செவ்வாய், 16 அக்டோபர், 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கோமா நிலையிலிருந்த வாலிபர் உயிரழப்பு

துப்பாக்கிச் சூடு: கோமா நிலையிலிருந்த வாலிபர் பலி!மின்னம்பலம்:  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கோமா நிலையில் இருந்துவந்த ஜஸ்டின் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100ஆவது நாள் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், மக்களுக்குமிடையே கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்; காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் படுகாயமடைந்த ஜஸ்டின் என்ற இளைஞர், கோமா நிலைக்குச் சென்றார். பாளையங்கோட்டையிலுள்ள ஹைகிரவுண்ட் மருத்துவமனையில், இவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (அக்டோபர் 16) உயிரிழந்தார். இதனால், தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின். ஷிப்பிங் நிறுவனமொன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 4ஆவது நாளாக இன்று சிபிஐயின் விசாரணை தொடர்ந்தது. அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில், வழக்கு சம்பந்தமான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் இன்று சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: