சனி, 1 அக்டோபர், 2011

முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் அவர்களது பெற்றோர்களிடம் கையளித்தார்.
அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் 1800 பேரும் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டதுடன் அமைச்சர்கள் சந்திரசிறி கஜதீர, நிமல் சிறிபால டி சில்வா, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட ராஜதந்திரிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மூன்று இலட்சம் மக்களில் 12,000 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு புனர்வாழ்வுடன் எதிர்கால வாழ்க்கைக்கான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலானோர் கட்டம் கட்டமாக சமூகத்துடன் இணைக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 1,800 பேர் ஒரே தடவையில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் எந்த வித தடையுமின்றி உணவு உட்பட சகலதும் நமக்குக் கிட்டியதாகவும் அதிகாரிகள் தம்மை மிக அன்புடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
தாம் தம் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் இந்த நாள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்து ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் தமக்கும் புனர்வாழ்வளித்த படை அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களின் சார்பில் செல்வராஜா செல்வதீபன் நன்றி கூறி உரையாற்றிய போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ் வளித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் சிறந்த தொழிற் பயிற்சிகளையும் சமூகம் தொடர்பான தெளிவான அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்.
தாம் முதலாவதாக ரயிலில் பயணம் செய்து தெற்கில் காலி, மாத்தறை, கதிர்காமம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போது அங்குள்ள சகோதர இன மக்கள் தம்மை உபசரித்த விதம் பிரமிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இனங்களை ஐக்கியப்படுத்தும் ஜனாதிபதியின் சமாதானச் செயற்பாடுகளைத் தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: