ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தேமுதிகவுடன் இணைந்து செயல்பட இடதுசாரிகள் திட்டம்


G Ramakrishnan, Vijayakanth and Tha Pandian
சென்னை: அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தலில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் தேமுதிகவுடன் இணைந்து புதிய அணி அமைத்து தேர்தலை சந்திக்க இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தேமுதிகவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக, இடதுசாரிகள், புதிய தமிழகம், சரத்குமார் கட்சி உள்ளிட்டவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு திமுக கூட்டணியை வீழ்த்தின. இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் இவர்கள் இணைந்தே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப கூட்டணிக் கட்சியினரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது என்று பேசி வந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தரப்பிலிருந்து அத்தனை உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டனர். இதனால் எங்கு போவது, என்ன செய்வது என்று தெரியாமல் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தவித்துப் போய் விட்டன.

பின்னர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தேமுதிக, புதிய தமிழகம், சிபிஎம் ஆகியவை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அறிவித்தன. சிபிஐ மட்டும் யோசித்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன என்ற ரீதியில் இடதுசாரிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து இன்றுசிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், சிபிஐ செயலாளர் தா.பாண்டியனும் அவசர ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் தேமுதிகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து இணக்கமான அறிகுறிகள் தென்படுவதால் அதுகுறித்து பேசி தீர்மானிக்கப்படும் என்றார்.

இது நடந்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரே கூட்டணியாக இந்த கூட்டணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: