வெள்ளி, 30 செப்டம்பர், 2011

சந்தன வீரப்பன் பெயரால் வனத்துறை மேற்கொண்ட கற்பழிப்பு கொலை கொள்ளை

1992-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களுக்கு 2011 செப்டம்பர் 29-ல் தண்டனை கிடைத்திருக்கிறது.  பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. காலம் கடந்து கிடைத்த தீர்ப்பு ,

 இதற்காக அந்தக் கிராம மக்களும், மலைவாழ் அமைப்புகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ந்து போராடியதால்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, இப்போதாகிலும் நியாயம் கிடைத்திருக்கிறது.  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதுடன், இவர்களில் 17 பேருக்கு அந்தக் கிராமப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இவர்கள் எந்த அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை, இப்போதாவது உலகம் அறிந்துகொள்ள வழிகோலியிருக்கிறது.  மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினர் மீது தாக்குதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் நடக்கவே செய்கின்றன. ஆனால், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலராக மட்டுமே இருப்பார்கள். வாச்சாத்தி போன்று ஒரு கிராமம் முழுவதுமே பாதிக்கப்படுவது மிக அரிது.  மணக்கும் சந்தனக் கட்டைக்காக தமிழ்நாடு வனத்துறை நாறிப்போனதைப் போன்று இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது.  கிராமத்தில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வந்தது என்று கூறிக்கொண்டு, வனத்துறையினர் 155 பேர், காவல்துறையினர் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என்று 269 பேர் ஒரு மலைக் கிராமத்தில் புகுந்தனர். சந்தனக்கட்டை குறித்துத் தகவல் வந்ததைப்போல, அந்தக் கிராமத்தில் இருந்த ஆண்கள் அச்சத்தில் வெளியேறிவிட்டார்கள் என்ற தகவல் மட்டும் இவர்களுக்குக் கிடைக்காமலா இருந்திருக்கும்? ஆனாலும், அத்தனை பேரும் அந்தச் சிறிய கிராமத்தில் புகுந்து 90 பெண்கள், 15 முதியவர்கள், 28 குழந்தைகளை "சிறைப்பிடித்தனர்'. இதுவே வனத்துறைக்கு மிகப்பெரிய அவமானம்.  ""அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் முறைகேடாக சந்தனக்கட்டையை வெட்டிக் கடத்திக் கொண்டிருந்தபோது, இவர்கள் இருவரும் எல்லை கடந்துபோய் மரம் வெட்டியதில் ஏற்பட்ட மோதல்தான் இந்த ரெய்டுக்கு காரணம்'' என்று பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தின் பெருமாள் (75 வயது) இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றால், சந்தனக்கடத்தல் வீரப்பனை யார் வளர்த்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தி, பெண்களைத் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வனத்துறை அதிகாரிகளின் "தொழில்போட்டி' இருந்திருக்கிறது.  இந்தக் கிராம மக்கள் சந்தனக்கட்டைகளை வெட்டினார்கள் என்பது வனத்துறையின் வாதமாக இருந்தாலும், அது உண்மையாகவே இருந்தாலும், இவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காகவும் கூலிக்காகவும் மரங்களை வெட்டிக் கொடுத்தவர்களாக இருந்திருப்பார்களேயொழிய, சந்தன மரங்களை விற்றுக் கொழித்தவர்கள் அல்ல என்பது சர்வநிச்சயம். இந்த உண்மை தெரிந்திருந்தும், இந்த மக்கள் மீது இத்தனை வன்மத்துடன், இத்தனை பேர் கும்பலாகச் சென்று வன்கொடுமை செய்கிறார்கள் என்றால், சந்தனமரத்தில் கிடைத்த லாபத்தின் பெருந்தொகை எவ்வளவாக இருந்திருக்கும்! சந்தன எண்ணெய்க் கூடத்தில் சந்தனக்கட்டைகள் தீப்பற்றி எரிந்துபோனதாகச் சொல்லப்படும்போது, இவை கணக்குக் காட்டப்படுவதற்காக வனத்துறையால் நாடகம் ஆடப்பட்டதோ என்று சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே?  இந்தியாவின் மையப் பகுதியான தண்டேவாடாவிலும், தெலங்கானாவிலும் இவ்வாறு பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையின் விளைவுதான் இன்று மாவோயிஸ்ட் பிரச்னை. இந்திய அரசும், ராணுவமும்கூட அங்கே உள்ளே நுழைய முடியாத அளவுக்குப் பெரும்பிரச்னையாக மாவோயிஸ்ட் பிரச்னை உருவெடுக்கக் காரணம், இதுபோன்ற சில சம்பவங்களும், வனத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சுயநலமுமேயாகும்.  ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய தீவிரவாத அமைப்புகள் தலையெடுக்கவில்லை. சில நேர்வுகளில் ஒரு சிலர் தீவிரவாதத்தில் இறங்கியிருந்தாலும்கூட அவர்கள் மிகச் சிலராகவும் அவர்களுக்கு மலைவாழ் மக்களின் ஆதரவு இல்லாமலும் போனதற்குக் காரணம், 19 ஆண்டுகள் ஆனாலும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களாகத் தமிழகப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த மக்களின் பொறுமைக்குத் தமிழகம் தலைவணங்க வேண்டும்.  சந்தன மரத்தின் பெயராலும், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் பெயராலும் வனத்துறையினரும் காவல்துறையினரும் பழங்குடியினர் மீது நடத்திய அத்துமீறல்கள் கொஞ்சமல்ல. வாச்சாத்தி கிராமம் வெளியில் தெரியவந்த மிகச் சில நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், வெளியில் வராத சோகங்கள் இன்னும் பல மலைக்கிராமங்களில் புதைந்து கிடக்கின்றன. அந்த அநியாயங்களுக்குத் தீர்ப்பு வழங்க, கலையாத சாட்சியாய் காத்து நிற்கிறது காடு.  தாமதமானாலும்கூட நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாச்சாத்தி கிராமத்துக்கு நியாயம் வழங்கி இருக்கிறது. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்' என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: