திங்கள், 26 செப்டம்பர், 2011

சிறைக்குள் புதைக்கப்பட்ட 1270 கைதிகள் உடல்கள்



லிபியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்திய அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. எனவே அவரது ஆட்சி வீழ்ந்தது. அவரது மகன்கள், மகள் மற்றும் ஆதரவாளர்கள் லிபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது லிபியாவில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.

புதிய அரசு இன்னும் ஒரு வாரத்தில் அமைக்கப்பட்டு பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் திரிபோலியில் உள்ள அபுசலீம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கடாபி ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டிருப்பதை இடைக்கால அரசு கண்டுபிடித்துள்ளது.


கடாபிக்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லையெனில் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு 1270 பேர் கொலை செய்யப்பட்டு சிறைக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த கொடூர செயல் நடந்துள்ளது. அந்த சிறையை சமீபத்தில் பார்வையிட்ட இடைக்கால அரசின் பிரதிநிதிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது சிறையின் பின்புறம் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. பலரது உடையும் மண்ணின் மேற்பரப்பில் தெரிந்தது. இதுகுறித்து அங்கு பணி புரியும் சிறை காவலர்களிடம் விசாரித்தபோது மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.

எனவே சிறையின் பின்புறத்தில் கைதிகள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: