வெள்ளி, 30 செப்டம்பர், 2011

காணிப்பதிவு: இடைநிறுத்துமாறு சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்

காணிப்பதிவால் தமிழர்களுக்கு தொந்தரவு: இடைநிறுத்துமாறு சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம்
காணியமைச்சினால் காணிகள் பதிதல் சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்த சங்கரி வழமைப்போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் முழு வடிவத்தை கீழே காண்க..
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ்,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
30-09-2011

காணியமைச்சினால் காணிகள் பதிதல் சம்பந்தமாக
கௌரவ ஐனாதிபதி அவர்களுக்கு,
மக்களின் சொந்தக் காணிகள், நம்பிக்கைச் சொத்தாக அல்லது வேறு விதமாக பெறுப்பேற்றிருக்கும் காணிகள் அத்தனையையும் அரசு பதிவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

காணி அபிவிருத்தி அமைச்சினால் பி.எஸ்.01.2011 என்னும் இலக்கம் கொண்ட பத்திரம் மூலம் காணி சொந்தக்காராகளிடமிருந்து காணிகளைப் பதியும் விபரங்களை அவ்வளவு சுலபமாக எவராலும் சேகரிக்கவும் முடியாது. மக்கள் தருவது கடினமானதாகும். மக்கள் இத்திட்டத்தை நியாயப்படுத்தவும் முடியவில்லை.
அவர்களுக்கு எவ்வித பிரயோசனம் இருப்பதாக அவர்கள் உணரவும் இல்லை. இதை மேலும் அவர்களுக்கு தொந்தரவு தரும் விடயமாகவே மக்கள் கருதுவதோடு இதை அரசாங்கம் வேறு ஒரு நோக்கத்தோடு செய்வதாகவும் நம்புகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசின் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனதை குழப்பி அமைதியற்ற வாழ்வை ஏற்படுத்தியது.

இத்திட்டத்தை நாடு முழுவதிலும் செயற்படுத்த அரசு உத்தேசித்திருப்பின் பல ஆண்டுகளாக இடம் பெயராமல் சொந்த வீடுகளில் மக்கள் சுமூகமாக வாழ்ந்த அம்மாவட்டங்களில் முதலில் ஏன் இத்திட்டம் செயற்படுத்தக் கூடாது. ஆனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினாலும் அடிக்கடி இடம் பெயர்வினாலும் மக்கள் போதியளவு பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். சிலர் தம் வீடுகளில் இல்லை.

சிலர் தம் சொத்துக்கள் அத்தனையோடும் சேர்த்து பல்வேறு ஆவணங்களையும் இழந்துள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளனர். மரணசாசனம் எதுவும் விட்டுச் செல்லாது இறந்துவிட்டனர். மரணச் சாதனம் எதுவும் விட்டுச் செல்லாது இறந்தவர்களின் உருத்துத்தாரர்கள் சொத்துக்கும் தமக்கும் உரிமை உண்டென அறியாதவர்களாக உள்ளனர்.

சொத்துக்களைவ விட்டு இறந்த பிள்ளைகளின் சொத்துக்களுக்கு பலர் உரிமைகோரக் கூடும். இது போல் பல சிக்கல்கள் நிறைந்த பிரச்சனைகளம் உண்டு. சில சொத்துக்களால் ஏற்படும் பிரச்சனைகளக்கு காணி அமைச்சரால் தீர்வுகாண முடியாது. அத்தகைய பிரச்சினைகளை சிவில் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் தலையிடாமல் அப்பிரச்சனைகளை நீதிமன்றங்களில் நீதிபதிகள் தீர்த்து வைக்கட்டும்.

எற்கனவே ஏறக்குறைய உடைமைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்கள் இத்திட்டத்தால் தாம் மேலும் பலவற்றை இழக்கலாம் என அஞ்சுகின்றனர். இத்திட்டம் ஒர் பயன்மிக்கதாக இருக்குமென நான் நம்பவில்லை. அவரவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை அவர்களிடம் விட்டுவிட்டால் எவரின் தலையீடுகளுமின்றி அவர்களே தீர்த்துக் கொள்வார். தவறின் நீதிமன்றின் மூலம் அவர்கள் தீர்வு காண்பார்.

காணி, நிலம் அற்றவர்கள் காணி பெற விரும்பினால் அரசு அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களின் குறைகளை தீர்க்கலாம். போதிய அளவு கஷ்டப்பட்டு போதியளவு இழந்துள்ள மக்களை தொந்தரவு செய்ய வேண்டாமென அதிகாரிகளை எச்சரிக்கவும். எல்லாவற்றிற்கும் மேலாக தம் உறவுகள் பலரை இழந்தும், தம் அன்புக்குரியவர்கள் என்றோ ஒரு நாள் தம்மிடம் வருவார்கள் என எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கு இத்தகைய விடயங்களில் கவனத்தைச் செலுத்தக்கூடிய மனநிலையில் இல்லை.

இத்திட்டத்தை கைவிடுமாறு காணி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கி எதாவது காணி சம்பந்தமாக பிரச்சினைகள் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனைக்குரியது உறுதிக்காணியெனில் நீதிமன்றிற்கும் பெமிற் காணியெனில் அரச அதிபரிடம் செல்லுமாறும் ஆலோசனை வழங்கவும். இக்கட்டத்திலேனும் தாங்கள் தலையிட்டு இத்திட்டம் அமுலாக்கப்படும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு போதியளவு துன்பத்தை கொடுத்துவிட்டது. எனவே இத்திட்டத்தை இரத்துச் செய்து மக்களுக்கு மன அமைதியை கொடுக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அன்புடன்
வீ .ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி

கருத்துகள் இல்லை: