செவ்வாய், 27 செப்டம்பர், 2011

லோக்சபா தேர்தலுக்கு நூல் விட்டு பார்க்கும் பெரிய கட்சிகள்

கடைசியாக, "மில்லியன் டாலர்' கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வும் கூட்டணியைக் கலைத்துவிட்டது; தே.மு.தி.க., மட்டும் மார்க்சிஸ்ட் உடன் சிறிய கூட்டணி அமைத்து, போட்டியிடுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளின் உண்மையான பலமும், லோக்சபா தேர்தலுக்கு அமையவுள்ள கூட்டணியும் தெரிந்துவிடும்.

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத கதையாக, மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியே களமிறங்க உள்ளன. இந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட பெருமை, இரு பிரதான திராவிடக் கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வையே சேரும்.
பா.ம.க., மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள், முதலில் இருந்தே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தன.

காங்கிரசைக் கைகழுவியதன் மூலம், பெரிய அளவில் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது தி.மு.க.,
"எங்களை இப்படி விட்டுவிட்டீர்களே' என, வாய் விட்டு கதறும் நிலைக்கு விடுதலைச் சிறுத்தை சென்றுவிட்டது.இதற்கு, தி.மு.க.,வுக்கு, காங்கிரஸ் கொடுத்த குடைச்சலே காரணம் என, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் எந்தப் பலனும் இல்லை என்பதை அறுதியிட்டு உணர்ந்து, அப்படியே கழற்றிவிட்டுவிட்டார்.

மறுபக்கம், அ.தி.மு.க.,வோ, பேச்சுவார்த்தையையும் நடத்திக்கொண்டு, வேட்பாளர்களையும் அறிவித்து, தொடர்ந்து எல்லாரையும் குழப்பத்திலேயே வைத்திருந்தது. ஒவ்வொருகட்ட பேச்சுவார்த்தையின் போதும், ஒவ்வொருகட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதை, முதல்வர் ஜெயலலிதா, தனி பாணியாகவே கடைபிடித்தார்.இதற்கு, அ.தி.மு.க., தரப்பில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அந்தக் கட்சி பேச்சுவார்த்தைக் குழு நியமித்த பிறகும், கூட்டணிக் கட்சிகளின் தரப்பில் குழு அமைப்பதில், தேவையற்ற தாமதம் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாவது, இந்தக் கட்சிகளை சுமப்பதால் நமக்கு என்ன பயன் என்ற அ.தி.மு.க., தலைமையின் சிந்தனை.எல்லாவற்றையும் மீறி, "எல்லாம் சரியாகிவிடும்; எப்படியும் கூட்டணி உறுதியாகிவிடும்' என, எதிர்பார்த்தனர். ஆனால், தடாலடிக்குப் பெயர் பெற்ற ஜெயலலிதா, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். வேறு வழியில்லாமல், தே.மு.தி.க.,வும் கூட்டணி முறிவைப் பற்றி வாய் திறக்காமல், மேயர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டல், கழித்தல் கணக்கு, தெளிவானது. ஓட்டு வங்கியை கணக்கிட்டால், மாநிலம் முழுவதும், தி.மு.க.,வை விட குறைந்தபட்சம், 5 சதவீத ஓட்டு அதிகம் வைத்திருக்கிறது, அ.தி.மு.க., இப்போது, எதிர்த்தரப்பில் கூட்டணி இல்லை என்பதும் மிகப் பெரிய சாதகம்.பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள், சிறுபான்மையினர் ஓட்டுகள் எல்லாம், தி.மு.க.,வுக்கு விழக் கூடியவை. அவை தனித்தனியே சிதறிவிட்டதன் மூலம், தி.மு.க.,வுக்குத் தான் கடுமையான ஓட்டிழப்பு ஏற்படும்.கடந்த நான்கு மாத ஆட்சியில், அ.தி.மு.க., மீது பெரியளவில் கெட்ட பெயரும் இல்லை. ஆட்சி, கையில் இருப்பதால், அரசு ஊழியர்களும் அடக்கி வாசிக்கின்றனர். காவல் துறையினர், கட்சியில் சேராத குறை தான்.இதுவும் தவிர, ஒரு வாரம் முன்னால் நடந்த சட்டசபைத் தொடர் வரை, அத்தனை கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க.,வை, "ஆகா ஓகோ' எனப் புகழ்ந்தன. இப்போது, அரசுக்கு எதிரான வாதங்களை வலுவாக முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை.இத்தனை சாதக அம்சங்கள் இருக்கும்போது, நிச்சயமாக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுவிட முடியும். அப்பறமும் எதற்கு, நம் வெற்றியை அடுத்தவர்களுடன் பங்கு போட வேண்டும் என்பது தான் முதல்வரின் திட்டம்.

இதனால், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட அத்தனை பெரிய, சின்னக் கட்சிகளும் தனித்தனியே களமிறங்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க., மட்டும், மா.கம்யூ., கட்சியுடன் மரியாதைக்கு கூட்டணி அமைத்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அத்தனை கட்சிகளின் உண்மையான பலமும், இந்தத் தேர்தலில் தான் தெரிய உள்ளது."இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட' என உறுமிய கட்சிகள், எந்தக் கோடியில் நிற்கப் போகின்றன என்பது அம்பலமாகிவிடும். இதுதான் பெரிய கட்சிகளின் பலமும், சிறிய கட்சிகளின் பயமும்!இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தான், 2014ல் வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, மற்ற கட்சிகளுக்கு அச்சாரமாக இருக்கப்போகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: