புதன், 28 செப்டம்பர், 2011

மண்ணின் மகிமை: வட மாகாண காணிப்பதிவு விரைவில் ஆரம்பம்

இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் மண்ணின் மகிமை காணி உரித்துப்பதிவு சான்றிதழ் வழங்கும் திட்டமானது வட மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் சகல காணித்துண்டுகளுக்குமான வரைபடம் நில அளவைத்திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு காணித்துண்டுக்கும் தனியான அடையாள இலக்கம் வழங்கப்படும்.

குறித்த காணித்துண்டுக்கான உரிமையாளரை ஓர் விசாரணையின் பின் தீர்மானித்து அவருக்கு காணியின் உரிமையை பதிவு செய்து அரச உத்தரவாதத்துடன் ஓர் உரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

இது தவிர ஏனைய மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற காணிப்பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக காணி ஆனைணயாளர் நாயகத்தினால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்களையும் உரிய பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வேலணை பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளான மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள காணிகளைப் பதிவு செய்யும் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வேலணை பிரதேச செயலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான படிவங்களின் எண்ணிக்கையினை அப்பிரிவு கிராம அலுவலர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தங்களது காணி உரித்தை பதிவு செய்து அரச உத்தரவாதத்துடன் வழங்கப்படும் உரித்துச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மாகாண காணி நிர்வாகத்திணைக்களம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறும்,

மேலதிக விபரம் தேவைப்படுவோர் www.bimsaviya.gov.lk எனும் இணையத்தளம் அல்லது npland@sltnet.lk (இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்) எனும் மின்னஞ்சல் மற்றும் 021-2220836, 021-3215539 தொலைபேசி மூலம் தெடர்பு கொள்ளலாம் என வடமாகாண சபை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: