ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஜப்பான் ..ஜாதி ஒழிப்பு சர்வதேச மாநாடு .. இந்திய ஊடங்கள் கண்டுகொள்ளாமல் விட்ட முக்கிய நிகழ்வு


மின்னம்பலம் -சேது ராமலிங்கம்:
சிறப்புப் பார்வை: சர்வதேச அரங்கில் தீண்டாமைப் பிரச்சினை! ஜப்பானில்  செப்டம்பரில் 22, 23 தேதிகளில் நடந்த மிக முக்கியமான தலித் மற்றும் புராக்குமின் சர்வதேச மாநாடு குறித்து எந்த ஊடகமும் மூச்சுக்கூட விடவில்லை. இது காலம் கடந்த செய்தி என்றாலும் அவ்வளவு சுலபமாகக் கடந்து போக முடியாத செய்தி.
நம்மில் பலரும் சாதிய அமைப்பு என்பது இந்தியாவில் மட்டும் இருப்பதாகக் கருத்து கொண்டுள்ளார்கள். இந்தியா மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், மியான்மர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் அதைத் தாண்டி ஜப்பானிலும் சாதி அமைப்பு உள்ளது. ஜப்பானில் நமது நாட்டின் தலித்களை போன்றே புராக்குமின் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்கள் ஜப்பானிய சமூகத்தினரால் அனைத்து வகையிலும் ஒடுக்கப்படுபவர்களாக உள்ளனர்.
புராக்குமின்கள் யார்?

17ஆம் நூற்றாண்டிலிருந்து ஜப்பானிய மேட்டுக்குடியினரால் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் புராக்குமின்கள். தீண்டத்தகாதவராக நகருக்கு வெளியே சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் இவர்கள்.
ஜப்பானிய மக்களால் கடுமையான பாகுபாட்டு அணுகுமுறையுடன் நடத்தப்பட்டவர்கள் புராக்குமின்கள். நமது நாட்டின் தலித் மக்களைத் தீண்டத்தகாதோராக நடத்தப்படுவது போன்று அங்கு அவர்கள் நடத்தப்படுகின்றனர். இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது, கழிவகற்றும் பணிகள், ஆடு, மாடு, பன்றி, உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் இறந்த விலங்குகளை வெட்டும் பணிகள், தோல் பதனிடும் பணிகள் போன்ற கடைநிலைப் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இங்குள்ள சாதி இந்துக்களின் பார்வையில் கூறினால் 17ஆம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் ‘தீட்டுப்படும்’ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்

புராக்குமின்கள் ஊருக்கு வெளியே வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் ஊருக்குள் வர முடியாது. பொது வளங்களான நீர்நிலைகள், பொதுவெளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.
காகிதச் சட்டத்தில் மட்டும்

1869இல் ஜப்பானில் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. 1871இல் மெய்ஜி அரசு ஜப்பானியச் சாதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட தீண்டத்தகாத சாதியினரான புராக்குமின்களுக்கு சம சட்ட அந்தஸ்து தரும் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை.
நமது நாட்டில் அரசியல் சாசனத்தின்படி, தீண்டாமையைக் கடைப்பிடிப்பது குற்றம் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கெதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்கள், வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவதும், அப்படியே பதிவானாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் மிகவும் அரிதானதே. அதே போன்று ஜப்பானிலும் புராக்குமின்களுக்கும் நடந்துவருகிறது. சம அந்தஸ்து தரும் சட்டம் இயற்றப்பட்டாலும் அது ஏட்டில் மட்டுமே இருந்தது. தீண்டாமைக் கொடுமைகளும் வன்கொடுமைகளும் தொடர்ந்தன.
அம்பேத்கருடன் ஜிசிரோ சந்திப்பு

கடந்த காலங்களில் இந்திய தலித் அமைப்புகளுக்கும் புராக்குமின் அமைப்புகளுக்கும் உணர்வுபூர்வமான தொடர்புகளும், உறவுகளும் இருந்தன. அம்பேத்கரின் காலகட்டத்தில் அனைந்திய பட்டியல் சாதியினர் பேரவையின் தலைவர் பிஎன்.ராஜ்போஜ் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது புராக்குமின் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் மேட்சுமோட்டோ ஜிசிரோவைச் சந்தித்து அம்பேத்கரை ஜப்பானுக்கு அழைப்பது குறித்து விவாதித்தார். பின்னர் அது சாத்தியப்படாமல் போனது. ஜிசிரோ இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவர் அம்பேத்கரைச் சந்தித்து உரையாடினர். 10 நிமிடங்களுக்குத் திட்டமிட்ட அந்தச் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இருவரும் தங்கள் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு அவ்வப்போது சர்வதேச அம்பேத்கர் இயக்கத்தின் மாநாடுகளில் புராக்குமின்களுடன் சந்திப்புகளும் உரையாடல்களும் நடந்தாலும் அமைப்புரீதியான திட்டமிட்ட முயற்சிகள் இல்லை.
இனவெறிக்கு எதிரான உலக மாநாடு
2001இல் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐநாவின் இனவெறி, இனப் பாகுபாடு, வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு எதிரான உலக மாநாட்டில் (UN Convention against Racism.Racial Discrimination and Xenophobia) இரு தரப்பினரும் இணைந்து பணி புரிந்தனர். அன்றைய ஐநாவின் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைமை தாங்கிய அந்த மாநாட்டில் சாதியப் பாகுபாடும் நிறவெறி மற்றும் இனவெறியிலான பாகுபாடும் சமமானதே என்று ஆதாரபூர்வமாக நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஐநாவின் அனைத்து வகை இனப் பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்பாட்டுக் கமிட்டி இந்த நிலையை ஏற்றுக்கொள்ள இரு தரப்பினரும் போராடினர். இந்திய அரசு இந்நிலையை வன்மையாக எதிர்த்தது. பின்னர் பல ஆண்டுகள் நடந்த விவாதங்களுக்குப் பின்னர் ஐநாவின் கமிட்டி ஏற்றுக்கொண்ட நிலையை, அதாவது சாதி என்பது பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையிலான பாகுபாடு (Discrimination based on occupation and Descent) என்பதை, ஏற்றுக்கொண்டது. உலகளாவிய அம்பேத்கர் அமைப்புகளும் புராக்குமின் அமைப்பும் இணைந்து பாடுபட்டதால் கிடைத்த பலன் இது.
தற்போது அந்த ஒற்றுமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஜப்பானின் புகோகோ என்ற கடற்கரைப் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற இந்தச் சர்வதேச மாநாட்டில் எட்டு நாடுகளிலிருந்து தலித் அமைப்புகள் மற்றும் புராக்குமின் அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
மாநாட்டில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து ஐநாவின் நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், சிறையிலிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிரதிநிதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் தலித் மற்றும் புராக்குமின்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: