இந்துமதவெறியர்களின் இனப்படுகொலையை, இந்துமதவெறியர்கள் ஆளும் மாநிலத்தில் விசாரித்தால் கொலைகாரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது சிறு குழுந்தைக்கும் தெரியும்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவும் இந்துமதவெறியர்களை குறிவைத்து விசாரிக்கமால் ஏதோ விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மோடியின் அதிகாரமும், மாநிலமே இந்துமதவெறியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் சோடை போவதில் தவறவில்லை.
இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்குமென்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.
குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மட்டுமல்ல இனப்படுகொலைக்கும் அவர்கள்தான் தலைமை தாங்கியிருந்தார்கள். இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு என்ன காரணமென்று அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.
பா.ஜ.க தலைவர்கள் இந்தத் தீர்ப்பை மனமுருக வரவேற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். மோடி தனது ட்விட்டில் GOD IS GREAT என்று தெரிவிக்க அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி முதலான பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் ஏற்கனவே மோடி ஒரு நிரபராதி என்பதை பல முறை சொல்லி வருவதாகவும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
கணவனை இந்துமதவெறியர்களுக்கு பலிகொடுத்து அதற்காக வழக்கு தொடுத்த ஜகியாவோ இந்த தீர்ப்பு தனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும், தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். இனி என்ன சட்டப் போராட்டம் நடத்த முடியும்?
கவனியுங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முடிவை விசாரித்து எடுக்குமாறு அகமதாபாத் நீதிமன்றத்திடம்தான் கேட்டிருக்கிறது. இதற்கே ஏதோ வழக்கிலிருந்து விடுதலை செய்தது போல பா.ஜ.க தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?
அகமதாபாத் நீதிமன்றம் குஜராத்தில் இருப்பதால், தீர்ப்பை நாமே எழுதிவிடலாம் என்ற திமிரன்றி வேறு என்ன?
டெல்லி குண்டுவெடிப்பில் 12 பேர் இறந்த உடன் எத்தனை எத்தனை கவனிப்புக்கள், விசாரிப்புகள், உளவுத்துறை அமைப்புகள், அமைச்சர்கள், ஐ.எஸ்.சதி, குற்றவாளிகளின் படங்கள் என்று எத்தனை வேகம்? ஆனால் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த குஜராத் கலவரம் குறித்து தெகல்காவின் நேரடி வீடியோ ஆதாரம் வந்த பிறகும் குற்றவாளிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்றால்?
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில் கொலைகார மோடியும் அவரது கொலைகார கூட்டத்தையும் இனி யாருமே தண்டிக்கவோ, சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கவோ முடியாது. உறவினர்களை இழந்த குஜராத் முசுலீம் மக்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?
இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?
(செய்தி தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக