வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தி.மு.க கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி தனித்து விடப்பட்டுள்ளதா காங்கிரஸ்?

உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கூட்டணியும் அமைக்காமல், தி.மு.க., தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புருவ உயர்த்துதலையும், புதிய சமன்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, திடீரென ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை, ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், தி.மு.க., முடிவாக எடுத்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லையே என, அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், கூட்டணி அமைத்து தான் தி.மு.க., போட்டியிட்டு வந்தது. அவர்களது ஆட்சியில் நடந்த, கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படியே! அப்புறம் எப்படி, இந்தத் தேர்தலுக்கு மட்டும் இத்தகைய ஞானோதயம் வந்தது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.


"ஏன் அரசியல் கூட்டணியை உருவாக்கக் கூடாது' என்ற கேள்விக்கும், அவரே பதில் சொல்கிறார். "உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்கப்படாமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற பொதுப் பணிகளே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என்கிறார் அவர். அப்படியானால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கொள்கையோ, கோட்பாடோ கிடையாதா அல்லது இருக்கக் கூடாதா? இவர்கள் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு உருவாகும் லோக்சபாவிலும், சட்டசபையிலும் கூட, சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பணிகளைத் தானே மேற்கொள்கின்றனர்!

லோக்சபா என்பது பெரிய அமைப்பு; அதை விடச் சிறியது சட்டசபை; அவற்றை விடச் சிறியவை உள்ளாட்சி மன்றங்கள். டில்லியில் உருவாக்கப்படும் சட்டங்களும், திட்டங்களும், கடைக்கோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என்பதற்குத் தானே இத்தனை வரையறைகளும், வகைப்பாடுகளும். அப்புறம், அதிலென்ன கொள்கை, இதில் ஏன் தேவையில்லை? அதுவும் தவிர, எதற்கெடுத்தாலும், "பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டித் தான் முடிவெடுக்க வேண்டும்' எனச் சொல்லும் வழக்கமுடையவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. "தி.மு.க., என்பது ஜனநாயக அமைப்பு; சங்கர மடம் அல்ல' என்பது அவரது கூற்று.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு கொள்கை முடிவை, எப்படி ஓர் இரவு நேர அறிக்கையில் முடிக்க முடிந்தது? இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைப் போல, ஏதேனும், "வீடியோ கான்பரன்சிங்'கில் ஆலோசனை நடத்தினாரா? இத்தனைக்கும், தி.மு.க.,வின் முப்பெரும் விழா, நேற்று தான் நடந்தது. அதில், சிறையில் இருப்பவர்கள் போக, அத்தனை முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதுவரை கூட இந்த முடிவெடுக்கக் காத்திருக்கவில்லை.

தி.மு.க.,வின் இந்த விரக்தி முடிவுக்கு, கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் நிலைப்பாடே காரணம் என்பது, அரசியல் நோக்கர்களின் கணிப்பு. கடந்த சட்டசபைத் தேர்தலில், அக்கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில குட்டிக் கட்சிகள் இருந்தன.

"உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்' என, ஏற்கனவே இளங்கோவனும், இளைஞரணித் தலைவர் யுவராஜாவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். இளங்கோவன், ஒரு படி மேலேயே சென்று விமர்சித்து வருகிறார். வாசனும், சிதம்பரமும் வாய் திறக்காவிட்டாலும், கட்சியில் பெரும்பான்மையோருக்கு அப்படித்தான் எண்ணமிருக்கிருக்கிறது.

மறுபக்கம், "தி.மு.க., - அ.தி.மு.க.,வோடு இனி எக்காலத்திலும் கூட்டணி இல்லை' என, கடந்த தேர்தல் வரை மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பா.ம.க., அறிவித்துவிட்டது. "தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பா.ம.க.,வின் மரியாதைக்குரிய அழைப்பை பரிசீலிப்போம்' என, திருமாவளவனும் கொளுத்திப் போட்டிருக்கிறார். இப்படி கூட்டணிக் கட்சிகள் எல்லாம், ஏற்கனவே தனி ஆவர்த்தனம் வாசிக்கத் துவங்கிவிட்ட நிலையில் தான், "இனிமேல் சொந்தக் கச்சேரி' என, அறிவித்திருக்கிறது தி.மு.க.,

எது எப்படியோ, அ.தி.மு.க.,வுக்கு லட்டு மாதிரியான அறிவிப்பு இது. அங்கிருக்கும் கூட்டணியும், அத்தனை சிலாக்கியமானதோ, சித்தாந்த ரீதியானதோ அல்ல தான். ஆனால், அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடும், புரிதலும் இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகள் புதிய வலுவோடு இருக்கின்றன. அந்த வகையில், தி.மு.க.,வின் இந்தத் தனித்துப் போட்டி அறிவிப்பு, அ.தி.மு.க., கூட்டணிக்கு மிகப் பெரிய சாதகம் என்பதில், எந்தச் சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை: