‘வங்காள தேசத்தை உருவாக்கியது போல, இலங்கையில் தமிழர்களுக்குத் தனி ஈழம் என்ற தேசத்தை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்’ – என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் சிலர் பேசியுள்ளனர். பங்களாதேஷ் விவகாரத்தையும், இலங்கை விவகாரத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதே தவறு. பங்களா தேஷீக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1600 கிலோ மீட்டருக்கு இந்தியப் பகுதி இருக்கிறது. அதாவது பங்களாதேஷ், பாகிஸ்தானுடன் ஒட்டி இல்லை. நடுவே இந்தியா இருக்கிறது. பங்களாதேஷில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவி ஏற்க முடியாமல் பாகிஸ்தான் செய்தபோது, அங்கே கிளர்ச்சி எழுந்தது. பாகிஸ்தான் ராணுவம் அந்தக் கிளர்ச்சியை அடக்க முற்பட்டபோது, இந்தியாவுக்கு லட்சக்கணக்கான அகதிகள் வந்துவிட்டார்கள். இந்திய எல்லைப் பிரதேசங்களில் ஜனத்தொகையின் சதவிகிதங்களே மாறிவிடும் என்கிற அளவுக்கு, அகதிகள் வருகை அதிகரித்து விட்டது; நமது உதவி நாடப்பட்டது. இந்த நிலையில் அங்கு தோன்றிய கிளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளித்தது. இதில் ஒரு அம்சமும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இல்லை. இலங்கையில் வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இடையே இந்தியப் பகுதி இல்லை; அகதிகள் வரவு, கவலைக்கிடமளிக்கிற அளவிற்கும் போகவில்லை. இலங்கைத் தமிழர் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அங்கு விடுதலைப் புலிகள் இந்திய உதவியை நன்றாகப் பெற்று, இந்தியாவினால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதியும் பெற்று, அதன் பிறகு இந்தியாவையே பார்த்து, ‘நீங்கள் அன்னியர்கள்; நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள்; எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதில் அன்னியர்களான நீங்கள் தலையிட வேண்டியதில்லை’ என்று கூறினர். இப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை மீறி, இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களோடு சம உரிமை பெற்றுத் தர ஒரு ஒப்பந்தத்தையே உருவாக்கியது. அதுவும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் நிராகரிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தினர் மீது என்னென்ன அவதூறு சொல்ல நினைத்தார்களோ – இப்போது சிங்கள ராணுவத்தினர் மீது சொல்கிறார்களோ அது போல – அத்தனையும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சொல்லப்பட்டது. இத்தனைக்கும் பிறகு, பங்களாதேஷையும் இலங்கை தமிழர் பிரச்சனையையும் ஒப்பிட்டு, இந்தியாவின் குறுக்கீட்டைக் கோருவது சரியல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக