வியாழன், 18 அக்டோபர், 2018

சபரிமலை - தீர்ப்பை எதிர்த்து பார்ப்பனர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்

சபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்மாலைமலர்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து பார்ப்பனர்கள்  சங்கம் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. புதுடெல்லி சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கூறிவிட்டது. எனவே, அவசர சட்டமாவது இயற்றி இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டம் என தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை அங்கு செல்ல விடாமல் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடியடியும் நடத்தப்பட்டது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை: