வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சிதம்பரத்துடன் ஆலோசித்தே முடிவெடுத்தேன்-ராசா

Raja

டெல்லி: ப.சிதம்பரம் நிதியமைச்சர் இருந்தபோது அவருடன் ஆலோசித்த பிறகே ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான விலை நிர்ணயிக்கப்பட்டதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா நேரில் வாதாடினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தனது தீர்பபை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட விளக்கங்கள், சட்ட அமைச்சகம் வெளியிட்ட கருத்து ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத வரை, நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று ராசா, கனிமொழி ஆகியோரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ராசா தானே ஆஜாராகி வாதாடுகையில், 2008ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் 6.2 மெகாஹெர்ட்ஸுக்கு மேல் உள்ள ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) நான் பரிந்துரை செய்தேன்.

அதன் பின்னர்தான் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் ஆலோசித்து உரிமங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.
டிராய் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் உரிமங்கள் வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரித்தது என்பதே உண்மை.

2003ம் ஆண்டில் இருந்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அருண் ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் 56 உரிமங்களை வழங்கியுள்ளனர். அவர்கள் பின்பற்றிய நடைமுறைகளைத்தான் நானும் கடைப்பிடித்து 122 உரிமங்களை வழங்கினேன்.

அவர்கள் செய்தது சரி என்றால், நான் செய்தது மட்டும் எப்படி தவறாகும்?.

என்னால் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக டிராய் அளித்துள்ள அறிக்கையை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர் லலித், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை கணக்கிட முடியாது என்று டிராய் அளித்துள்ள அறிக்கை கருத்தில் கொள்ள முடியாது என்றார்.

இந்த வழக்கில் டிராயின் அறிக்கை திருப்பு முனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டுத் தான் விற்க வேண்டும் என்று ராசாவுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும், இந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் டிராய் விளக்கம் தந்துள்ளது.

இதையே தான் ராசாவும் கூறி வருகிறார். இந் நிலையில் டிராயின் அறிக்கையையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் ராசா உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான தொகையை அப்போதைய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் ஆலோசித்து முடிவு எடுத்ததாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் தேதி குறிப்பிடாமல், வழக்கை தள்ளி வைத்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது கனிமொழியின் தாயார் ராசாத்தி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மக்களவை உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை: