வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கணபதி ஸ்தபதி காற்றில் கரைந்து விட்டார்!


சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பீரமான வள்ளுவர் கோட்டமும் நிலைகொண்டு நிற்கும் தேரும்... அண்ணா நகரில் தோரண வாயில்... அண்ணா அறிவாலயத்தின் முகப்பு... உயர் நீதிமன்ற வளாகத்தில் நிற்கும் மனுநீதிச் சோழன் சிலை... இப்படியே சென்னையைத் தாண்டினால்... தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பு... பூம்புகாரில் கலைக்கூடம்... மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழன்னை சிலை... மதுரையைச் சுற்றிலும் தோரண வளைவுகள்... காரைக்குடியில் தமிழ்த் தாய் கோயில்... குமரியில் 133 அடிக்கு வள்ளுவனுக்குச் சிலை... எனத் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் திக்கெட்டும் நிற்பவை எல்லாம் எவரின் கைவண்ணமோ... அந்தக் கலைஞனின் கண் மூடிவிட்டது. வாஷிங்டன் சிவா விஷ்ணு, சிகாகோ ஸ்ரீராமர், சிங்கப்பூர் ஸ்ரீதண்டாயுதபாணி என அவரால் கண் திறக்கப்பட்ட எத்தனையோ தெய்வச் சிலைகள்.


காரைக்குடியில் கணக்கு வாத்தியாராக இருந்த கணபதி, பழநி முருகன் கோயிலில் தலைமை ஸ்தபதி வேலை கிடைத்து சேரத் திட்டமிட்ட தகவலைத் தனது தந்தையார் வைத்தியநாத ஸ்தபதிக்குக் கடிதமாக எழுதினார். 'சிற்பக் கலையில் நீ செய்த பிரவேசம், அதற்கு மாபெரும் அதிர்ஷ்டமாகும்’ என்று அவர் தந்தை எழுதியதைக் கர்வம் என்று சொல்வதைவிட, கணபதி மீதான நம்பிக்கை எனலாம். வைத்தியநாத ஸ்தபதியும் சாமான்யர் அல்ல. காரைக்குடி பிள்ளையார்பட்டி கோயில் கோபுரம், திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமம், சென்னை காந்தி மண்டபம், ஆகியவற்றை அமைத்த கலைஞன். அப்பாவும் மகனும் சேர்ந்து தமிழ்ப் பண்பாட்டின் சின்னங்களைச் செதுக்கிய பெருமையை மொத்தமாகக் கொண்டுசென்றது வேறு குடும்பத்துக்கு இல்லை!

சென்னை காந்தி மண்டபத்தை வைத்தியநாத ஸ்தபதி கட்டிய அழகைப் பார்த்துத்தான் சிற்பக் கலையைப் பயிற்றுவிக்க ஒரு கல்லூரி உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார் ராஜாஜி. மாமல்லபுரத்தில் கல்லூரி உருவாக்கப்பட்டு, அதன் முதல்வராக அவரையே நியமித்தார். மூன்று ஆண்டுகளுக்குள் அவரது உடல்நிலை முடமானபோது, வாரிசு என்பதற்காக அல்ல... தகுதியின் அடிப்படையில் அந்தப் பொறுப்பு கணபதி ஸ்தபதிக்கு வந்து சேர்ந்தது. சுமார் 27 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து, வெறும் கல் பட்டறையாக இருந்த சிற்பக் கல்லூரியைத் தொழில்நுட்பப் படிப்பாக மாற்றி ஆயிரக்கணக்கான சிற்பிகளைச் செதுக்கி அனுப்பும் காரியத்தைக் கடவுளின் கட்டளையாகப் பார்த்தார் கணபதி ஸ்தபதி!

சிலர் தொழிலில் திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால், அதை வார்த்தைகளில் சொல்லத் தெரியாது. ஆனால் கணபதி, எல்லாவற்றுக்கும் தீர்க்கமான விளக்கம் வைத்திருப்பார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு வடக்கே யும் ஒரு வாசலை வைக்கலாமா, கூடாதா என்று விவாதம் வந்தபோது கோயில் அறங்காவலர் பி.டி.ராசன் (பி.டி.ஆர். பழனிவேல்ராசனின் தந்தை!), கணபதி ஸ்தபதியை வரவழைத்துக் கேட்டார். வடக்கு வாசல் வைக்கக் கூடாது என்று சொல்லிய அத்தனை பேர் வாதங்களையும் தர்க்கரீதியாக மறுத்து, தான் சொன்னதை எழுதியும் கொடுத்து, எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் அதை ஒப்புக்கொண்டு கையெழுத்து வாங்கவைத்தவர் கணபதி. ஒரு சிட்டிகை பொடி எடுத்துப் போட்டுக் கொண்டு, பென்சில் எடுத்து வரைய ஆரம்பித்தால், வானத்தை வசப்படுத்தும் கோபுரம் நிமிரப்போகிறது என்று அர்த்தம்!

சீர்காழிக்குப் பக்கத்தில் தாசில்பண்ணை என்ற ஊரில் கௌரி என்ற பெண் இருந்தாராம். அவருக்கு கண்ணகி மீது தீராத பக்தி. கணபதி ஸ்தபதியிடம் சொல்லி, ஒரு கண்ணகி சிலையைச் செய்து வாங்கிச் சென்று, அந்தப் பகுதியில் வைத்தார். இதைப் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி பார்த்து... கணபதி ஸ்தபதியைப் பற்றிக் கேள்விப்பட்டு மாமல்லபுரம் வர... அன்று தொடங்கிய நட்பு, சிற்பச் செழிப்பாகவும் மாறியது.

இவர் வடித்த மாதவி சிலையின் வனப்பு எப்போதும் பேசப்படும். ''நீங்களே கண்ணகியைவிட மாதவியைத்தான் அழகாக வடித்துள்ளீர்கள். கோவலன் மயங்காமல் என்ன செய்வான்?'' என்று கருணாநிதி கேட்டதாகச் சொல்வார்கள்.

குமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டபோது, இது முறை யாக நிற்குமா என்று பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். ''கலையும் மலையும் இருக்கும் வரை இந்தச் சிலை இருக்கும்'' என்று சொன்னார் கணபதி ஸ்தபதி.

இந்தோனேஷியாவில் கிளம்பி ஒரு சுழற்சியில் பல்லாயிரம் மக்களைப் பழி தீர்த்த சுனாமியில் வள்ளுவரா நின்றார்... இல்லை, கணபதியே நின்றார்!

எப்போதும் நிற்பார்!

கருத்துகள் இல்லை: