வியாழன், 18 அக்டோபர், 2018

கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது

கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைதுதினத்தந்தி: சபரிமலைக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்கள்.


இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வருகிற 22-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.

இதனால் முதல் நாளே 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிக அளவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்று அதிகாலையில் இருந்தே சபரிமலைக்கு செல்லும் மலை அடிவாரமான நிலக்கல்லுக்கு இளம் பெண்கள் பல்வேறு வாகனங்களில் வரத் தொடங்கினர்.

இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் பம்பை மற்றும் சபரிமலை செல்லும் மலைப்பாதை நுழைவிடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

நிலக்கல்லில் ஏற்கனவே சபரிமலை ஆச்சார சம்ரக்‌ஷணா சமிதி, அய்யப்ப தர்மசேனா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்து இருந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்தே கூடாரம் அமைத்து நிலக்கல் அடிவாரத்தில் தங்கினர். வழி நெடுக சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு அய்யப்ப பக்தர்கள் நிலக்கல்லில் குவிந்தனர்.

நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் அப்பகுதிக்கு வந்த அனைத்து வாகனங்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இளம் பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் இறக்கிவிட்டனர்.

இதேபோல் செய்தி சேகரிக்கவும், படம் பிடிக்கவும் சென்ற பத்திரிகை மற்றும் டி.வி. சேனல் செய்தியாளர் களையும் அய்யப்ப பக்தர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களை முற்றுகையிட்டு தாக்கி வெளியேற்றினர். கேரள அரசு பஸ்சில் வந்த ஆங்கில இணையதளத்தின் பெண் நிருபரையும் கீழே இறக்கிவிட்டனர்.

ரிபப்ளிக் டி.வி.யின் பூஜா பிரசன்னா, நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா எஸ்.பாலன், என்.டி.டி.வி. நிருபர் ஸ்னேகா மேரி கோஷி, கேமரா மேன் எஸ்.பி. பாபு, சி.என்.என்.-நியூஸ் 18 மற்றும் ஆஜ்தக் டி.வி. செய்தியாளர்கள் மற்றும் மலையாள செய்தி சேனல்களின் சில நிருபர்களும் அய்யப்ப பக்தர்களால் தாக்கப்பட்டனர்.

அப்போது குறைந்த அளவிலான போலீசாரே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெண் பக்தர்களையும் செய்தியாளர்களையும் செல்ல விடாமல் தொடர்ந்து வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் சரமாரி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

இதையடுத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய அய்யப்ப பக்தர்களை போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், அவர்கள் அமைத்து இருந்த கூடாரங்களையும் அகற்றி வீசியெறிந்தனர். இதையடுத்து, நாலாபுறமும் சிதறி ஓடிய அய்யப்ப பக்தர்கள் அப்பகுதியில் இருந்த காட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். போலீஸ் தடியடியில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டகாரர்களும், கல்வீச்சில் ஏராளமான போலீசாரும் காயம் அடைந்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நிலக்கல்லில் பாதுகாப்பு அளிக்க 100 பெண் போலீசார் உள்பட மேலும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் நிலக்கல் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்கள் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நிலக்கல் திரும்பினர்.

சபரிமலை சுற்று வட்டாரப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவானது, இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

மேலும், சபரிமலையின் 30 கி.மீ. சுற்றளவு பகுதியில் எந்த ஒரு போராட்டம் நடத்தவும் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா, இதுபற்றி கூறுகையில், “சட்டத்தை யார் கையில் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை தடுத்து நிறுத்தும் பக்தர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்” என்று எச்சரித்தார்.

அதேநேரம் சபரிமலை கோவில் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் ஈஸ்வரர் என்பவர் தனது 90 வயது பாட்டி மற்றும் 100 அய்யப்ப பக்தர்களுடன் பல்வேறு வாகனங்களில் நிலக்கல் சென்றார். அவர்களால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று கருதிய போலீசார் அவர்களை வழியிலேயே இறக்கிவிட்டனர்.

இந்த நிலையில், ஆலப்புழா மாவட்டம் அருத்துங்கல் என்ற இடத்தைச் சேர்ந்த லிபி என்ற பெண் சபரிமலை செல்வதற்காக பத்தனம் திட்டா நகர பஸ்நிலையத்துக்கு வந்தார். பஸ்சில் ஏற முயன்ற அவரை அய்யப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கிருந்து போலீசார் அந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.

போலீசாரின் விசாரணையில் லிபி கிறிஸ்தவ பெண் என்பதும், நாத்திக கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் 41 நாள் விரதம் மேற்கொள்ளாமல் சபரிமலை செல்வதாக அவர் கூறியதால் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் லிபியை வேறொரு பகுதியில் கொண்டு போய்விட்டு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சென்னையைச் சேர்ந்த 40 வயது பஞ்சவர்ணம் என்ற பெண் மற்றும் இதழியல் துறை மாணவிகள் சிலர் கேரள அரசு பஸ்சில் நிலக்கல் சென்றனர். அவர்களை சபரிமலை ஆச்சார சம்ரக்‌ஷணா சமிதியினர் பஸ்சில் இருந்து இறக்கிவிட்டனர்.

சிறிதுநேரம் கழித்து பஞ்சவர்ணம் தனது கணவருடன் மீண்டும் நிலக்கல்லுக்கு வந்தார். அப்போதும் அவர்கள் இருவரையும் அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் பத்தனம் திட்டாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேநேரம், அய்யப்ப பக்தர்கள் பலர் நிலக்கல்லில் காந்திய வழியில் அமைதி போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து அய்யப்ப சரண கோஷங்களை எழுப்பினர். இந்த தர்ணா போராட்டத்தில் காங்கிரசாரும் கலந்து கொண்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு சபரிமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பல நூறு ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்படும் சம்பிரதாயத்தை மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அழிக்க முயற்சிக்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

பம்பையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையில் பந்தளம் மகாராஜா குடும்ப கட்டிடம் முன்பு சரண கோஷ போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி ராகுல் ஈஸ்வரர், அவருடைய தாயார் மல்லிகா நம்பூதிரி, பாட்டி தேவகி மகேஸ்வரரூ கண்டருரூ, முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன், இந்து பார்லிமெண்ட் அமைப்பை சேர்ந்த ஹரிநாராயணன், மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 24 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

ஆனால் அதே இடத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் சுரேந்திரன், ரமேஷ், சோபா உள்பட ஏராளமானோர் அமர்ந்து சரண கோஷம் எழுப்பியபடி போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் போலீஸ்காரர்கள் பிரவீன், ராகுல்ராஜ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கொச்சியை சேர்ந்த சரோஜம் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேர் என 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் 2 போலீஸ் வாகனங்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்தநிலையில் கேரள மாநிலம் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் சபரிமலை சன்னிதானத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 9 பெண் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்றைய கூட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட 4 பெண் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற பெண் அதிகாரிகளுக்கு பதிலாக அந்த துறையின் வேறு ஆண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: