புதன், 14 செப்டம்பர், 2011

தமிழக போலிஸ் காட்டு தர்பார் ஜெயலலிதாவின் வெறியாட்டம் வெளிவருகிறது

சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...


நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!


செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்...

சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.

தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!
சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.

''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.

அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.

'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.

இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.

எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.

''அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.

பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?

கருத்துகள் இல்லை: