வெள்ளி, 16 செப்டம்பர், 2011

திமுக மிரட்டல் எதிரொலி-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கூட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு


Azhagiri

டெல்லி: வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக இன்று நடத்த இருந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்தை திமுக புறக்கணிக்க திட்டமிட்டது. இதையடுத்து இக் கூட்டத்தையே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 4 சமையல் கேஸ் சிலிண்டர்களை மட்டும் மானிய விலையில் அளிப்பது என்றும், அதற்கு மேல் சிலிண்டர்கள் உபயோகிக்கும் குடும்பங்களுக்கு அதிகமான விலையில் அதை விற்பது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது.

இது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருட்களுக்கான அமைச்சர்கள் குழு இன்று ஆலோசித்து முடிவெடுக்க இருந்தது. இக் குழுவில் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரியும் இடம் பெற்றுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள திமுக, இக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்தது. இக் கூட்டத்தில் அழகிரி பங்கேற்க மாட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இன்னொரு கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ். இதனால் கோபத்தில் உள்ள அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சரையும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க விடமாட்டார் என்று தெரியவந்தது.

இதையடுத்து இன்றைய கூட்டத்தையே மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே தங்களது மாநிலங்களில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: