சனி, 17 செப்டம்பர், 2011

மோடியின்Turn உண்ணாவிரத நாடக அரசியல் ஆரம்பம்

உலக நாடுகளுக்கு குஜராத் எடுத்துக்காட்டு ” - மோடி பெருமிதம்; சத்பவானா விரதம் துவக்கினார்!


ஆமதாபாத்: நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மையப்பொருளாக முன்வைத்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 3 நாள் ( 72 மணி நேரம்) தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார். இந்த விரதத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, , அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் முஸ்லிம் மக்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் பதவிக்கு கூட முன்நிறுத்தப்படலாம் : குஜராத் மாநிலத்தின் முதல்வர் மோடி தற்போது உலக அளவில் பேசப்படும் தலைவராக உருவகம் பெற்று வருகிறார்.இவரது ஆட்சி காலத்தில் குஜராத் மாநிலம் இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்று வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழில்வளர்ச்சியில் முன்னணி பாதை நோக்கி சென்று மாநில வளர்ச்சிக்கு மோடி பெரிதும் துணையாக இருந்து வருவதாக பல புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குஜராத் வன்முறை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் இந்த விவகாரத்தில் கீழ்கோர்ட்டே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பா.ஜ.,வுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை தெளிவுப்படுத்துவதாக பா.ஜ., அறிவித்தது. வரும் காலத்தில் மோடி பிரதமர் பதவிக்கு பா.ஜ., முன்நிறுத்தும் ஒரு நபராக திகழ்வார் என அமெரிக்க பார்லி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

10ஆயிரம் முஸ்லிம் மக்களுடன் மோடி விரதம்: இவ்வாறு மோடியை சுற்றி தேசிய அரசியல் காற்று வீசிக்கொண்டிருக்கும் தருணத்தில் நாட்டில் அமைதி - சமூகஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மோடி 3 நாள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று ( சனிக்கிழமை ) காலையில் ஆமதாபாத்தில் துவக்கினார். குஜராத் பல்கலை., வளாகத்தில் நடக்கும் உண்ணாவிரத மேடையில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரதத்தின் முதல்நாளில் பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் , பஞ்சாப் முதல்வர் ( அகாலிதளம்) பிரகாஷ்சிங்பாதல், இமாச்சல பிரதேச முதல்வர் துமால் பங்கேற்கின்றனர். மாநிலத்தின் 5 மண்டல பகுதிகளில் இருந்து தலா 2 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வீதம் 10 ஆயிரம் பேர் இந்த விரதத்தில் பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., சிறுபான்மை அமைப்பு கன்வீனர் காதர்ஷேட் கூறியுள்ளார்.

ஜெ.,தனது பிரதிநிதிகளை அனுப்பினார்: தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் எம்.பி.க்கள் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகியோரை தனது பிரதிநிதிகளாக கலந்துகெள்ளுமாறு முதல்வர் ஜெ., பணித்துள்ளார். மோடியின் விரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெ., ‌அமைதி பேணிக்காத்திட வழிவகுக்கும் போராட்டம். மோடியின் உண்ணா‌விரதத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் உள் ‌நோக்கமல்ல என கூறியுள்ளார்.

அமைதி- சமூக ஒற்றுமை ஏற்பட வித்தியாச களம் : இந்த போராட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ., மற்றும் குஜராத் அரசு ஆதரவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கமாக இந்த போராட்டத்தில் திரளான முஸ்லிம் மக்கள் தாங்களாக பங்கேற்கின்றனர் என மாநில பா.ஜ., தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் நீதி கிடைக்க பாடுபடுவேன் மோடி கடிதம்: கடந்த 10 ஆண்டுகளில் எனது உண்மையான தவறுகள் சுட்டிக்ககாட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டில் இனக்கலவரம் , மோதல் எவ்வித நன்மையையும் இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தாது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு எனது மாநில அரசு செயல்பட்டு வருகிறது. எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு குஜராத் எடுத்துக்காட்டு ” - மோடி பெருமிதம்: இன்று காலையில் விரதத்தை துவக்கிய முதல்வர் மோடி மேடையில் பேசுகையில்; குஜராத் மாநிலம் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களில் இருந்து மீண்டு இன்று அனைத்து செக்டர்களிலும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் அனைத்து மாநிலங்களிலும் மாதிரியாக பேசப்பட்டு வருகிறது. சத்பவானா ( நல்லெண்ண உபவாசம் மூலம் ) மூலம் கிராம மக்களுக்கு பெரும் நன்மையை தர முடிந்தது. இன்னும் ஓட்டுக்கு பணம் என்ற நிலையையும் முடிவுக்கு கொண்டு வருவோம். பிற மாநிலத்தவருக்கும் குஜராத் வேலைவாய்ப்பை அளித்து வருவதில் பெருமை கொள்கிறோம். குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி . இந்த குறுகிய காலத்தில் பெற்ற வளர்ச்சியால் குஜராத் உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

குண்டு வெடிப்பு மற்றும் வன்முறையில் விழுந்த குஜராத் மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்தது. மாநில அரசு கடும் முயற்சி எடுத்து கலவரத்தை கட்டுப்படுத்தியது. சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமைக்கும் இலக்கணமாக குஜராத் திகழ்கிறது என்ற நிலை விரைவில் வரும். கடந்த 2002 (கலவரம் ) ல் ஒரு சறுக்கல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒன்றும் அறியா மக்கள் எரிக்கப்பட்டனர். மாநில அரசின் முயற்சியால் பரவ விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. நான் துவக்கியிருக்கும் இந்த உண்ணாவிரதம் யாருக்கும் எதிரானது அல்ல. எனது நோக்கமே நாட்டில் பிரிவினை இருக்க கூடாது என்பதுதான் .

மேடையில் பேசிய அத்வானி மோடி ஒரு சிறந்த நிர்வாகி, அவர் குஜராத் மாநில வளர்‌ச்சிக்கு அரும்பாடுபடுகிறார். அவரது பணி ‌பாராட்டத்தக்கது என்றார்.

காங்., போட்டி உண்ணாவிரதம்: மோடி போராட்டம் அறிவித்ததையடுத்து காங்., போட்டி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப்போவதாக அறிவித்துள்ளனர். சபர்மதி ஆசிரமம் அருகே சங்கர்சிங் வகீலா தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இது நகைப்புக்குரியது , அரசியலில் தரம்தாழ்ந்த செயல் என்று பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின்   உண்ணாவிரத நாடக அரசியல் ஆரம்பம் 

கருத்துகள் இல்லை: