இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டில் வகுக்கப்பட வேண்டும்; கொழும்பில் இந்து பத்திரிகை ஆசிரியர் ராம்!
இனப்பிரச்சினை தொடர்பான கேள்விக்குப் பரிகாரம் காணவேண்டிய பெரும் பொறுப்பு இலங்கைக்கு உண்டு. இது உள்நாட்டிலேயே வகுக்கப்பட்ட பரிகாரத் திட்டமாகவும் இருக்கவேண்டும் என இந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் கருத்து வெளியிட்டுள்ளார்.இந்துப் பத்திரிகை, தமிழகத்தில் இருந்த வெளியாகும் போதும் தமிழர் விரோதப் போக்குடன் செயற்படுகின்றது என்று குற்றச்சாட்டு உண்டு. அதன் பிரதம ஆசிரியரான ராம் எண்பதுகளில் தமிழ் இயக்கங்களின் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டவர். பின்னர் தமிழ் இயக்கங்கள் இந்தியா றோவின் கட்டுப்பாடுகளை மீறிய போது அவற்றைக் கடுமையாக எதிர்த்தவர். வன்னயில் இறுதிப்போரில் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது, தமிழ்மக்களின் இழப்புக்களை இருட்டடித்து மகிந்த அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துவந்தவர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என ராம் தெரிவித்துள்ளமை வருமாறு தமிழ் பேசும் மக்களின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றின் கட்டுக்கோப்புக்கு இசைவாகவே இப்பரிகாரத் திட்டம் வகுக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவும், இலங்கையும் பிரவேசிக்கும் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார். இலங்கை இந்திய சங்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
வெளியிலிருந்து திணிக்கப்படும் ஒரு தீர்வுத் திட்டம் தேவையில்லை. ஆனால், ஒரு பரிகாரம் தேவை. அது உள்நாட்டிலேயே உருவானதாகவும் இருக்கலாம். அல்லது வெளியிலிருந்து உங்களால் ஜீரணிக்கப்பட்ட கருத்துகளின் மூலம் வடிக்கப்பட்டதாகவும் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு நீண்டகால பிரச்சினையாகும். ஆதலால், உங்களுக்கு அவசியம் ஒரு பரிகாரம் தேவை. இலங்கையில் தற்போதைய நிலைப்பாட்டில் நாங்கள் இதையே வெகு ஆவலோடும், ஆர்வத் தோடும் எதிர்பார்க்கின்றோம் என்றும் ராம் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வை அழுத்தமாக வலியுறுத்தியுள்ள அவர், சீனத் தலைவர் டெங்கியா பிங் கையாண்ட ஒரு பழமொழியை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.
அதுதான்: சுண்டெலிகளைக் கௌவிப் பிடிக்கும்வரை அந்தப் பூனை வெள்ளையா? கறுப்பா? என்ற வாதம் பயனற்றது.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்கள அரசியல்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இரு பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐ.தே.கவும் ஒருங்கிணைந்து பொதுவான திட்டமொன்றை வகுக்கலாம். தமிழ்ப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கின் அதிகாரப்பகிர்வை நோக்காகக்கொண்டே இது உருவாக்கப்படவேண்டும். அப்படியானால், இது ஒரு நியாயபூர்வமான தீர்வாக அமையக்கூடும். இந்த இலக்கை, இலங்கை எட்டிவிடும் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கையாகும் என்றும் அவர் விவரித்தார்.
இந்தியாவில் பல்லினங்கள் வாழ்கின்றன. அந்த இனங்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள், அவற்றைப் பேணும் நடைமுறைகள், அனுபவங்கள் ஆகியவை குறித்தும் அவர் தமதுரையில் விளக்கினார். இலங்கையில் சமீபத்தில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நம்பகத்தன்மை படைத்த ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே வேளை, முன்னணி சக்தியாக மாறியுள்ளது. இது பேச்சுகள் நடத்துவதற்கான உரித்துடைய ஓர் அமைப்பாகத் திகழ்கிறது” என்றும் ராம் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஜனாதிபதியும், மற்றவர் களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அணுகியுள்ளார்கள். இது ஒரு மகத்தான செயல்பாடு. அதன் நம்பகத்தன்மையை இதன் மூலம் அங்கீகரிக்கிறார்கள். அவர்கள் பேச்சுகளில் ஈடுபடும்போது, எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1987 ஆம் வருட ஜூலையில் கைச்சாத்தான இந்தியா இலங்கை உடன்படிக்கை குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். இலங்கையின் அதி முக்கியமான இத்தேசிய பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டின் ஐக்கியம், இறையாண் மை, ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இசைவாகவே அமைய வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ராம் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக