வியாழன், 29 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்கு வடிவேலு?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.
விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

"முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே," என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: