வியாழன், 29 செப்டம்பர், 2011

Spectrum அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரணை-சிபிஐ

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபமடைந்த மற்றவர்கள் குறித்தும் விசாரிக்கப் போவதாகவும் சிபிஐ கூறியுள்ளது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கும் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் ரிலையன்ஸ்சுக்கு 9.9 பங்குகள் இருந்தன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது அதில் ரிலையன்ஸ் பங்குகள் இல்லை.

மேலும் ஸ்வான் டெலிகாமில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே ரிலையன்ஸ் டெலிகாமுக்கு பங்குகள் உள்ளதாக சட்ட அமைச்சக ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் ரிலையன்சுக்கு தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இதனால் இந்த வழக்கிலிருந்து ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தை விடுவிக்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரிக்கவுள்ளதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

'வோல்டாஸ் நில விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்துக்கு தொடர்பில்லை':

மேலும் டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சாதகமாக செயல்பட கருணாநிதி குடும்பத்தாருக்கு பரிசாக இடம் வழங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை சிபிஐ மறுத்துள்ளது. வோல்டாஸ் இட விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்துக்கு எந்த தொடர்புமில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சிரேந்திர பிபாரா, மற்றும் ஹரி நாயர் ஆகியோர் 2 ஜி மோசடி் வழக்கில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அப்ரூவராக மாறுவார்கள் என்றும் புதிய தகவல்கள் இவர்கள் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சிபிஐ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் விவகாரம்-மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை:

இந் நிலையில் 2ஜி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக நிதியமைச்சகம் எழுதிய கடிதம் தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி, அரசியல் செயலாளர் அகமத் படேல் ஆகியோருடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர்-பிரணாப்-சிதம்பரம் சந்திப்பு:

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை பிரணாப் சந்தித்தார். அப்போது ப.சிதம்பரமும் உடனிருந்தார்.

சோனியாவுடன் சபாநாயகர் மீரா குமார் சந்திப்பு:

இந் நிலையில் சோனியா காந்தியை இன்று மக்களவை சபாநாயகர் மீரா குமாரும் சந்தித்துப் பேசினார்.

அப்போது பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூத்த அமைச்சர்களும் உடனிருந்தனர்.

ஆனால், இந்தச் சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை: