புதன், 28 செப்டம்பர், 2011

யாழ். சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்கின்றது!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் வைத்து நிரபராதி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொலிஸார் ஏழு பேர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிடின் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவரை கடந்த 19 ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சட்டத்தரணி பொன்.பூலோகசிங்கம் கருத்து தெரிவிக்கையில், “சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படையான உண்மை. அவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரிகள் எமக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.
அவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தாவிடின் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு நேற்றைய எமது கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கத்தினரும் எமக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள். எது எவ்வாறெனினும் சட்டத்தின் முன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.

கருத்துகள் இல்லை: