புதன், 28 செப்டம்பர், 2011

பாதுகாப்பின்றி பல ஆயிரம் கோடி நகை, கொள்ளை அபாயம்

:தமிழகத்தில், பொதுமக்களிடம் நகை அடகு பெற்று, கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறிதும் அமல்படுத்தாமல், அலட்சியம் காட்டும் நிதி நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை நடந்த பின், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீடு பெறுவதைத் தடுப்பது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியபாளையம் சந்திப்பிலுள்ள கே.பி., டவர்சில், "முத்தூட் மினி பைனான்ஸ்' நிறுவனத்தின் கிளை செயல்படுகிறது. இங்கு, தங்க நகை அடகு பெற்று கடன் வழங்கப்படுகிறது. கடந்த 24ம் தேதி காலை, இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களைப் போல நுழைந்த 6 கொள்ளையர்கள், ஊழியர்களைக் கட்டிப்போட்டு 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், துணிகரமாக நடந்த இச்சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்திய தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், திருப்பூர் எஸ்.பி., (பொறுப்பு) ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த நிறுவனத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்த போதிலும், கண்காணிப்பு கேமரா, திருட்டு தடுப்பு அலாரம் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை; ஏன், செக்யூரிட்டி ஆட்கள் கூட நியமிக்கப்படவில்லை.


எவ்விதமான பாதுகாப்பும் இல்லாமலேயே, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தாதது குறித்து, நிதி நிறுவன மேலாளர் மதிவாணனிடம், அதிகாரிகள் கேள்வி எழுப்பிபோது, "எங்களது லாக்கரில் இருக்கும் நகை, பணத்தை இன்சூரன்ஸ் செய்துள்ளோம். திருட்டு, கொள்ளை போனால், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு பெற்றுவிடுவோம். பொதுமக்களுக்குரிய நகை திருப்பி வழங்கப்படும்' என்றார். இவரது பதிலை கேட்ட போலீஸ் அதிகாரிகள், நிதி நிறுவன மேலாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். அவரோ, "எங்களது திருப்பூர் கிளை நிறுவனத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து கிளைகளிலும், இதே நிலைதான் உள்ளது' என்றார்.

பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவம் நடந்த நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதைக் கண்ட உயரதிகாரிகள், கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்டம்தோறும் நிதி நிறுவனங்கள், நகை அடகு நிறுவனங்கள், நகைக் கடைகள், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்களுக்கான பாதுகாப்பை, அவற்றின் உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என, எச்சரித்துள்ள மண்டல ஐ.ஜி., அலுவலகம், வர்த்தகர்கள் மற்றும் நிதி நிறுவனத்தினரை அழைத்து, மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்த, எஸ்.பி.,களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, அரசு, தனியார் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, ஐ.ஜி., அலுவலகம் வழங்கியுள்ள அறிவுரை:
*நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இருப்பு வைத்துள்ள நிறுவனங்களில், கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.
*நிறுவனங்களின் மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். எளிதில் துளையிடும் வகையில், பாதுகாப்பின்றி அமைக்கக் கூடாது.
*பகல், இரவு நேரத்தில், நிறுவனப் பாதுகாப்புக்கு, செக்யூரிட்டி ஆட்களை நியமிக்க வேண்டும்; அவர்கள், இளம் வயதினராக இருப்பது அவசியம்.
*செக்யூரிட்டி ஆட்கள், இரவில் விழிப்புடன் பணியாற்றுகிறார்களா என்பதை, திடீர் சோதனை மூலம் நிறுவனத்தினர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தரமான, அங்கீகரிக்கப்பட்ட, வலுவான "லாக்கர்'களில் மட்டுமே பணம், நகை இருப்பு வைக்கப்பட வேண்டும். லாக்கர் மற்றும் நிறுவனத்தின் முன் கதவு பூட்டை உடைக்கும்போது எளிதாக உஷார் தகவலை மொபைல்போனில் பெறும் வகையில், "திருட்டு தடுப்பு அலாரம்' உள்ளிட்ட அதிநவீன சாதனங்களைப் பொருத்தியிருக்க வேண்டும்.
*திருட்டு முயற்சி நடக்கும்போது, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு, மொபைல்போனில் "அவசர கால போன் அழைப்பு' செல்லும் வகையில், சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
*தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் பலவற்றில், மேற்கூரை, பக்கவாட்டுச் சுவர் உறுதியற்றதாக உள்ளன. இதனால், உள்ளே லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் நகை, பணத்துக்கு உரிய பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது; போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, கூட்டுறவு வங்கிகள் அமல்படுத்த வேண்டும்.
*கடை, வர்த்தக நிறுவனங்களின் "ஷட்டருக்கு' இரு பக்கங்களிலும், பூட்டு பொருத்துவது நல்லது. இரவில் போதிய வெளிச்சம் இருக்கும் வகையில், மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.
*பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தற்காப்பு வழிமுறை குறித்தும், நிறுவன ஊழியர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.இவ்வாறு, ஐ.ஜி., அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

அலட்சியத்தின் பின்னணி இதுதான்! போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், முத்தூட் உள்ளிட்ட நகை அடகு நிதி நிறுவனங்கள், பல ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகின்றன. "கார்ப்பரேட்' நிறுவனங்களாகச் செயல்படும் இவை, போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளை அமல்படுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றன. கண்காணிப்பு கேமரா பொருத்தி பராமரிக்கவும், தனியார் செக்யூரிட்டி ஆட்களை நியமிக்கவும் மாதம்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் எனக் கருதி, தவிர்த்து வருகின்றனர்.

பாதுகாப்புக்காக இத்தொகையைச் செலவிடத் தயங்கும் நிறுவனங்கள், லாக்கரிலுள்ள நகை, பணத்துக்கு இன்சூரன்ஸ் செலுத்துவதில் மட்டுமே குறியாக உள்ளன. நகை, பணம் திருட்டுப் போய்விட்டால், இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்பதே, இவர்களின் எண்ணம். பெரிய அளவிலான கொள்ளை நடக்கும்போதும் கூட, "இவர்கள்' எவ்விதமான பரபரப்பும், பதட்டமும் காட்டுவதில்லை; எப்.ஐ.ஆர்., நகல் கொடுத்தால் போதும், வாங்கிச் சென்று இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு பெறத் தயாராக உள்ளனர்.அதேவேளையில், போலீசுக்குத் தான் பெரும் பிரச்னை. பெரிய அளவிலான கொள்ளை நிகழும்போது, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், பாதுகாப்பளிக்க போலீசார் தவறிவிட்டதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. வழக்கில் தொடர்புடைய கிரிமினல்களை கைது செய்யும் வரை, எங்களின் நிம்மதி போய்விடுகிறது.

தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அடகு நிறுவனங்களின் அலட்சியத்தை முடிவுக்கு கொண்டு வர, தற்போது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். எவ்விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்றாத நிலையில், ஒரு நிறுவனத்தில் திருட்டு, கொள்ளை நடந்தால், பறிபோன சொத்துகளுக்கு இழப்பீடு வழங்கக்கூடாதென, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.பொதுமக்களின் நகை, பணத்தைப் பெற்று, தம் பொறுப்பில் வைத்திருக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவறாது அமல்படுத்த வேண்டும் என்று, இந்திய ரிசர்வ் வங்கியும் நிர்பந்திக்க வேண்டும்; அதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: