வெள்ளி, 19 அக்டோபர், 2018

ரபேல் விமான ஊழல் .. ரிலையன்ஸ் பத்தாயிரம் கோடி. என்.டி.டிவி தொலைக்காட்சி மீது நஷ்ட ஈடு வழக்கு

ரிலையன்ஸ் கேட்கும் பத்தாயிரம் கோடி: என்.டி.டிவிக்கு நெருக்கடி!மின்னம்பலம்:  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக என்.டி.டிவி மீது ரிலையன்ஸ் நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக, என்.டி.டிவி Truth vs Hype என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் என்.டி.டிவி நிறுவனத்திடம் ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு அகமதாபாத் நீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 18) மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஊடகங்களை ஒடுக்கவும் தனது பணியை செய்யவிடாமல் தடுக்கவுமே இந்த மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் என்.டி.டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் தரப்பு கருத்தை கூறும்படி என்.டி.டிவி அழைப்புவிடுத்தபோதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னணி அதிகாரிகள் பங்கேற்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பு கருத்துகளை நாங்கள் பதிவு செய்தோம். ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தாங்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று டசாஸ்ட் நிறுவனம் கூறியதையும் பதிவு செய்தோம்” என்றும் என்.டி.டிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் கற்பிக்கும்வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மீது ரூ. 5000 கோடி நஷ்ட ஈடு கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை நோட்டீஸ்
இதற்கிடையே, அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தில் (எஃப்.இ.எம்.ஏ) முறைகேடு செய்ததாக கூறி என்.டி.டிவிக்கு அமலாக்கத் துறை நேற்று முன்தினம் (அக்டோபர் 17) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்.டி.டிவி உரிமையாளர் பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய், மூத்த ஊடகவியலாளர் விக்ரம் சந்திரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எந்த வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள என்.டி.டிவி தரப்பு, “நியாயமான மற்றும் சுதந்திரமான தன்மைக்காக என்.டி.டிவி இலக்காக்கப்பட்டுள்ளது. மற்ற ஊடகங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது” என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: