புதன், 28 செப்டம்பர், 2011

சரத்குமார் கட்சி உட்பட ஆறு உதிரி கட்சிகளுடன் அதிமுக கூட்டணி

உள்ளாட்சி மன்ற தேர்தலில், இந்திய குடியரசுக்கட்சி உள்பட 6 தோழமைக்கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது'' என்று, அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க.தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19 ந் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சியான செ.கு.தமிழசன் எம்.எல்.ஏ.வை தலைவராகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்திய குடியரசுக்கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.அதேபோல், அ.தி.மு.க.வுக்கும், தோழமைக்கட்சிகளான பி.வி.கதிரவனை தமிழ் மாநில பொதுச்செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, எஸ்.ஷேக் தாவூத் தலைவராகக்கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி, உ.தனியரசு நிறுவன அமைப்பாளராகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியவற்றுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோல சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடனும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: