களையும் போண்டியாக்கியதோடு, கடன்காரர்களாகவும் ஆக்கியது.2005க்கும் 2009க்கும் இடைபட்ட காலத்தில் கருப்பின மக்களின் சொத்தின் மதிப்பு 53 சதவீத மும், அமெரிக்காவில் குடியேறியுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களின் சொத்து மதிப்பு 66 சதவீதமும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் சொத்தின் மதிப்பு 16 சதவீதமும் சரிந்து வீழ்ந்தது. வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்ததால், ஏறத்தாழ 1 கோடி அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வீட்டு அடமானக் கடன் கொடுத்த வங்கிகள் தங்களின் கடனுக்கு ஈடாக இச்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டன.
வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்த பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தையடுத்து, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 51 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தற்சமயம் ஏறத்தாழ 2.5 கோடி அமெரிக்கத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்றியுள்ளனர்.
அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படியே, தற்பொழுது 4.4 கோடி அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; 4.9 கோடி அமெரிக்கர்கள் “உணவுப் பாதுகாப்பின்றி” வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையிலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாத அமெரிக்க அரசு, பட்டினி என்ற வார்த்தையை அரசின் பதிவேடுகளில் பயன்படுத்துவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து ஒழித்துவிட்டது.
சமூக ஏற்றத்தாழ்வுகளோ கடந்த பத்தாண்டுகளில் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. “அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்தான் இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தின் 40 சதவீத்தைக் கட்டுப்படுத்துவதாக’’க் கூறுகிறார், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ். “அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 24 சதவீதத்தை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றி அனுபவித்து வருவதாகவும்; 1980களில் ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் சராசரி வருமானத்தைவிட 42 மடங்கு அதிக வருமானம் ஈட்டிவந்த அமெரிக்கத் தொழிற்கழகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2001இல் 531 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும்; 1980 தொடங்கி 2005ஆம் ஆண்டு முடிய ஈட்டப்பட்ட அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பகுதியை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றிக் கொண்டுவிட்டதென்றும்” கூறுகிறார், மற்றொரு பொருளாதார அறிஞரான நிக்கோலஸ் கிறிஸ்டாஃப்.
‘‘அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும்பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்” என அமெரிக்காவின் ‘ஜனநாயகத்தை’ப் புட்டு வைக்கிறார், மிகப் பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட். “அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றத்தாழ்வுஅமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்” எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும்பொழுது, கருப்பின அதிபர் ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூற முடியும்.
இது சாதாரண நெருக்கடியல்ல; மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடி
அரசின் செலவுகளை அதிகப்படுத்தியும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தியும் இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என கெய்னிசிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் தொழிற்துறையில் மூதலீடு செய்வதில்லை. கொள்ளை இலாபம் தருகின்ற நிதிச் சந்தைச் சூதாட்டத்தில்தான் முதலீடு செய்கின்றனர். உள்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபடுவதைவிட, அயல்பணி ஒப்படைப்பையும் (Outsourcing) இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும்தான் அவர்கள் இலாபகரமானதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்த பிறகு தமக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் நிதியுதவிகளையும் இக்கார்ப்பரேட் முதலாளிகள் நலிவடைந்து போன தமது போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், உலகெங்கிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் முதலீடு செய்யவோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ பயன்படுத்தவில்லை.பற்றாக்குறையைக் குறைக்க தொழில்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவது, கார்ப்பரேட் வரி வருமானத்தை அதிகப்படுத்துவது என்ற கொள்கையை அமெரிக்க ஆளும் கும்பல் தனது வரலாறு நெடுகிலும் தீண்டத்தகாததாகவே கருதி வருகிறது. இதற்கு மாறாக, மானியத்தை வெட்டுவது, ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை வெட்டுவது என்ற தாராளவாதக் கொள்கையைத்தான் இந்தக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை, இந்தத் தீர்வு அரசு செலவுகளைக் குறைப்பது மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் எனத் தெரிந்திருந்தும், இந்தச் சுய அழிவுப் பாதையைத்தான் அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் அமல்படுத்தத் துணிந்துள்ளது. அமெரிக்க முதலாளிவர்க்கம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்ற கேள்விக்கு, அப்படிச் சிந்திக்கவில்லையென்றால், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்க முடியாது என்ற லெனினினுடைய விளக்கத்தைதான் பதிலாகத் தர முடியும்.
அமெரிக்காவில் 2000க்குப் பின் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், குறிப்பாக வீட்டுமனைக் கடன் குமிழி வெடிப்பு பிரம்மாண்டமானதாக மட்டுமின்றி, உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தையையும், தொழிற்துறையையும் குப்புறக் கவிழ்க்கும் அளவிற்கு சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. தற்பொழுது தீவிரமான இந்தக் கடன் நெருக்கடியும்கூட, பல நாடுகளின் பங்குச் சந்தைகளைச் சரியச் செய்தது. இதன் காரணம், நிதி மூலதனப் பாய்ச்சல் உலகளாவிய தன்மை பெற்றிருப்பதும்; சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதும்தான்.
தற்பொழுது உலகெங்கிலும் நடைமுறையில் இருந்து வரும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையானது, அனைத்து நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது; பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது; உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இம்மூன்றும்தான் நெருக்கடிகள் தோன்றுவதற்கும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.
‘‘உலகமயத்தின் பின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைக் குவியச் செய்கிறது. இச்செல்வம் நிதி மூலதன உலகில் புகுந்து பல ஆபத்தான வழிமுறைகளின் மூலம் எடுத்துக்காட்டாக, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் இலாப வேட்டையாடுவதற்காகச் சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருக்குகிறது; அடுத்தடுத்த குமிழிகளை உருவாக்குகிறது.”
‘‘அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் குவியும் அந்நியச் செலாவணி உபரியானது மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுவதால், இம்முதலீடு வீட்டுமனைக் கடன் போன்ற குமிழிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.”
‘‘கடந்த முப்பதாண்டுகளில் உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளதோடு, அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகவும் இயங்கி வருகிறது. இது சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருகச் செய்தும் பின்னர் வெடிப்பை ஏற்படுத்தியும் நிதி உலகில் மட்டுமின்றி, உண்மைப் பொருளாதாரத்திலும் ஏற்ற இறக்கங்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.”
இம்மூன்று அடிப்படையான காரணிகள்தான், சமநிலையின்மைகள்தான் நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருவதாகக் கூறுகிறார், மைக்கேல் லிம் மாஹ் ஹுய் என்ற பொருளாதார அறிஞர். இம்மூன்று சமநிலையின்மைகள் இல்லாத தனியார்மயம் தாராளமயத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது எனும்பொழுது, இக்கட்டமைப்பில் நெருக்கடிகள் தோன்றுவதையும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதையும் தவிர்த்துவிட முடியாது.
அமெரிக்காவின் ஒட்டுண்ணித்தனம்
‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும். இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.
டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.
பொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்காத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.
டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.
உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.
டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.
அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.
இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக