சனி, 20 அக்டோபர், 2018

கோடீஸ்வரர்கள் 50 ஆண்டுகளுக்குபின் கிடைத்த இழப்பீட்டு தொகை அருணாச்சலப் பிரதேச கிராம மக்கள்

tamilthehindu : அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வெஸ்ட் காமெங் மாவட்ட மக்கள் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளனர்.
துப்கேன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ஏதும் பங்கேற்கவில்லை, மாறாக, 50 ஆண்டுகளுக்குமுன் ராணுவத்துக்கு வழங்கிய நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது.< அருணாச்சலப்பிரதேசம், வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் உள்ள துக்பென் கிராமத்தில் உள்ள பிரேம் தோர்ஜி கிரிமேவுக்கு கோடிக்கணக்கில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், சிங்சாங் கிராமத்தைச் சேர்ந்த புன்ஷோ காவா, காண்டு குளோ ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் இழப்பீடு தரப்பட்டது.


இதில் புன்ஷோவுக்கு ரூ.6.21 கோடியும், காண்டுவுக்கு ரூ.5.98 கோடியும், பிரேம் டோர்ஜி கிர்மேவுக்கு ரூ.6.31 கோடியும் வழங்கப்பட்டது. இதுபோல் பல்வேறு தரப்பினரும் கோடிக்கணக்கிலும், சிலருக்கு லட்சக்கணக்கிலும் இழப்பீடுகள் நேற்று வழங்கப்பட்டன.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா போர் நடந்த போது அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள கிராமங்களை ஆக்கிரமித்த இந்திய ராணுவம் அதில் ராணுவ முகாம்களை அமைத்தது. இதில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் ராணுவம் வசம் சென்றன. ஆனால், நிலத்தை இழந்தவர்களுக்கு ராணுவம் தரப்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இழப்பீடு தரப்படவில்லை.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் மணிப்பூர்,அருணாச்சலப்பிரதேச கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 152 குடும்பங்களுக்கு ரூ. 54 கோடியும், செப்டம்பர் மாதம் பல்வேறு குடும்பங்களுக்கு ரூ. 158 கோடியும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தவாங் மாவட்டத்தைச் சேர்ந்த பூம்ஜா கிராமத்தைச் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு ரூ.40.80 கோடியும், 29 குடும்பங்களுக்கு தலா ரூ.1.09 கோடியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம், வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் இரு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய ரூ.38 கோடி இழப்பீடாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீமா கண்டு, உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்று இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
வெஸ்ட் காமெங் மாவட்டத்தின் துணை ஆணையர் சோனல் ஸ்வரூப் கூறுகையில், வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் நேற்று இரு இடங்களில் நடந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ. 24.56 கோடியும், துபென் கிராமத்தைச் சேர்ந்த 7 பேருக்கு ரூ.13.17 கோடியும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: