சனி, 1 அக்டோபர், 2011

2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி

வெகு நாள்களுக்குப் பிறகு 2ஜி பற்றி எழுதுகிறேன். என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் இல்லாமல் கொடுத்ததால் நஷ்டம் ஏதும் வந்துவிடவில்லை என்றே தொடர்ந்து சொல்லிவந்துள்ளேன். இப்போதும் அப்படியே.
சுவாமி என்ன வாதிடுகிறார்? இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சரவை, இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித்து, முடிவை அவர்களே எடுக்குமாறு கூறியது. அந்த இரு அமைச்சர்கள் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதமபரமும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவும். எனவே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல் சும்மா கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது என்றால் அதற்கு இருவருமே காரணம். எனவே இராசாவைப் போலவே சிதம்பரத்தையும் விசாரித்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்கிறார் சுவாமி.
சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?
நியாயமான வாதம்தான். இதனால்தான் அரசு ஆரம்பத்திலிருந்தே, ஒரே குரலில் பேசியிருக்கவேண்டும். ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாததால் நஷ்டம் ஏதும் இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தால் இத்தனை கூத்தும் தேவையே இல்லை. கொள்கை முடிவு. அவ்வளவுதான். ஆனால், இந்தக் கொள்கை முடிவை எடுக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரப்பட்டது என்று நிரூபணம் ஆனால் அல்லது ஏதோவிதத்தில் பணம் கைமாறியுள்ளது என்றால் அப்போதுதான் குற்றம் நடந்திருக்கிறது என்று ஆகிறது. அந்த நோக்கில் விசாரணை நடந்தால், வழக்கின் நடைமுறையும் வேறுவிதமாகச் சென்றிருக்கும்.

பின்னால் வந்த நிதியமைச்சர் பிரணவ் முகர்ஜி, சிதம்பரம் ஏலம் விடாதது தவறு என்று சொன்னால், அதனால் பெரிய சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முகர்ஜியின் கருத்து தவறு என்று சிதம்பரத்துக்குத் தோன்றலாம். சிதம்பரத்தின் கருத்து தவறு என்று முகர்ஜிக்குத் தோன்றலாம்.

தினம் தினம் சுவாமி ஏதோ புது ஆவணங்களை எடுத்துக் காண்பித்து அடித்து ஆடுகிறார். அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அரசுத் தரப்பு விழிக்கிறது. இதில் பாவம், சிக்கிக்கொண்டவர்கள் இராசாவும் கனிமொழியும்தான். அவர்களை இன்னமும் சிறையில் வைத்திருக்க என்ன முகாந்திரம் உள்ளது என்றே தெரியவில்லை. கூப்பிட்டால் தினம் தினம் நீதிமன்றத்துக்கு வந்து வாதாட அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஊரைவிட்டு ஓடிப் போய்விடுகிறவர்கள் மாதிரித் தெரியவில்லை. பின் எதற்குச் சிறை?

நாளை அவர்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவானால், சிறை நாள்களைத் திருப்பித் தரமுடியுமா நீதிமன்றத்தால்?

கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்தில் சிக்கல் இல்லாமல் இல்லை. பணம் எதற்காகவோ அங்கே உள்ளே வந்துள்ளது. அதனை விசாரிக்கலாம்; கடுமையான அபராதம் போடலாம். ஆனால் லட்சம் கோடிகள் கையாடப்பட்டதாகச் சொல்லி, இருவரைச் சிறையில் வைத்து, கடைசியில் வழக்கே பிசிபிசுத்துப் போகும்போலத் தோன்றுகிறது. இன்றுவரை வலுவான வழக்கு ஏதும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

சுவாமி மட்டும் ஆனால் அயராது போராடுகிறார். அந்த ஒரு விடாமுயற்சிக்காக மட்டும் அவரைப் பாராட்டலாம்.

கருத்துகள் இல்லை: