புதன், 17 அக்டோபர், 2018

பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி

சவுக்கு : ஆயுஷ்மான் பாரத் போன்ற காப்பீடு அடிப்படையிலான திட்டங்கள் மருத்துவத்தை அரசு வழங்குவதற்கு மாற்றாக அமையாது.
பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது, வெகுஜன ஊடகங்கள் இதைப் புரட்சிகரமானதாக வர்ணித்தன. ஒரு சில இதை உலகின்  மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என கூறின. இவற்றில் உண்மை இருக்கிறதா?
இந்த திட்டத்தின் ஊக்கமாக சொல்லப்படும் ஒபாமாகேருடன், ஒப்பிடும்போது மோடிகேர் திட்டம் எப்படி இருக்கிறது. இந்த கேள்வியை பரந்த நோக்கில் அணுக வேண்டும் எனில், காப்பீடு, அரசு வழங்கும் மருத்துவ சேவைக்கு ஈடாகுமா? என கேட்டுக்கொள்ளலாம். இப்போது மோடிகேர் மற்றும் ஒபாமாகேரை ஒப்பிடலம். ஒபாமா கேரில் 2 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்க உத்தேசிக்கப்பட்ட நிலையில் மோடிகேர் 10 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. முதல் பார்வைக்கு இது பெரிய திட்டம்தான்.
ஒபாமாகேருடன் ஒப்பந்தம்
ஆனால், எதுவும் நடைமுறையில் பயனளிப்பதில்தான் இருக்கிறது. ஒபாமாகேருக்கு 2015 நிதியாண்டில் கலால் வரியுடன் கூடிய பட்ஜெட் ஒதுக்கீடு 16.3 பில்லியன் டாலர் (டாலருக்கான இந்திய மதிப்பு 60 என மாற்றிக்கொண்டா. 97,800 கோடி ரூ). இரு நாடுகளுக்கு இடையிலான மருத்துவச் செலவை கருத்தில் கொண்டால், (அங்கு மருத்துவச் செலவு 200 மடங்கு), இதன் பட்ஜெட் 489 கோடி.

மோடிகேர் ஏன் பிரம்மாண்டமாகத் தோன்றுகிறது எனில் அது 25 மடங்கு அதிகப் பயனாளிகளை அடைய விரும்புகிறது. இதற்கு தேவையான பட்ஜெட் ரூ.12,225 கோடி. அதாவது தற்போதைய ஒதுக்கீடான ரூ.2,000 கோடியை விட ஆறு மடங்கு தேவை. ஆனால் இது உத்தேசமான மதிப்பீடுதான். ஏனெனில், மருத்துவச் செலவில் உள்ள வேறுபாட்டில் உச்ச வரம்பை எடுத்துக்கொண்டிருக்கிறோம்; அதோடு, இரு நாடுகளிலும் ஏழைகளுக்கான நோய் ஒரே மாதிரி இருக்கும் என அனுமானம் செய்துகொண்டிருக்கிறோம். இந்த முறைப்படி பார்த்தாலும் மோடிகேர், ஒபாமாகேர் பக்கத்தில்கூட வரவில்லை.
உத்தேச ஒப்பீட்டில் இருந்து விலை, தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ராஷ்டிரிய ஸ்வஸ்த பீமா யோஜானா (ஆர்எஸ்பிஒய்) திட்டத்தை எடுத்துக்கொண்டால், 2017 நிதியாண்டில் பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.1,000 கோடிக்கு மாறாக ஒதுக்கீடு ரூ.470.52 கோடி தான். இது 2.63 குடும்பங்களுக்கு அதிகபட்ச மருத்துவ செலவான ரூ.30,000க்கு கவரேஜ் வழங்கியது. மோடிகேருக்கான இலக்கு 10 கோடி குடும்பங்கள். காப்பீடு கவரேஜ் ரூ.5 லட்சம். பயனாளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு உயரும் நிலையில் (10 கோடி / 3.63 கோடி), இதற்கேற்ப பிரீமியம் தொகை பாதி அளவு உயரும் என வைத்துக்கொண்டால், மோடிகேருக்கு ரூ.26,000 கோடி தேவை. தற்போதைய ஒதுக்கீட்டைவிட இது 13 மடங்கு. கவரேஜ் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கேற்ப பிரிமியமும் உயர்வதில்லை என்பதே காப்பீட்டுத் துறையின் தர்க்கம். எனவே நாம் பிரிமியம் பாதி அளவு உயர்வதாகப் பாதுகாப்பான விதத்தில் அனுமானம் செய்துகொள்வோம்.
இப்போது அடிப்படையான கேள்விக்கு வருவோம். காப்பீடு சார்ந்த மருத்துவத் திட்டம், அரசு வழங்கும் மருத்துவ வசதியை விடச் சிறந்ததா? அரசின் சுமை குறைவதோடு, வழங்கல் மற்றும் கவரேஜில் செயல்திறன் மிக்கது என்பதுதான் காப்பீடு சார்ந்த திட்டத்திற்கு ஆதாரவாகச் சொல்லப்படும் வாதம். இதன் விளைவுகளைப் பார்க்கலாம்.
முதலில், பொது ஒதுக்கீடு குறையும்போது கையிலிருந்து மேற்கொள்ளும் செலவுகள் அதிகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதம்தான் பொது மருத்துவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. 65 சதவீத மருத்துவத் தேவை கையிலிருந்து வழங்கப்படுகிறது. இலங்கையில் ஜிடிபியில் 1.59 சதவீதம் பொது மருத்துவ ஒதுக்கீடாக இருக்கும் நிலையில், செலவு 38 சதவீதமாக இருக்கிறது. தாய்லாந்தில் இது ஜிடிபியில் 2.89 சதவீதமாகவும், கையிலிருந்து செய்யப்படும் செலவு 12 சதவீதமாகவும் இருக்கிறது.
மருத்துவத்தில் அரசு செலவீனத்தை மேலும் குறைக்கும் எனும் நிலையில், காப்பீட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள நிலையை மாற்றுமா? ஆர்எஸ்பிஒய் அனுபவம் இதற்கு மாறாக அமைகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்வது அதிகரித்து அதன் விளைவாக மருத்துவச் செலவு அதிகரித்துள்ளது. மேலும் காப்பீடு செலவு, புறநோயாளிச் சேவைக்குப் பொருந்தாது. தீவிர நோய்களுக்கு இந்தச் செலவே அதிகமானது. இதற்கான அரசு வசதி இருந்தால் இந்தச் சுமை மக்கள் மீது விழாது.
பணவீக்க தாக்கம்
மேலும், காப்பீடு சார்ந்த அரசு திட்டங்களில் உள்ளார்ந்த பணவீக்க பாதிப்பும் இருக்கிறது. ஒன்று, இவை அதிக அளவில் மக்கள் மருத்துவமனையில் சேர வழி வகுக்கின்றன. இதற்கேற்ப மருத்துவமனைச் சேவை அதிகரிக்காததால், மருத்துவச் செலவுகள் உயரும். இது காப்பீடு பிரிமியத்தை அதிகமாக்கி, அரசு சுமையை உயர்த்தும். பொது மருத்துவ வசதி மேம்பாடு மூலம் இந்த உயர்வை ஈடுகட்டலாம். ஆனால் தற்போதைய அரசின் ஒதுக்கீடுபடி பார்த்தால் பொது மருத்துவத்திற்கான ஒதுக்கீடு சொற்பமான ரூ.80,000 கோடிதான்.
இரண்டாவதாக, காப்பீடு நிறுவனங்கள் தனியார் கவரேஜ் மூலம் ஏற்படும் இழப்பை பரஸ்பர மாற்று நிதி மூலம், அரசின் மொத்த பிரிமியம் மூலம் ஈடு செய்யலாம். இது அரசுக்குக் கூடுதல் சுமையை அளிக்கும்.
மூன்றாவதாக, காப்பீடு துறை மற்ற தனியார் துறை போல லாபம் சார்ந்தது. அரசு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களில் பங்கேற்பது பிரிமியத்தைவிட, வழங்கல் குறைவாக இருந்தால் மட்டுமே அவற்றுக்கு லாபமாக இருக்கும். இதன் விளைவாக, அரசின் பிரிமியம் வழங்கல், பொது மருத்துவச் செலவுகளுக்கான உச்ச வரம்பை உண்டாக்கும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக மருத்துவச் சேவைகளிலிருந்து அரசு படிப்படியாக விலகும். எனவே அரசு, செலவு மீதான தன் கட்டுப்பாட்டை இழக்கும்.
எனில் இதற்கு என்னதான் தீர்வு? பொது மருத்துவத்திற்கு குறுக்கு வழிகள் இல்லை என அனுபவம் உணர்த்துகிறது. தாய்லாந்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் பொது மருத்துவத்தில் அதிக ஒதுக்கீடு மூலம் இதை சாதித்துள்ளன. தாய்லாந்தில் சார்மாவட்டங்கள் 3,000 – 5,000 பேருக்கான சுகதார மையங்களைப் பெற்றுள்ளன. மாவட்டங்கள் அனைத்தும் 30,000 – 50,000 பேருக்கான மருத்துவமனைகளைப் பெற்றுள்ளன.
மருத்துவ கவரேஜ் இல்லாத 50 கோடி இந்தியர்களுக்கான திட்டமாக முன்னிறுத்தப்படும் ஆயுஷ்மான் பார்த திட்டம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததாக இருக்கிறது. அதிகரிக்கும் மருத்துவச் செலவு மற்றும் பெயரளவிலான காப்பீடு பாதுகாப்பால், மக்கள் திண்டாட வேண்டியிருக்கும். ஒரு சில வெற்றிக்கதைகள் இந்த திட்டத்தின் போதாமைகளை மாற்றிவிடாது.
ரோகித் ஆசாத், சுப்பானில் சவுத்ரி
(கட்டுரையாசிரியர்கள் ரோகித் ஆசாத் மற்றும் சுப்பானில் சவுதிரி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் இன்ஸ்டிடியுட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் கொல்கத்தாவில் பேராசியர்களாகப் பணியாற்றுகின்றனர்)
நன்றி
தி இந்து
https://www.thehindu.com/opinion/op-ed/falling-short-on-most-counts/article25229975.ece

கருத்துகள் இல்லை: