இலங்கை விவகாரங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒருதலைப்பட்சமாக தமிழர் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொள்கிறார் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் அரசு, இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எழுத்து மூலம் முறையிடுவது என்று தீர்மானித்துள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டம் ஜெனிவாவில் நடந்தபோது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இருந்தார்.
இது அரசுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐ.நா. பொதுச் செயலாளரால் மனித உரிமைகள் சபைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தமை குறித்து, அதற்கு முன்னரே சபையின் உறுப்பு நாடுகள் பலவற்றுடன் ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு அறிவிக்காமல் கலந்துரையாடியமை மற்றும் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டுமென அழுத்தம் கொடுத்தமை போன்ற விடயங்கள் அவர் மீது அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இறையாண்மை கொண்ட நாடொன்றின் மீது ஐ.நா. ஆணையர் ஒருவர் எப்படி இவ்வாறு அதிகாரத்துடன் நடந்துகொள்ளலாம் என்று கேட்கும் இலங்கை அரசு, இதுபற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எழுத்து மூலம் முறையிடுவது என்று முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூத்த அமைச்சர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக