வெள்ளி, 19 அக்டோபர், 2018

ராகுலிடம் கூட்டணியில் சேர கமல் விருப்பம் தெரிவித்தார் .. திருநாவுக்கரசர் பேட்டி!

tamilthehindu : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுலிடம் கூறியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கமல் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு, கூட்டணிக்குள் வர விரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கமல்ஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
ரஜினியின் பின்புலத்தில் பாஜக இருப்பதாக ஆரம்பம் முதல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்றவாறு பாஜகவின் கருத்துகளை ஒட்டியே ரஜினியின் கருத்துகளும் இருந்து வருகின்றன.
அதே நேரத்தில், ரஜினிக்கு நேரெதிர் திசையில் காங்கிரஸோடு நட்பு பாராட்டி வருகிறார் கமல்ஹாசன். கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது தமிழக அரசியல் தலைவர்களில் கமல்ஹாசன் மட்டும் கலந்துகொண்டார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, 2-வது முறையாக கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதோடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல்ஹாசன் செயல்படப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ராகுலிடம் கூறியிருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: