செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்!
மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் !
– ஒரு நேரடி ரிப்போர்ட்
 சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.
பெரும்பாலும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்கென்று சில அல்லக்கைகளையும், ஆட்காட்டிகளையும் வைத்துக்கொண்டு ஆவர்த்தனம் செய்வர். ஆனால் இங்கோ அல்லக்கைகளும் ஆட்காட்டிகளும் மட்டுமே சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை  நடத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை. வளாகத்தில் எங்கு எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த /ஆ க்களைப் பார்க்கலாம். இப்பல்கலையில் உள்ள அனைத்து உயர் பதவிகளிலும் தங்கள் உறவினர்களை வைத்தே பல்கலையை நடத்தி வருகின்றார் கொள்ளையனான ஜகத்ரட்சகன்.

பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தாலும் மிகச்சிறிய அளவிலான இட வசதியை மட்டுமே கொண்டுள்ள இங்கு உள்கட்டமைப்பு என்பது பெயரளவிலேயே இருப்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருக்கும் அங்கு குறைந்தபட்சம் தாகத்தை போக்குவதற்குத் தேவையான தண்ணீர் வசதிகூட இல்லை என்பது கொடுமையின் உச்சகட்டம்.
பல துறைகளைக் கொண்டு இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்று இவர்களின் வலைத்தளத்தில் சொல்லப்பட்டாலும் இவற்றில் பல பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் அவையாவும் மிகக் குறைவான கட்டிடங்களிலேயே அடங்கிவிடுகிறது. அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாங்கப்பட்டு இயங்காத, அரதப் பழசான நிலையிலேயே உள்ளது. புதிய துறைகள் தொடங்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும் செய்முறைப்பயிற்சி இல்லாமல் அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கும் நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன்முலம் ஒட்டுமொத்தமாக இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  சூனியமாகிப் போய்விடுகிறது. இம்மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால்  பாரத் பல்கலை என்று பார்த்த மாத்திரத்தில் வெளியேற்றப்படும் அவலநிலையும் உள்ளது.
இந்நிலையில்  தங்களுக்கு பள்ளி வளாகத்திலேயே இந்த ஆண்டு முதல் நேர்முகத்தேர்வு வேண்டும் என்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முகநூலின்(ஃபேஸ்புக்) மூலம் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்ட படி நான்காம் ஆண்டு மாணவர்கள் 27.9.2011 அன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலையின் விளையாட்டுத் திடலில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.சமாதானம் பேச வந்த டீன் (Dean) காசி விஸ்வலிங்கம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு டிகிரி தான் தரமுடியுமே தவிர வேலை வாங்கித்தர முடியாது என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த மாணவர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் ஒயாது என்று முடிவு செய்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கீழ் மட்டத்தில் உள்ள பல்கலையின்  நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாத நிலையில் பல்கலையின் தாளாளரும் ஜகத்தின் மகனுமான சந்தீப் ஆனந்த் வந்தால் மட்டும் தான் பேசுவோம் என்று மாணவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பல்கலையின் தேர்வு இயக்குனரும் பொறுக்கியுமான PJK என்கிற PremJeyaKumar நிர்வாகத்திற்குச் சாதகமான சில தமிழ் மாணவர்களை வைத்து போராட்டத்தை அடக்க முற்பட்டிருக்கிறான், மேலும் அதிகமாக வடமாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை தமிழ் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த ரவுடிகளையும் வைத்து அடிக்க வைத்திருக்கிறார். இதில் வட மாநிலத்து மாணவர்கள் பலர் ரத்தம் சொட்ட சொட்ட அடிபட பதிலுக்கு அவர்களும் அடித்துள்ளனர். சரியாக இதை எதிர்பார்த்துக் காத்திருந்த  ரவுடி PJK இப்பிரச்சினையை தமிழ் மற்றும் வட இந்திய மாணவர்களுக்கான பிரச்சினையாக மாற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பொதுவிலும் பிரச்சினை அவ்வாறாகவே சென்றுள்ளது / மடைமாற்றப்பட்டுள்ளது.
இது போன்ற கருங்காலித்தனத்தை நிர்வாகத்தின் சொந்தக்காரனும் ஆட்காட்டியுமான அடையார் செந்திலும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்களுடைய அதிகார பலத்தினாலும்  அடாவடித்தனத்தினாலும் இப்பரச்சினையை மொழிகளுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றியுள்ளது நிர்வாகம். இதற்கிடையில் எட்டு மணியானபோதும் மாணவர்கள் அனைவரும் பல்கலை வளாகத்திலேயே அடைக்கப்படிருந்தனர். அதற்குப் பிறகு வெளியே வந்த மாணவர்கள் அனைவரும் இரவு  பத்து மணியளவில் கல்லூரியில் இருந்து தாம்பரத்தில் உள்ள கேம்ப் ரோடு வரை அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். சாயங்காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிசும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது. முடிவு தெரியும் வரை மாணவர்களும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பல்கலையின் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி பல்கலை அலுவலகத்தின் வாயில் முன்பு நின்ற போது அது  தவறு என்றும், கை நீட்டி சம்பளம் வாங்குகிற நன்றி விசுவாசம் கூட இல்லையா என ஒருமையில் சந்தீப் ஆனந்த் திட்டியதும் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். சுய மரியாதை, தன்மானம் உள்ள எவராலும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியாதாயினும் தங்களின் வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கியும், வாய் மூடி மவுனிகளாகவும் இருக்கின்றனர். அற்ப சம்பளத்திற்குக் கூட வேலை செய்யத் தயாராக, படித்த வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகமிருக்கிறார்கள் என்பதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள், இதை வைத்தே அனைவரின் வாயையும் மூடிவிடுகிரார்கள்.
மத்திய அரசாலும் பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை இழந்துவிட்ட இப்பல்கலைக்கழகத்தின் சமீப கால அடாவடித்தனங்கள், மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கிருக்கிற அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் போன்றவை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.மாணவர்களின் இப்போராட்டம் வெல்ல ஆசிரியர்களும் சேர்ந்து பங்கு கொண்டால் போராட்டம் மேலும் வலுவடையும். போராடும் மாணவர்கள் வெற்றபெற நமது ஆதரவை தெரிவிப்போம்.
www.vinavu.com

கருத்துகள் இல்லை: