சனி, 17 செப்டம்பர், 2011

போருக்குப் பிந்திய யாழ்!சிங்கள மக்கள் இடிந்த வீடுகளைப் பார்க்கிறார்கள். அழிந்த ஊர்களைப் பார்க்கிறார்கள்.


யாழ்ப்பாணத்துக்கு ஏராளமாய்ச் சிங்களவர்கள் வருகிறார்கள். வந்து எல்லா இடங்களுக்கும் போகிறார்கள். போய் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். போகுமிடங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.
வருகின்ற சிங்கள மக்கள் இடிந்த வீடுகளைப் பார்க்கிறார்கள். அழிந்த ஊர்களைப் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்ட சனங்களைப் பார்க்கிறார்கள். கோவில்களுக்குப் போகிறார்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். தட்சணை கொடுக்கிறார்கள். இதில் சைவக் கோவில்களே அதிகம்.
இதைப் பற்றி ஒரு நண்பர் இந்தச் சிங்கள மக்கள் சிலரிடம் விசாரித்தார். அப்போது ஆச்சரியமான ஒரு தகவல் கிடைத்தது. போரின் போது பல சிங்கள இளைஞர்கள் தாங்கள் இருந்த இடங்களில் உள்ள கோவில்களுக்கு நேர்த்தி வைத்திருக்கிறார்கள். இப்போது சிலர் அந்தநேர்த்திகளை குடும்பத்தோடு வந்து நிறைவேற்றுகிறார்கள்.
பொருட்களை வாங்கும் சிங்களவர்களால் சந்தைகளில் உள்ளுர்ப்பொருட்களின் விலை ஏறிவிட்டது. அதைவிடத் தட்டுப்பாடும் நிலவுகிறது. இது யாழ்ப்பாண மக்களுக்கு கொஞ்சம் கசப்பான விசயம்தான். ஆனால், உற்பத்திகள் திடீரெனப் பெருகி விட்டன.
அதேவேளை வெளியே இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் தாராளமாக இப்போது யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன. அந்தப் பொருட்களின் விலையும் குறைவு. இந்தப் பொருட்களைச் சிங்கள, முஸ்லிம் வியாபாரிகள் கொண்டு வருகிறார்கள்.
தென்பகுதியில் இருந்து இந்த வியாபாரிகள் வருகிறார்கள். வந்து எல்லா இடங்களிலும் கடை போடுகிறார்கள். கடை போடாதவர்கள் கால் நடையாகப் பொருட்களைச் சுமந்து கொண்டு, ஊர் ஊராகத் திரிந்து விற்கிறார்கள். சிலர் வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு நடமாடும் வாணிபஞ் செய்கிறார்கள். இந்த வணிகர்கள் எல்லாப் பொருட்களையும் விற்கிறார்கள். படுக்கை விரிப்பிலிருந்து தயிர் வரை எதையும் வாங்கலாம்.
இப்படிச் சிங்களவர்கள் ஏராளமாய் வருவதால் யாழ்ப்பாணமெங்கும் புதிதாக ஏராளம் விடுதிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஊர் ஊராக விடுதிகள் சின்னக் கிராமங்களிலும் பெரிய விடுதிகள். சில இடங்களில் கல்யாண மண்டபங்கள் பெரும்பாலும் விடுதிகளாக மாறியிருக்கின்றன. எல்லா விடுதிகளும் தாராளமாய் உழைக்கின்றன. இந்தக் கல்யாண மண்டபங்கள் பெரும்பாலும் கோவில்களை அண்டிய பகுதிகளில்தான் இருக்கின்றன.
உள்ளுரில் என்றால், ஏழாலை, அளவெட்டி, கந்தரோடை, பண்டத்தரிப்பு, வதிரி, அன்னங்கை, ஊரெழு, சூறாவத்தை… என்று அதிகம் வெளியூர்வாசிகள் புழங்காத பகுதிகளிலும் இப்போது தென்னிலங்கை வாசிகள் தராளமாய்ப் புழங்குகிறார்கள். வாழைத் தோட்டத்திலேயே வாழைக்குலையை வாங்குகிறார்கள். புகையிலைக் குடிலிலேயே புகையிலையை வாங்குகிறார்கள்.
‘தமிழர்கள் கொழும்புக்குப் போய் விடுதிகளில் தங்கினார்கள். இப்போது சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். அப்போது தமிழர்களிடம் சிங்களவர்கள் உழைத்தார்கள். இப்போது தமிழர்கள் சிங்களவர்களிடம் உழைக்கிறார்கள். இதுதான் காலமாற்றம். இப்பொழுது தமிழருக்கு ஒரு வகையில் வெள்ளிதிசை’ என்று சொல்கிறார் ஒரு நண்பர்.
ஆட்களில்லாத வீடுகள் எல்லாம் புதிதாகப் ‘பெயின்ற்’ அடிக்கப்பட்டு, பெயர் சூட்டப்பட்டு விடுதிகளாக்கப்படுகின்றன. முன்னர், போர் நடந்தபோது இந்த வீடுகளில் வெளவால்கள் பறந்தன. அப்போது வீடுகளை விடவும் உயிர் முக்கியமானது என்று பலரும் யாழ்ப்பாணத்தை விட்டே போனார்கள். அப்படிப் போனவர்களில் சிலர் வாய்ப்புக் கிடைத்தபோது வெளிநாடுகளுக்கே போய் விட்டார்கள்.
அப்படி ஆட்கள் வெளியேறிய வீடுகளில் வெளவால்கள் குடியிருக்காமல் சிலர் காவல் காத்தார்கள். அவர்கள் வலிகாமத்திலிருந்தோ தீவிலிருந்தோ தென்மராட்சியிலிருந்தோ இடம்பெயர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் விடுதிகளுக்காக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை அவர்களிற் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். திரும்ப முடியாதவர்கள், இதுவரையும் வீடுகளைக் காத்தவர்கள், இப்போது விடுதிகளுக்காக வழி விட வேண்டும்.
முன்னர் வீடுகளைக் காப்பாற்றுவதற்காக வாடகையே வேண்டாம் என்றவர்கள், இப்போது வாடகை எவ்வளவு கொடுத்தாலும் அது போதாது, எங்களுக்கு வீடுதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். திரும்பப் பெற்ற வீடுகளை விடுதிகளாக்கி விடுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இப்போது எத்தனை விடுதிகள் மொத்தமாக இருக்கின்றன என்று ஒரு தொகை மதிப்பீடு செய்து பார்த்தோம். குடாநாட்டில் எங்கள் தேடலில் 176 விடுதிகள் தேறின. இவற்றில் 38 விடுதிகள் ஏற்கனவே இயங்கியவை. ஏனையவை மே 17 க்குப்பின்னர் உருவாகியவை. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் பல விடுதிகள் திறக்கப்பட்டிருக்கலாம். அல்லது இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது இன்னும் சில விடுதிகள் திறக்கப்படலாம்.
போர் முடிந்த பிறகு, புதிதாக பிறந்திருக்கிற சூழலை அவரவர் தங்களுக்கு வாய்த்தபடி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இனிப் புலம் பெயர் தேசங்களில் இருந்தும் ஆட்கள் வருவர். ஆகவே விடுதிகள் செழிக்கத்தான் போகின்றன.
வீடுகள் விடுதிகள் ஆகிக் கொண்டிருப்பதால் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உறவினர், நண்பர்கள் வீடுகளை நாடி நம்பிக்கையோடு முகாம்களில் இருந்து வந்த சனங்கள்தான் இப்போது அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வன்னி அகதிகள் முகாம்களில் இருந்து வந்தபொழுது பல இடங்களிலும் குறைந்த வாடகைக்கு வீடுகளை எடுக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது அப்படிக் கொடுத்த வீடுகளையே விடும்படி கேட்கிறார்கள் உரிமையாளர்கள்.
வன்னியிலிருந்து வந்த சனங்களுக்கு வேலை கொடுப்பதில், வீடு கொடுப்பதில் ஏற்கனவே ஏராளம் தயக்கங்கள் பலருக்குண்டு. அதிலும் படித்த ஆட்கள், ‘கடந்த காலம் – நிகழ்காலம் – எதிர்காலம்’ என்று முக்காலத்தைப் பற்றியும் கொஞ்சம் கூடுதலாகச் சிந்திக்கிற ஆட்கள், பெரிய பதவிகளில் இருக்கிற ஆட்கள்தான் இந்தத் தயக்கத்தில் முதற் பேர்வழிகளாக இருக்கிறார்கள்.
இவர்கள்தான் அதிகமதிகம் தனிநாட்டை ஆதரித்தவர்கள். கூடுதலாக தமிழீழத்தை விரும்பியவர்கள். இப்போது தமிழ்த்தேசியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நேசிப்பதாகக் காட்டிக் கொள்பவர்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இவர்களில் பலருக்கு எந்த அக்கறையுமில்லை. சில விதி விலக்குகள் உண்டு. ‘விதிவிலக்குகள்’ தங்களால் முடிந்த எல்லாவகையான உதவிகளையும் செய்கிறார்கள். ஆனால் எந்த ஆர்ப்பாட்டங்களுமில்லாமல்.
இதில் புரியாத புதிராகவும் வேடிக்கையாகவும் இருக்கும் சங்கதி ஒன்றுண்டு. யாழ்ப்பாணத்துக்கு சிங்கள மக்கள் வருவதை விரும்பாத ஒரு தொகுதி மக்கள் இருக்கிறார்கள். போருக்குப் பின்னர் உருவாகியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ்ச் சனங்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பாத நிலையில், சிங்கள மக்கள் சுற்றுலாவாக வருவதை இவர்கள் விரும்பவில்லை.
இதைவிட தங்களுடைய வர்த்தக ஆதிக்கம் போட்டிக்குள்ளாகியதால் சிங்கள வியாபாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருவதை சில வர்த்தகர்கள் விரும்பவில்லை. ஆனால், ‘இன்றைய சந்தை என்பது பலருக்குமான போட்டியை உடையது. அதனால் எல்லாரும் வருவார்கள். நாங்களும் கொழும்புக்குப் போகிறோம். கண்டியில் கடைவைத்திருக்கிறோம். தம்புள்ளவில் மரக்கறியைக் கொண்டு போய் விற்கிறோம்’ என்று சொல்கிறார் நகரில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர்.
‘தரமான பொருட்களை வாங்குகிறவர்கள் நிரந்தரமாக இருக்கிற கடைகளில்தான் வாங்குவார்கள். நகையை எங்காவது அறிமுகமில்லாத கடைகளில் யாராவது போய் வாங்குவார்களா? அதைப்போல எலக்ரோனிக் பொருட்கள், நீண்டகாலமாகப் பாவிக்கும் பொருட்கள், பெறுமதியான பொருட்களை எல்லாம் வெளியூரிலிருந்து வருகின்ற புதிய வியாபாரிகளிடம் வாங்கமாட்டார்கள். ஆகையால் உள்ளுர் வியாபாரிகள் ஒரு எல்லைக்கு மேல் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்று விளக்குகிறார் இன்னொரு உள்ளுர்வாசி.
‘தென்பகுதியில் ஒருகாலம் தமிழ் ஆட்கள் கூடுதலாகக் கடை வைத்திருந்தார்கள். அப்படித் தமிழ் ஆட்கள் கடைவைத்திருப்பதை சில சிங்களவர்கள் விரும்பாததன் விளைவுதான் அப்போதைய இனக்கலவரங்கள். அதைப் போல ஒரு போக்கு இப்ப யாழ்ப்பாணத்திலயும் உருவாகுது’ என்று சொல்கிறார் இந்த நிலைமைகளை அவதானிக்கும் ஆசிரியர் ஒருவர்.
ஏறக்குறைய சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருவதை மறைமுகமாக ‘தமிழ்’ அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள். சில பத்திரிகைகளும் சாடைமாடையாக ஒரு எதிர்ப்பு நிலையிலேயே இதைப் பார்க்கின்றன. ஆனால், பெரும்பாலான சனங்களும் வியாபாரிகளும் விடுதி உரிமையாளர்களும் கோவில் நிர்வாகத்தினரும் சிங்கள மக்களின் வருகையை விரும்புகிறார்கள். இவர்கள் சிங்கள மக்களின் வருகையை விமர்சிப்போரையும் குறை சொல்வோரையும் கோபித்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வருகின்ற வருமானத்தை பாழாக்குவதை யார்தான் விரும்புவார்கள்?
ஆக மொத்தத்தில் விவசாயிகள், மீனவர்கள், விடுதி உரிமையாளர்கள், கோவில் நிர்வாகத்தினர் என்று பலதரப்பட்டவர்களும் இந்த வருகைகளை விரும்புகிறார்கள். ஆனால், வெளியூரிலிருந்து வரும் விருந்தாளிகளால் நகரம் நிரம்பியிருக்கிறது. ஆரியகுளத்தடி சனநெரிசலால் அலைமோதுகிறது. அவர்கள் தமிழ் மக்களின் நிலைமையை என்ன வேடிக்கையா பார்க்க வருகிறார்கள்?
அப்படி வருகிறவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் படையினரும் பொலிஸ்காரரர்களும் ஆராத்தி எடுக்கிறார்கள். கண்ட இடங்களிலும் கடைபோடுகிறார்கள் என்று கோபத்தோடு கேட்போரும் உண்டு. அவரவர் நோக்கில் ஒவ்வொன்றுக்கும் பொருள் உண்டு. போர் முடிந்த பிறகு உருவாகிய புதிய சூழலில் இப்படி ஒரு நிதானமில்லாத போக்கு பொதுவாகவே எங்குமுண்டு. அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில்தான் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது என்று பலரும் சொல்கிறார்கள்.
ஆனால், புதிய சூழலை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்ற பலரும் அதை விமர்சித்துக் கொண்டிருக்கின்ற பலரும் வழமையைப் போலவே எதிர்ப்பது, குறை சொல்லுவது, உள்ளுக்குள்ளே பொருமிக் கொள்வது என்று இருக்கிறார்களே தவிர, வருகின்ற சிங்கள மக்களுக்கு எதையாவது சொல்லி விடுவோம் என்று அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
வருகின்ற சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்ட பொது நூலகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அந்த நூலகம் எரிக்கப்பட்ட செய்தி அவர்களுடைய மனதில் பதிந்திருக்கிறது. அதனால் அதைப் பார்க்க விரும்புகிறார்கள். அதைப்போல இடிந்துபோன கோட்டையைப் போய்ப் பார்க்கிறார்கள். உயர்பாதுகாப்பு வலயங்களில் அழிந்து போன ஊர்களையும் கோவில்களையும் பாடசாலைகளையும் பிற முக்கியமான மையங்களையும் பார்க்க விரும்புகிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இருக்கின்ற சூழலையும் விளங்கிக் கொண்டு, அதற்கேற்ற மாதிரி யாழ்ப்பாணத்தைப் பற்றிய விளக்கக் கையேடுகள், ‘கடந்த கால யாழ்ப்பாணம் – இன்றைய யாழ்ப்பாணம்’ ‘போருக்கு முந்திய யாழ்ப்பாணம் – போருக்குப் பிந்திய யாழ்ப்பாணம்’ என்று பலவகையில் சிறு பிரசுரங்கள், புகைப்படக் கண்காட்சிகள் (ஒளிப்படக் கண்காட்சி) என்று பலதையும் செய்து சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கடந்த கால நிலைமைகளை புரிய வைக்கலாம். இது ஒரு அருமையான, வாய்ப்பான சந்தர்ப்பமாகும்.
இதைவிட, இந்தச் சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் வைத்து எந்தத் தமிழ்ப் பத்திரிகைகளும் இதுவரையில் முறையான நேர்காணல் செய்யவில்லை. அவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்கவில்லை. அவர்களுடன் உரையாடி அவர்களுக்குச் செய்திகளைத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரிக் குறைபாடுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன எங்களுடைய சூழலில்.
உண்மையில் மற்ற எல்லாத்தரப்பினரையும் விட புத்திஜீவிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும்தான் இதில் கூடுதலான பொறுப்புண்டு. கடந்த தேர்தல்களில் காட்டிய ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு கவனத்தையும் செலவையும் இந்தத்தரப்புகள் இந்தமாதிரிக் காரியங்களுக்குச் செலவழிக்கலாம். எத்தனையோ பிரசுரங்களை தேர்தற் காலத்தில் இவர்கள் எல்லாம் அடித்துத் தள்ளினார்கள்? ஆனால், பயனுள்ள காரியங்களை யாழ்ப்பாணத்தின் வாசலில் வைத்தே வெற்றிகரமாகச் செய்யலாம் என்பது பலருடைய அபிப்பிராயம்.
சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்கு பலதையும் மறைத்தே வந்திருக்கின்றன. இன்னும் அவை அப்படித்தான் செய்தும் கொண்டிருக்கின்றன. சிங்கள அரசியல்வாதிகளும் ஏறக்குறைய அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இப்படியாக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் தமிழ்த்தரப்பு அதை உடைத்து, புதிய வெளியை, உண்மை அரங்கை காண்பிக்க வாய்த்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்று கவலைப்படுகிறார்கள் பலர்.
இதையெல்லாம் விட வாற ஆட்களுக்கு கருவாட்டை விற்கலாம். வேண்டுமானால் பனங்கள்ளைக் கொடுக்கலாம். தங்குவதற்கு விடுதிகளைத் தயார்ப்படுத்தலாம். போகிற வாகனங்களில் வாழைக்குலையை ஏற்றி விடலாம். எல்லாவற்றிலும் தாராளமாய் உழைக்கலாம். வன்னி மக்கள் தெருவில் நின்றால் என்ன? திண்ணையில் நின்றால் என்ன? வீட்டைப் பாதுகாத்தவர்கள் எங்கே போனால் என்ன?
காற்றுள்ளபோதே தூற்றினால் சரி. ஆனால், அப்படி அரசியல் அகராதியிலும் காற்றுள்ளபோதே தூற்றினால் சரி. ஆனால், அதுதான் எப்போதும் நடப்பதில்லையே…!
-விதுல் சிவராஜா

கருத்துகள் இல்லை: