வியாழன், 29 செப்டம்பர், 2011

வெளியில் வரலாமா; கைது செய்வீர்களா? அதிகாரிகளிடம் கேட்கும் தி.மு.க.,வினர்!

கோவை :உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்த துவங்கியிருப்பதால், நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய நபர்களை வேட்டையாடி கைது செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக இடைவேளை விட்டது போல தெரிகிறது. கைதுக்கு பயந்து மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்த தி.மு.க.,பிரமுகர்கள் பலரும், "நாங்கள் வெளியில் வரலாமா; வந்தால்... கைது செய்வீர்களா ?' என, தங்களுக்கு நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தபடி உள்ளனர்.


தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான தனியார் நிலங்கள் அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளால் அத்துமீறி அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் தோறும் செயல்படும் "நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைபிரிவு' விசாரிக்கிறது. மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இவ்வழக்குகளில் மாஜி அமைச்சர்கள், மாஜி எம். எல்.ஏ.,க்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 70 சதவீத புகார் மனுக்களின் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீசில் மட்டும் 209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும் பலர் தேடப்படுகின்றனர். நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய தி.மு.க., பிரமுகர்கள் பலரும் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனு தாக்கலும் நடந்து கொண்டிருக்கிறது. இரு மாதங்களாக நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டி வந்த போலீசாரின் கவனம் தேர்தலுக்கான பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது.மாநகர போலீஸ் மற்றும் மண்டல போலீஸ் ஐ.ஜி., அலுவலகங்களில் போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர போலீசில் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நேற்று நடந்தன. இதை தொடர்ந்து, தமிழக போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.

இதில் பங்கேற்கவுள்ள போலீஸ் உயரதிகாரிகள், தங்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு திறம்பட அமல்படுத்துவது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை எங்கெங்கு நேரிடும், அவற்றை சமாளிக்க எவ்வளவு போலீசார் தேவைப்படுவர் என்பது குறித்த தகவல்களை திரட்டும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊர் திரும்பும் தி.மு.க., வினர்: நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கடந்த ஒரு மாதமாக போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் தி.மு.க.,வினர் பலரும், உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற கட்சித் தலைமையின் உத்தரவுப்படி "வெளியே' தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு நன்கு அறிமுகமான போலீஸ் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு, "நாங்கள் இப்போது ஊருக்கு திரும்பலாமா, தேர்தல் பணியில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதா?' என விசாரித்தபடி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் உயரதிகாரிகள், உளவு போலீசாரை முடுக்கிவிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட எஸ்.பி., ஒருவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியை கவனிக்க வேண்டியிருப்பதால் பணிப்பளு சற்று கூடியிருக்கிறது. அதே வேளையில், நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைகள் தங்கு தடையின்றி தொடரும்; அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்ற வழக்கில் தேடப்படும் நபர் எந்த இடத்தில் தென்பட்டாலும் உடனடியாக கைது செய்யப்படுவார்' என்றார்.

கருத்துகள் இல்லை: