செவ்வாய், 27 செப்டம்பர், 2011

3அணி உதயம் தள்ளி வைக்கப்படவர்கள் ஒன்று கூடல்

விஜயகாந்த் தலைமையில் புது அணி? தேமுதிக-மார்க்சிஸ்ட் தலைவர்கள் 2-வது நாளாக ஆலோசனை!.

அண்ணாநகர்: தேமுதிக தலைமையில் 3வது அணி அமைப்பது குறித்து விஜயகாந்துடன், மார்க்சிஸ்ட் தலைவர்கள் 2வது நாளாக இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டணி குறித்து மாலையில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. கூட்டணி பேச்சு நடந்து கொண்டிருந்த போதே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. அதன்பின் தேமுதிகவையும் அதிமுக புறக்கணித்ததால், தேமுதிகவும் தனித்து வேட்பாளர்களை அறிவித்தது.

இதனால், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தங்கள் நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தன. அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பட்டியல்களையும் வெளியிட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றார். அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இரண்டாவது நாளாக இன்று காலை 9.30 மணிக்கு ஜி.ராமகிருஷ் ணன், ரங்கராஜன் எம்பி, பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நூர்முகமது, சம்பத் உள்ளிட்டோர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சுமார் 45 நிமிடம் பேச்சு நடத்தினர். கூட்டணி குறித்து இன்று மாலை மார்க்சிஸ்ட் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், இரு கட்சிகளிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்று தெரிகிறது.
ராமகிருஷ்ணன் கூறுகையில், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசியுள்ளோம். இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து மாநில செயற்குழுவில் ஆலோசனை நடத்துகிறோம். அதன்பின் இன்று மாலையில் எங்களது முடிவை அறிவிக்க உள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை: